100 அடி அடிப்பேன்

100 அடி அடிப்பேன் :
====================

وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِب بِّهِ وَلَا تَحْنَثْ ۗ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا ۚ نِّعْمَ الْعَبْدُ ۖ إِنَّهُ أَوَّابٌ 

(என்வே, "நூறு குச்சிகள் கொண்ட ) ஒரு கட்டை நீர் உமது கையில் எடுத்து அதைக் கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக! நீர் சத்தியத்தை முறிக்க வேண்டாம்" (என்று நாம் கூறினோம்;) நிச்சயமாக, அவரை நாம் பொறுமையாளராகப் பெற்றுக் கொண்டோம்; அவர் ஒரு நல்ல அடியார்; நிச்சயமாக அவர் (எந்நேரமும் அல்லாஹ்வின்பால்) மீள்பவராக இருக்கிறார். 38 : 41

ஒரு நாள் ரஹீமா அம்மையார் அவர்கள் வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வீட்டிற்குள் நுழைந்தார்கள். அது அய்யூப் (அலை) அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. 

எனவே கோபத்தின் வெளிப்பாடாக  "நான் குணமான பிறகு உன்னை நூறு கசையடி அடிப்பேன்" என்று சத்தியம் செய்திருந்தார்கள். 

பொதுவாக இன்றுள்ள நமது இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணத்திற்கு முன்பு ஒருவர் விபச்சாரம் செய்து விட்டால் அவருக்கு  100 கசையடி கொடுக்க வேண்டும் என்பது சட்டமாகும். 

ஆனால் ரஹீமா அம்மையார் அவர்கள் தாமதமாக வந்ததற்கே அய்யூப் (அலை) அவர்கள், அவ்வளவு கடுமையான தண்டனையை வழங்குவதாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்லிவிட்டார்கள். 

இந்நிலையில் அல்லாஹ் அவருக்கு நிவாரணத்தைக் கொடுத்தபோது, ஒரு பிடி புல்லை (அல்லது தொடப்பம், அல்லது ஈச்சம் குழையை) கையில் எடுத்து அதன்மூலம் அடிக்குப்படி சட்டத்தை எளிமைப்படுத்தி அல்லாஹ் கூறினான். 

அய்யூப் (அலை) அவர்கள் அதனை எடுத்து தம் மனைவியை ஓர் அடி மட்டும் அடித்தார். அந்த ஓர் அடி நூறு அடிகள் அடித்ததற்குச் சமமாக ஆனது. அதனால், அவர் தாம் செய்த சத்தியத்தை முறிக்காமல் அதை நிறைவேற்றியவராக ஆகிவிட்டார்.

(நபிமார்கள் தாம் சொன்ன வார்த்தையிலிருந்து பின்வாங்குவதும், தாம் செய்த சத்தியத்திலிருந்து பின்வாங்குவதும் மரியாதை குறைவான செயல் என அல்லாஹ் கருதுகிறான் போலும்.)

இது அல்லாஹ்வை அஞ்சி, அவனுக்கு வழிப்பட்டவருக்கு அவன் கொடுக்கின்ற விடுதலையாகும். 

குறிப்பாக, இது பொறுமையாளரான, நன்மையை நாடக்கூடிய, துன்பத்தைச் சகித்துக் கொள்ளக்கூடிய, வாய்மையாளரான, நல்லவரான, நல்வழிபெற்ற அவருடைய மனைவிக்கு அல்லாஹ் வழங்கிய சலுகையாகும்.

இதனால்தான், அல்லாஹ் சலுகையை முன்னால் கூறிவிட்டு அதன் காரணத்தைப் பிறகு கூறுகின்றான்: 

"நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். (அவர்) நல்லடியார்; நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்."

அய்யூப் அலை அவர்களின் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம் நான்கு. 

1. நிராசை அடையாமல், மனதைத் தளர விடாமல் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

2. வாழ்வில் நஷ்டம் ஏற்பட்டால் அதை பெரிது படுத்தாமல் அல்லாஹ்விடம் அதற்கான பிரதிபலனை கேட்க வேண்டும். 
اللَّهُمَّ أْجُرْنِي في مُصِيبَتِي، وأَخْلِفْ لي خَيْرًا مِنْها،
இறைவா! எனக்கு நேர்ந்த சிரமங்களுக்கு நற்கூலியை வழங்குவாயாக! மேலும் எனக்கு நேர்ந்த சிரமத்திற்கு பகரமாக சிறந்ததையும் வழங்குவாயாக! என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். 

3. பாவங்கள் செய்ததின் காரணமாக தான் ஒருவருக்கு கடுமையான நோய்கள் ஏற்படுகிறது என்று எவரையும் நாம் நினைத்து விடக்கூடாது.

4. எந்த சூழ்நிலையிலும் மனைவியை விட்டும் பிரிவதோ ஒதுங்கி வாழ்வதோ தலாக் போன்ற மன விடுதலை வழங்குவதோ கூடாது. இயன்றவரை மனைவியோடு ஒத்திசைந்து வாழ வேண்டும்.  

மனைவி மட்டுமே சொர்க்கத்திலும் நம்முடன் இருப்பார். நம்முடன் நம் சொர்க்கத்தில் நமது பிள்ளைகளோ நமது பெற்றோரோ இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்