யோசித்து முடிவு எடுங்கள்
யோசித்து முடிவு எடுங்கள்
இன்று வாழும் மனிதர்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் அல்லது தெரியாமல் தடுமாறுகிறார்கள். ஆனால் இஸ்லாம் எல்லா வகையான மன குழப்பங்களுக்கும் தெளிவான முடிவை உடனே சொல்லும் பழக்கத்தை கொண்டுள்ளது.
பெரும்பாலான மனிதர்கள் பிரச்சனை சிறியதாக இருக்கும்போதே அதற்கு தீர்வு காண முயற்சிப்பதில்லை. அது நன்கு வளர்ந்து, முத்தி, பெரும் பிரச்சனையான பிறகுதான் முடிவு காண யோசிக்கிறார்கள்.
அன்று ஒரே தீர்வைத் தவிர வேறு வழியே இல்லை எனும் தடத்தை அந்த பிரச்சனை பதித்திருக்கும். அதை மட்டுமே செயல்படுத்தும் நிலை உருவாகி இருக்கும். அச்சமயத்தில் எடுக்கும் முடிவு நமக்கு நஷ்டமாக இருந்தாலும் பிரச்சனை முடிந்தால் போதுமென்ற மனநிலையே ஓங்கி நிற்கும். இவ்வாறான நிலைக்கு நாம் ஆளாகக் கூடாது.
ஒரு சிரமத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமே தவிர தற்காலிகத் தீர்வு காண விரும்பக் கூடாது. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் தற்காலிகத் தீர்வையே எதிர்கொள்கிறார்கள். அதனால் ஒரு பிரச்சனைக்கு பலமுறை நேரம் செலவழித்து, பொருள் செலவழித்து, கெட்ட பெயரை சம்பாதித்து மன அழுத்தத்திற்குள்ளாகும் நிலை உருவாகிறது. எனவே எப்பொழுதும் தற்காலிகத் தீர்வை தேர்வு செய்யாதீர்.
ஒரு பிரச்சனை ஏற்பட்ட உடனேயே அதற்கு ஒரு தீர்வு தோன்றியிருக்கும். அதுவே சரி என நாம் செயல்படுத்திட முனைவோம். அவ்வாறின்றி இரண்டாவது மூன்றாவது யோசனைகள் என்ன என்று யோசிக்க வேண்டும். அதாவது ஒரு பிரச்சனைக்கு மூன்று, நான்கு முடிவுகளை யோசிக்கவேண்டும். பின்னர் அதில் எது 'பெட்டரோ' அதை செயல் வடிவம் கொடுக்க வேண்டும். இதுவே சரியான முடிவாக இருக்கும்.
விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு முடிவு காண நினைக்கும் போதுதான் சரியான முடிவுகளை தேர்வு செய்ய முடியும். எனவே நிதானம் தேவை. ஏனெனில் நாம் எடுக்கும் முடிவுகளே நமக்கு வெற்றியைத் தரும். சில சமயம் தோல்வியவும் தரும்.
ஃபிர்அவ்ன் , "நான் தான் கடவுள் "என முழங்கிய போது மூசா நபி உடனே "நீ இறைவன் இல்லை, உன்னையும் என்னையும் படைத்தவன் தான் இறைவன்" என உடனே நல்ல முடிவை கூறினார்.
ஃபிர்அவ்ன் ஆசியா அம்மையாரின் ஒவ்வொரு குழந்தை யையும் நெருப்பிலிடும் போது அமைதியாக இருந்தார். நான்காவது குழந்தையை நெருப்பில் வீசிய பிறகு, இனி நெருப்பில் எறிவதற்கு தன்னைத் தவிர வேறெவரும் இல்லை என்கிற நிலை உருவானபோது , "என் இறைவன் எனக்கு சொர்க்கத்தில் நல்ல வீட்டை தருவான் 66:11 " உலகின் அற்ப இன்பங்களை நான் விரும்பவில்லை என ஓங்கி முழங்கினார்கள்.
எனவே நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக நல்ல தீர்வுகளை தேர்வுசெய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உறுதுணையாக இருப்பானாக! ஆமீன்
அன்புடன்
உங்கள்
கலீலுர் ரஹ்மான்
15/2/2021
Comments
Post a Comment