எழில்மிகு காயல்பட்டணம்

இந்தியத் திருநாட்டின் " குட்டி மக்கா"
எழில்மிகு காயல்பட்டணம் கூறும் வரலாறு :
==================================
"மலபார்' என்பது கேரளப் பகுதியைக் குறிக்கும் ஒரு வழக்குச் சொல் என்பதாக நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் 'மஃபர்' என்றால் என்ன? என்பது குறித்து நம்மில் அநேகருக்குத் தெரியாது. 

இந்த 'மஃபர்' என்ற பெயரை அக்காலத்தில் அரேபிய வர்த்தகர்கள், பழங்கால பாண்டிய, சோழ ராஜ்யங்களின் கீழ்த்திசைப் பகுதிக்கு வழங்கியிருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. 'மஃபர்' என்ற பதத்திற்கு 'வழி' அல்லது 'வாயில்துறை' என்று பொருள்படும். 

கன்னியாகுமரி முனையிலிருந்து நெல்லூர் வரையிலுள்ள கடற்கரையோரப் பிரதேசத்தையே 'மஃபர்' என்று பாரசீகச் சரித்திராசிரியர் ரஷீதுத்தீன் குறிப்பிடுகிறார்.

ஆரம்பமாக ஒன்பதாவது நூற்றாண்டில் அரேபிய முஸ்லிம் வணிகப் பெருமக்கள் இந்த 'மஃபர்' கரை யோரங்களிலே குடியேறியதாகவும், காலப்போக்கில் இந்தியக் கீழ்த்திசைப் பகுதியிலுள்ள காயல்பட்டணத்திலும் இலங்கைத் தீவிலுமாக பரவி வாழ்ந்து வந்ததாகவும்தெரிய வருகின்றது. 

தமிழ் நாட்டின் தென்பாண்டிச் சீமை திருநெல்வேலி மாவட்டத்தில், காயல் பட்டணம் சரித்திரப் புகழும், சமயச் சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற வணிக வேந்தர்களின் உறைவிடமாகத் திகழ்ந்துகொண்டிருக்கின்றது. 

கிரேக்க வர்த்தகக் கோஷ்டிகளையடுத்து, தெற்கு அரேபியாவிலிருந்து அரபுகள் பெருமளவில் குடியேறி, அங்குள்ள மக்களோடு இரண்டறக் கலந்துறவாடி 'மஃபர்' பகுதியின் நிரந்தர பிரஜைகளாக வாழத் தலைப்பட்டனர். 

அவ்வாறு காயல் பகுதியில் குடியேறி, அங்குள்ள ஸ்தல மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, பெண் எடுத்து, அங்கேயே தங்கி, வாணிபத்தோடு இஸ்லாமியப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்கள். ஓங்கு புகழ் காயல் வாசிகள் "லெப்பை" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படலாயினர். 

இன்று இலங்கையில் குடியேறியிருக்கும் 'சோனக முஸ்லிம்கள் என்பவர்களும் காயல்பட்டணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களே என்று இலங்கையின் பிரசித்தி பெற்ற நீதிபதி திரு 'கேஸி சிட்டி என்பார், ஒரு கடிதக் குறிப்பின் மூலம் காயல்பட்டணத்தின் பண்டைய சிறப்பினை விளக்கிக் காட்டியுள்ளார்.

அன்றைய 'மஃபர்' பகுதியின் முதல் தர துறைமுகமாக பழையகாயல் பிரசித்தியடைந்திருந்தது. 'ஏடன்' (அதன்), ஹோர்முஸ், கிஸ் மற்றும் அரேபியப் பிரதேசங்களிலிருந்து குதிரைகளையும் மற்றும் உயர்ந்த பல பொருள்களையும் கப்பல் மூலம் இந்தப் பழைய காயல் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, விரிவான அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

நாட்டின பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும் வியாபாரிகள் காயல்பட்டணத்திற்குத் திரண்டு வந்து அரேபிய நாடுகள், மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியான பொருட்களை, குதிரைகளை ஏராளமாக வாங்கிப் போந்தனர்.

கி. பி. 1292 - 'மார்க்கோ போலோ' என்ற புகழ்பெற்ற உலகம் சுற்றிய வரலாற்று வல்லுனர், புகழேணியின் உச்ச நிலையில் ஏற்றம் பெற்றிருந்த காயல்பட்டணத்திற்கு விஜயம் செய்து காயல்பதியின் பெருமை குறித்தும், அங்கு நடைபெற்ற வர்த்தகம் குறித்தும் சிலாகித்து எழுதியுள்ள நாளேட்டுக் குறிப்பு இன்றளவும் ஹைதராபாத் 'சாலார்ஜங்' மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

காயல்பட்டணம் கடற்கரையில் பழமையான பல பண்டகச் சாலைகளையும், கோட்டை கொத்தளங்களையும், அவற்றின் சின்னங்களையும் இன்றைக்கும் காணலாம். 

காயல் கடற் கரையோர மணற் பரப்பில் சீனாச் சட்டியின் உடைவுச் சிதரல்களும், ஆங்காங்கே துருப்பிடித்துக் கிடக்கும் இரும்புத் துண்டுகளும் காணப்படுகின்றன. பழங்கால மண் பாண்டங்களும், ஆயுதங்களும், நாணயங்களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. எண்ண முடியாத பல கல்வெட்டுச் சாதனங்கள், சரித்திரச் சான்றுகள், பழமையான மஸ்ஜிதுகள் ஏராளமாக உள்ளன.

உயர்ந்த ரக அரபுக் குதிரைகள் ஆயிரக் கணக்கில் அரேபியாவிலிருந்து காயல் கரையில் இறக்குமதியாகி, நல்ல விலைக்கு விற்கப்பட்டு வந்தன என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். 

அந்த வரிசையில் குதிரைகளை விற்க வந்த கோஷ்டியில் ஹஜ்ரத் சையத் ஜமாலுத்தீன் என்ற மாவீரர் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தார்கள். 

அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களின் தவத்திருப் பேரர் ஷஹீதே கர்பலா சையிதினா ஹஜ்ரத் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் வழித் தோன்றலாக பெருமானார் (ஸல்) அவர்களின் 21-வது தலைமுறையாக - உதித்த உத்தமப் பெருமகனார் தான் ஹஜ்ரத் சையத் ஜமாலுத்தீன் அவர்கள்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் எகிப்து நாட்டை ஆட்சி புரிந்த கலீஃபாவின் கொடுமையைத் தாளமாட்டாமல், ஹிந்துஸ்தானுக்கு ஐந்து கப்பல்கள் மூலம் புறப்பட்டு வந்தவர்களில் ஹஜ்ரத் சையத் ஜமாலுத்தீன் அவர்கள் தங்கள் குடும்ப சகிதமாக கி.பி. 1284-ல் காயல்பதியில் காலடி வைத்தார்கள்.

அப்பொழுது சோழ பாண்டிய நாடுகளின் மாமன்னராக விளங்கி வந்த சுந்தர பாண்டியத் தேவர் எகிப்தி லிருந்து காயல் பட்டணத்திற்கு அபயம் தேடி வந்துள்ள ஹஜ்ரத் ஜமாலுத்தீன் அவர்களைப் பற்றிய தகவலறிந்து, அம்மகானுக்கு சகலவித வசதிகளையும் அளித்து, புனர் வாழ்விற்கான உதவிகள் அத்தனையும் தந்து உதவினார். 

அறபு மக்களின் அறிவு தீட்சண்யத்தையும், நிர்வாகத் திறமையையும், ஒழுக்கப் பண்பாட்டையும். வாய்மையையும், இறை அச்சத்தையும் அனுபவ ரீதியாக அறிந்து மகிழ்ந்த பாண்டிய மன்னர், அகதிகளாக குடியேறிய அறபுகளுக்கு நேசக்கரம் நீட்டி, பாசம் செலுத்தி பல வகையிலும் உதவி வந்தார்.

அதுமட்டுமின்றி ஹஜ்ரத் சையத் ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் ஹஜ்ரத் தகீயுத்தீன் அவர்களை பாண்டிய மன்னரின் பிரதம அமைச்சராக நியமித்துச் சிறப்பித்த சம்பவம், இந்து - முஸ்லிம் பரஸ்பர நல்லுறவிற்கு தொன்று தொட்டு காயல்பட்டணம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாய் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து பெருமிதம் பூணுகிறோம். 

பாண்டிய ராஜியத்தின் புகழுக்குக் காரணமாயிருந்தவரும், மன்னரின் இதயத்தை தமது திறன் மிக்க நிர்வாகத்தால் கவர்ந்தவருமான "மாலிகுல் இஸ்லாம்" ஹஜ்ரத் ஜமாலுத்தீன் அவர்களுக்கு பழைய காயல் சிற்றூரை மான்யமாக மன்னர் அளித்துச் சிறப்பித்தார். 

பழைய காயலுடன் அதை அடுத்திருந்த நிலப் பரப்பை 12000 அரேபிய தீனார் விலை கொடுத்து ஹஜ்ரத் அவர்கள் தமது ஆதிக்கத்தில் கொண்டு வந்தார்கள். அந்த நிலப்பரப்பே இன்றைய காயல் பட்டணமாக கீர்த்தி பெற்றிருக்கிறது. 

மேலும் கி.பி. 1203-ல் சுந்தரபாண்டிய தேவர் மரணமடைந்த பின், ஹஜ்ரத் சையத் ஜமாலுத்தீன் அவர்களே சோழ-பாண்டிய ராஜ்யத்தின் முதல் அரேபிய மன்னராக சிம்மாசனம் ! ஏறினார்கள். 

சையத் ஜமாலுத்தீன் சுல்தான் ஜமாலுதீனாக பத்தாண்டு காலம் அறங்கொழிக்கும் நீதி ஆட்சி புரிந்து, மக்களின் செல்வாக்கைப் பெற்ற மாமன்னராக மங்காப் புகழ்பெற்று, சீனா வரை தன் சிறப்பைப் பரப்பி கொண்டிருந்தார்கள் 

காயல் கடல் திடீரென பிளவு கண்டு துறைமுகப் பணிகளுக்கு பயன்படாமல் போய்விட்டமையால், காயல் பட்டணத்திற்குக் குடியேறி காயல் பகுதியைப் பார்ப்போர் வியக்கும் வண்ணம் சிறப்புமிக்கப் பட்டணமாக வடிவம் தந்தார்.

24 நெடுஞ் சாலைகளை காயல்பதியில் அழகாக அமைத்து ஒவ்வொரு சாலையிலும் ஆத்மீக ஒளிவீசும் பள்ளிவாசலை நிர்மாணிக்கச் செய்து, காயல், பட்டணத்தின் எழிலை உயர்த்தச்செய் தார். 

நைனார் வீதியில் மாட்சிமைக்குரிய மன்னரின் அரண்மனை வண்ண உருவத்துடன் எழுப்பப்பட்டது. இதே நைனார் வீதியில் பிரமாண்டமான அளவில் ஜாமி உல் - கபீர் விண்ணளாவ இறைப்புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. 

இந்தக் காயல்பதிக்கு சுல்தான் ஜமாலுத்தீன் 'காஹிர் பதன்' என்ற அழகான பெயரைச் சூட்டினார். 

கி. பி. 1306-ம் ஆண்டில் இறையடி சேர்ந்த சுல்தான் சையத் ஜமாலுத்தீன் அவர்கள் 'ஜாமி உல் - கபீர்' எல்லைக்குள்ளேயே நல்லடக்கமாகி இருக்கிறார்கள்.

காணுமிடமெல்லாம் அல்லாஹ்வின் வணக்கஸ் தலங்களாலும், கேட்கு மிடமெல்லாம் 'அல்லாஹு அக்பர்’ ஒலியாலும், நிறைவு பெற்றுள்ள இப்புனித இடத்தை- காயல்பட்டணத்தை இந்தியாவின் 'குட்டி மக்கா' என்ற சிறப்புப் பெயரால் அழைத்து மக்கள் கண்ணியமளித்து வருகின்றனர். 

அந்த அளவிற்கு இஸ்லாத்தின் புகழ்பாடி, பரப்பி அளப்பரிய சமயப்பணியாற்றிய மகான்கள், மேதைகள் வாழ்ந்த புண்ணிய பூமிதான் இன்றைய காயல்பட்டணம். 

அன்று தமிழகத்தில் கப்பிக் கொண்டிருந்த அறியாமையை, அந்த காரத்தை, அழித்து ஏகத்துவ விதை ஊன்றுவதற்கு உறைவிடமாகத் திகழ்ந்த தெய்வீக ஒளிவீசிய ஊர்தான் இன்றைய காயல்பட்டணம். 

செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி கோமான்களை, ஆத்மீக வள்ளல் ஹஜ்ரத் சுலைமான் வலி நாயகம் அவர்களை, மார்க்க மேதை, சதக்கத்துல்லாஹ் நாயகம், மகான் ஷம்சுத்தீன் வலி, சையத் அஹமது வலி, ஷெய்கு சலாஹுத்தீன் வலி, மஹமூதுதீபி, சையத் உமர் வலியுல்லாஹ், அவர்கள் மகனார் தைக்கா சாகிபு வலி ஆகிய இறைநேசச் செல்வர்களைப் பெற்றெடுத்த புண்ணிய பூமிதான் இன்றைய காயல்பட்டணம்.

அழியாப் புகழுடம்பைப் பெற்ற ஆயிரக்கணக்கான அவுலியாக்களான நாதாக்களின் அரிய சேவை பற்றிய சரித்திரங்கள் - இஸ்லாமிய ஞானச் சுடரை அள்ளி வீசி அவர்கள் இயற்றிய கல்விக் களஞ்சியங்கள் நிறைந்து வழிந்து காணப்படும் இடம் தான் இன்றைய காயல்பட்டணம். 

பதினாறாம் நூற்றாண்டில் காயல்பட்டணத்தை ஆட்சி புரிந்து வந்த மவ்லானா அப்துல் கப்பார் நைனா அவர்கள் காலத்தில் ஞானப் பேரொளி ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீத் மீறான் அவுலியா அவர்கள் பிரதம அதிதியாக காயல்பதி விஜயம் தந்துள்ளார்கள். 

ஆக, காயல்பட்டணம் மண், புண்ணியம் செய்த மண். இறை நேசர்களின் புனிதப் பாதங்கள் காயல் பதி மண்ணிலே பதிந்திருக்கின்றன. காயல்பதியில் உதித்த ஆஷிகே ரசூல் (ரசூலின் மெய்க் காதலர்கள்) சமயத் துறை வல்லுனர்கள், மார்க்க மேதைகளின் சாயல்களை இன்றைக்கும் மஹ்லரா உருவத்தில், இறையச்சத்தோடு வாழ்ந்து வரும் காயல் வாசிகளின் முகத்தேஜஸில் கண்டுகளிக்கலாம்.

தமிழ்மொழிக்காக அரும்பணியாற்றிய பெரும் புலவர் மணிகளை காயல் பட்டணம் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதைக் காண தமிழ் முஸ்லிம் உலகமே இறும்பூது எய்துகிறது. 

காயல் தந்த புலவர் பெருமக்களிலே ஹஜ்ரத் காசீம் புலவரும், ஷேக்னா லெப்பை புலவரும் தனிப்பெரும் சிறப்பினைப் பெற்றவர்கள். இன்றைக்கு மதுரை காஜிமார் தெருவில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், காயல்பட்டணத்தில் பிறந்த பிரசித்தி பெற்ற நீதிபதி காஜி அலாவுதீன் அவர்களின் வம்சா வழிகளே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று சூளுரைத்து, அந்தக் காலத்திலேயே எதேச்சாதி காரத்தை எதிர்த்து வரிகொடா இயக்கத்தை நடத்தி வைத்து, கட்டபொம் மனையே மன்னிப்புக் கேட்கும்படி செய்த 'லெப்பை அப்பா ' என்று செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட ஹஜ்ரத் ஷேக் அப்துல்காதர் போன்ற அடலேறுகளையும் தீன்புகழ்  காயல்பட்டணம் பெற்றெடுத்து இருக்கின்றது

தென்னாட்டு தாஜ்மஹால் எனப் போற்றப்படும் 'மஹ்லரா' காயல்பட்டணத்தின் நடுநாயகமாக விளங்கி மெய்ஞானப் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஊர்மத்தியில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்துள்ள மஹ்லராவின் எழில் ஈடு இணையற்றது. 

மஹ்லரா சுவர்களில் தீட்டப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், ஞானப்பாக்கள் கண்ணையும் கருத்தையும் வெகுவாக ஈர்க்கின்றன.

இரத்தினம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், முத்து முதலிய வியாபாரங்களில் காயல் மக்கள் எந்த அளவிற்கு உச்ச நிலை அடைந்து வள்ளல் பெருமக்களாக கௌரவமிக்க அறங்கொழிக்கும் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்குச் சிறந்த சான்றாக அவர்கள் போகுமிடங்களில் எல்லாம் நிறுவிய "முத்துச்சாவடிகள்" என்ற கூடங்கள் இன்றளவும் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன. 

அத்தகைய சாவடிகளை இப்போதும் மதுரை, நாகர்கோவில், வடசேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேவி முதலிய பிரதான நகர்களில் கண் கூடாகக் காணலாம். காயல்பதியின் சரித்திரச் சிறப்பை, சமயப்பற்றை, இஸ்லாமியப் பிரசாரப்பணியை, வாழ் வாங்கு வாழ்ந்துகாட்டிய பொன்மனச் செம்மல்கள் பற்றிய வரலாற்றை இங்கு மிகவும் சுருக்கியே வழங்கப்பட் டிருக்கிறது. 

சில முக்கிய சம்பவங்கள், சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல அம்சங்கள். இக்கட்டுரையில் இடம் பெறத் தவறியிருக்கலாம்.

காயல்பட்டண வாசிகள் அன்றும், இன்றும் வர்த்தகத் துறையில் மேம்பட்டவர்கள். சமயத் துறையில் இறையச்சம் மிகுந்தவர்கள். நற்பணிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடையளிப்பவர்ள். நற்காரியங்கள் ஆற்றுவதில் துணிச்சல் மிக்கவர்கள்; திரைகடலோடியும் திரவியம் தேடும் ஆற்றல் பெற்றவர்கள்! வாழ்க்கைத் தரத்தில் உன்னத அந்தஸ்து வகிப்பவர்கள்.

எண்ணிலடங்காத பல மகான்களையும், பாவலர், நாவலர்களையும் ஈன்றெடுத்த சிறப்பைப் பெற்றது, காயல் பதி!

செத்துங் கொடை கொடுத்த 
சீதக்காதி பிறந்த 
முத்தமிழ்தேர் காயல்முது நகரே -

இத்தரையில்
சன்மார்க்க இஸ்லாம் தழைத்துச் 
செழித்தோங்கித்
துன்மார்க்கம் போக்கத்துணை!

எம். முஸ்தபா ஹூசைன்
நன்றி:"கண்மலர்"

மவ்லவீ B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள் 

உத்தமபாளையம் மர்ஹூம் அபூபக்கர் ஹள்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் நினைவு மலரிலிருந்து எடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்