காலடியில் உயிர் நீர்
காலடியில் உயிர் நீர் :
ஒரு நாள் காலையில் வழமை போல் மலம் ஜலம் கழிப்பதற்காக அய்யூப் (அலை) அவர்களை ரஹீமா அம்மையார் அவர்கள் அழைத்துச் சென்று வயல் வெளியின் மறைவான பகுதியில் விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜிப்ரயீல் அலை அவர்கள் வந்து,
ارْكُضْ بِرِجْلِكَ ۖ هَٰذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ (42)
நபியே! உமது காலினால் பூமியை நீர் தட்டுவீராக! அப்போது அங்கு நீரூற்று ஒன்று வெளிப்படும்; இது குளிக்கும் குளிர்ந்த நீரும், அருந்தும் நீரும் ஆகும்" என்று கூறினார்.
இஸ்மாயில் (அலை) அவர்களின் கால் உராய்வில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வெளிவந்தது போல், நபி மூஸா (அலை) அவர்கள் தம் கைத்தடியால் பாறையில் அடித்ததும் தண்ணீர் வெளிவந்தது போல், அய்யூப் (அலை) அவர்கள் தம் கால்களால் லேசாக தட்டியதும் தண்ணீர் வெளிவந்தது.
அதாவது, "உமது இரு முன்னங்கால்களாலும் பூமியை தட்டுங்கள்" என்றான். கடுமையான வியாதியில் இருந்ததால் எழுந்து நின்று பூமியை ஓங்கி உதைக்கவோ, மிதிக்கவோ சக்தி இல்லை. அதனால்தான் அதனை அறிந்த அல்லாஹ், "மெதுவாக தட்டுங்கள்" என்றான்.
இறைவன் நினைத்திருந்தால தண்ணீர் தானாக பீரிட்டு வெளியேறி இருக்கும். ஆனால் அந்த நிலையிலும் ஒர் உழைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் "முன்னங்கால்களால் தட்டுங்கள்" என்றான்.
(இப்படித்தான் இறைவன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மரியம் (அலை) அவர்களிடம் பேரித்த மரத்தின் கீற்றுகளை பிடித்து அசைக்கும் படியும் அதன் காரணமாக விழும் பழங்களை சாப்பிடும் படியும் கூறினான். காரணம் அங்கேயும் சிறு உழைப்பு இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் நோக்கம்.
وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (19:25)
அங்கே இரண்டு நீரூற்றுகள் வெளிவந்தது; அந்த இரண்டையும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அணை கட்டினார்கள். ஒரு ஊற்றில் மூழ்கி குளித்தார்கள் மற்றொரு ஊற்றில் இருந்து தண்ணீரை அள்ளி குடித்தார்கள்.
அணைக்கட்டில் இருந்து வெளியே வந்ததும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஆடைகளை அணிந்து முன்பை விட அழகாக காட்சியளித்தார்கள்.
பின்னர் ரஹீமா அம்மையார் அவர்கள் தம் கணவரை விட்டுச் சென்ற இடத்தில் வந்து பார்த்தார்கள் அவரை காணவில்லை.
அங்கே நின்றிருந்த அய்யூப் (அலை) அவர்களிடமே, "எனது கணவரை பார்த்தீர்களா? உங்களைப் பார்த்தால் என் கணவர் இளமையில் இருந்தது போன்று தெரிகிறதே? எனது கணவரை பார்த்தீர்களா?" என்று கேட்டார்கள்.
அய்யூப் (அலை) அவர்கள் நடந்ததை எடுத்துச் சொன்னார்கள். ரஹீமா அம்மையார் அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி சொல்லி ஸஜிதாவில் விழுந்தார்கள்.
وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ
அவர் (இழந்த) குடும்பத்தாரையும், அவர்களுடன் அவர்களைப் போன்ற இன்னொரு பங்கையும், நமது அருளாக அவருக்கு நாம் வழங்கினோம்; அறிவுடையோருக்கு இது ஒரு நல்லுபதேசம் ஆகும். 38 : 41/ 21:84
மேற்கண்ட கருத்துகளை உள்ளடக்கிய இரு ஹதீஸை இங்கே குறிப்பிடுகிறேன்.
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளதாவது: அல்லாஹ் சொர்க்க ஆடை ஒன்றை அவருக்கு அணிவித்தான். அப்போது அய்யூப் நபி அவர்கள் ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார்கள். அச்சமயம், அவருடைய மனைவி வந்தார். அவர்தம் கணவரை (அடையா ளம்) அறியவில்லை.
எனவே அவர், “அல்லாஹ்வின் அடியாரே! சோதனைக்குள்ளாக் கப்பட்டு இங்கு இருந்தவர் எங்கே சென்று விட்டார்? நாய்களோ ஓநாய்களோ அவரை இழுத்துச் சென்றுவிட்டதா?" என்று வினவினார்.
அவர் அவரிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார். "கேடே! நான்தான் அய்யூப்" என்று அவர் பதிலளித்தார். அதைக்கேட்ட அவர், "அல்லாஹ்வின் அடியாரே! நீர் என்னைக் கேலிசெய் கின்றீரா?” என்று வினவினார். "அடக்கேடே! நான்தான் அய்யூப், அல்லாஹ் என் உடலை (ஆரோக்கியமாக)த் திருப்பித் தந்து விட்டான்" என்று அவர் பதிலளித்தார்.
அவருடைய பொருட்செல்வங்களையும் குழந்தைச் செல்வங்களையும் அப்படியே திருப்பிக்கொடுத்ததோடு, அவர்களுடன் அவர்களைப் போன்றதொரு பங்கையும் திருப்பிக்கொடுத்தான்.
நூல் : தஃப்ஸீர் இப்னு ஜரீர், இப்னு ஹிப்பான்.
வஹப் பின் முநப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: அல்லாஹ் இவ்வாறு அவருக்குத் தூது அறிவித்தான்: "நான் உமக்கு உம்முடைய பொருட்செல்வங்களையும் குழந்தைச் செல்வங் களையும் திருப்பிக்கொடுத்ததோடு, அவர்களுடன் அவர்களைப் போன்றதொரு பங்கையும் திருப்பிக்கொடுத்துவிட்டேன்;
எனவே, நீர் இந்தத் தண்ணீரில் குளிப்பீராக! ஏனென்றால், அதில் உமக்கான நிவாரணம் இருக்கிறது; மேலும், உம்முடைய தோழர்களை உம்மோடு நெருக்கமாக்கிக் கொள்வீராக! அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! உம் விசயத்தில் அவர்கள் எனக்கு மாறுசெய்துவிட்டார்கள்."
நூல்: இப்னு அபீஹாத்திம்
Comments
Post a Comment