இப்ராஹிம் நபி யாருக்கு நண்பராக இருக்கிறாரோ அவர் நல்லவர் :
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 5
தொடர் : 35
13. இப்ராஹிம் நபி யாருக்கு நண்பராக இருக்கிறாரோ அவர் நல்லவர் :
==================================
ஹுஸைன் பின் காரிஜா அல் அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஜமல், ஸிஃப்பின் போன்ற யுத்தங்களால் குழப்ப நிலை நீடித்த போது நான் என்ன முடிவு எடுப்பது! யார் பக்கம் சேர்ந்து செயல்படுவது? எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்;
அப்பொழுது நான் அல்லாஹ்விடத்தில், "இறைவா! எது உண்மையோ அதை எனக்கு நீ காட்டிக் கொடு! அதை நான் பின்பற்றி நடந்து கொள்கிறேன்" என துஆ செய்து கொண்டே இருந்தேன்.
இந்நிலையில் ஒரு நாள் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் நான் மறுமை நாளில் இருப்பது போன்றும், எனக்கும் நல்லவர்களுக்கும் இடையே ஒரு சுவர் இருப்பது போன்றும் கனவு கண்டேன்.
அப்பொழுது, "எனக்கு எதிரே இருந்த சுவர் போன்ற திரையை விலக்கினால் உள்ளிருக்கும் நல்லவர்களை சந்தித்து விடுவேன்" என நான் சொல்லிக் கொண்டு சுவர் போன்று இருந்த திரையைத் விலக்கினேன்.
அப்பொழுது அதற்குள் வெள்ளை ஆடை அணிந்த சிலர் இருந்தார்கள்; அவர்களிடம் நான் "நீங்கள் வானவர்களா?" எனக் கேட்டேன் .
அதற்கு அவர்கள், "இல்லை! நாங்கள் ஷஹீத் - வீர மரணம் அடைந்தவர்கள்" என்று சொன்னார்கள்.
தொடர்ந்து அறிவிப்பாளர் கூறுகிறார்; கனவையும் கனவுக்குள் உள்ள காட்சிகளையும் நான் அடைந்தது மிகப்பெரும் பாக்கியமாகும்; இது போன்ற ஒரு பாக்கியத்தை இதற்கு முன் நான் பெற்றதில்லை.
மேலும் ஷஹீதுகளை நான் பார்த்த பிறகு அங்கே நபி (ஸல்) அவர்களும், இப்ராஹிம் (அலை) அவர்களும் இருந்ததைக் கண்டேன்.
அப்பொழுது இப்ராஹீம் (அலை) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம், "உங்கள் சமுதாயத்தினர் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் தங்களுடைய தலைவர்களை ( உஸ்மான் ரலி அவர்களை ) கொலை செய்து விட்டார்கள்; அவர்களின் ரத்தத்தை ஆறுகளாக ஓடச் செய்துவிட்டார்கள்;
எனது நண்பர் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் செய்தது போன்று நீங்கள் செய்ய வேண்டாமா? என (என்னை பார்த்து இப்ராஹீம் அலை அவர்கள்) கேட்டார்கள்.
(அதாவது ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்குத் துணையாக இருந்து செயல்பட்டார்கள். அவர்களின் கட்சியில் இணைந்து செயல்படுங்கள் என்பது போன்று சாடை காட்டினார்கள்.)
"ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தால், நான் அவரிடம் இந்த கனவை விவரமாக எடுத்துச் சொல்வேன்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் .
இந்நிலையில் அவர்கள் ஒருமுறை என்னிடம் வந்திருந்தார்கள்; நான் கனவை விபரமாக எடுத்துச் சொன்னேன்; அதை கேட்டதும் அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்; "மேலும் யாருக்கு இப்ராஹிம் (அலை) அவர்கள் நண்பராக இல்லையோ அவர் நஷ்டம் அடைந்தவர்களில் இருப்பார்" என்று கூறினார்கள்.
நூல்: கிதாபுல் மனாமாத்; ஸியறு அஃலாமு நுபலா
Comments
Post a Comment