பிலாலே! இது என்ன தவறான செய்கை?
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
==========================
மாதம் : 4
தொடர்.........29
6. பிலாலே! இது என்ன
தவறான செய்கை? :
==============================
நபி (ஸல்) அவர்கள் இறந்து போன அந்த நாளில், அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்பு பிலால் (ரலி) அவர்கள் "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்" என தொழுகைக்காக பாங்கு சொன்னபோது மக்கள் அனைவரும் கடுமையாக அழுதார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பிறகு மற்றொரு தொழுகைக்காக "பிலாலே! நீங்கள் பாங்கு சொல்லுங்கள்" என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்பொழுது பிலால் (ரலி) அவர்கள், "உங்களோடு மட்டுமே நான் இருக்க வேண்டும் என்பதற்காக என்னை நீங்கள் விடுதலை செய்திருந்தால், அவ்வாறே நான் உங்களுடன் இருக்கின்றேன்;
அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் விடுதலை செய்து இருந்தால் என்னை நீங்கள் சுதந்திரமாக விட்டு விடுங்கள்; நீங்கள் என்னை யாருக்காக விடுதலை செய்தீர்களோ அவனுக்காக நான் வாழ்ந்து விடுகிறேன்" எனக் கூறினார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்விற்காகவே உங்களை நான் விடுதலை செய்தேன்" என்று கூறினார்கள்.
பிலால் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு வேறு யாருக்காகவும் நான் பாங்கு சொல்வதாக இல்லை ; என்னை கோபித்துக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அது உங்கள் விருப்பம்" எனக் கூறினார்கள்.
பிலால் (ரலி) அவர்கள் சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று இருந்தார்கள்; பள்ளிவாசலுக்கு உள்ளிருந்து ஷாம் நகரத்திற்குச் செல்லும் ஒரு குழுவினர் வெளியே வந்தார்கள்; அவர்களோடு சேர்ந்து அங்கே சென்று விட்டார்கள்.
ஷாம் நகரத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருந்தார்கள்; அங்கே நபிகளாரை நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டார்கள்; அப்பொழுது அவர்கள், "பிலாலே! இது என்ன பிடிவாதம்? என்னை நீங்கள் எப்பொழுது ஜியாரத்து - சந்திக்க வருவீர்கள்?" எனக் கேட்டார்கள்.
பிலால் (ரலி) அவர்கள் திடீரென எழுந்து கனவை நினைத்து வருத்தப்பட்டார்கள்; உடனே மதீனாவிற்கு புறப்பட்டு ஸஹருடைய நேரத்தில் வந்தடைந்தார்கள்; நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகில் வந்து நின்று நீண்ட நேரம் மெய் மறந்து அழுது கொண்டு இருந்தார்கள்.
ஹஸன் ஹுசைன் (ரலி) அவர்கள் இருவரும் அந்த இடத்திற்கு வந்தார்கள்; அவர்களைக் கண்ட பிலால் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் கட்டி அணைத்து முத்தமிட்டார்கள்.
அவ்விருவரும் பிலால் (ரலி) அவர்களிடம், " இந்த ஸஹருடைய நேரத்தில் நீங்கள் பாங்கு சொல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" எனக் கேட்டுக்கொண்டார்கள்.
பிலால் (ரலி) அவர்கள் பள்ளிவாசலினுடைய மாடியின் மீது ஏறி, பாங்கு மேடையில் நின்று "அல்லாஹு அக்பர்" என கூறியதுதான் தாமதம்; மதீனாவே உற்சாகத்தில் விழிப்படைந்தது.
"அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்" எனக் கூறியதும் மேலும் மக்கள் உணர்ச்சி பொங்கி பள்ளிவாசலை நோக்கி வரத் தொடங்கினார்கள்.
"அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்" என சொன்னதும் பெண்கள் உட்பட அனைவரும் தங்களுடைய வீடுகளில் இருந்து புறப்பட்டு பள்ளிவாசலை நோக்கி விரைந்து வந்தார்கள்;
பிலாலை பார்த்ததும், பிலாலின் குரலை கேட்டதும், நபிகள் நாயகத்தின் காலத்தில் இருந்தது போன்ற ஓரு நினைவு மேலோங்கி மக்கள் அனைவரும் அழுதார்கள்; அன்று மக்கள் அழுதது போன்று வேறொரு நாளில் அழுது இருக்க மாட்டார்கள்.
(நாகூர் ஹனீஃபா அவர்கள் பாடிய, "பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை" எனும் பாடலை கேட்டுப் பாருங்கள்; இந்த வரலாற்றை அவர் பாடலாகப் பதிவு செய்திருக்கிறார்.)
நூல்: ஸியரு அஃலாமு நுபலா, உஸுதுல் காபா
.
.
.
.
.
தொடரும்......
Comments
Post a Comment