சூஃபியாக்களின் சுவாசம் திக்ரு - தியானம்

சூஃபியாக்களின் சுவாசம் 
திக்ரு - தியானம்
~~~~~~~~~~~~~~~~~~~

திக்ரு எனும் அரபிச் சொல்லுக்கு தியானம், நாவில் எழும் பேச்சு;
பிரபலம்; வணக்கம் ; துஆ; நினைவு; கூற்று; ஜெபம்; நினைத்தல்; ஞாபகபடுத்தல்; பேசுதல் ஆகியன பொருள்களாகும்.

மேலும் "தியானம்” என்ற வார்த்தைக்கு 'நமக்கு நாமே பழக்கப்படுத்துதல்' என்ற பொருளும் உண்டு.

தியானம், மனதில் எண்ணங்கள் உருவாகாமல் இருக்க செய்யும் முயற்சி. எண்ணங்கள்  தோன்றுகிற போதே அதை புனிதப்படுத்தவும் செய்யும்.

தியானம், கண்மூடி அமர்ந்து செய்யும் ஒரு செயல் அல்ல. அது ஒரு நிலை.

மனதை ஒருமுகப்படுத்தி அறிவால் அறிவை காண முயற்சிக்கும் முறைக்கு தியானம் என சொல்லப்படும்.

மேலும் தியானத்தின் மூலம் உலகை மனதில் காணலாம்.

தியானம் என்பது நமது மனதை மேம்படுத்தும் ஒரு செயல். நமது மனதை ஒரு முறையான செயற்பாட்டினுள் இயங்க வைப்பதனை தியானம் எனக்கூறலாம்.

இவ்வுலகத்தை நாம் ஐம்புலன்கள் மூலம் உணருகிறோம். இயல்பாகவே இந்த ஐம்புலன்கள் வெளிப்படையாக அமைந்துள்ளது. 

இந்த ஐம்புலன்களையும் உள்முகமாகத் திருப்பி , இந்த ஐம்புலன்களை கடந்துச் சென்று, நமது நிதர்சனமான வடிவம் மற்றும் அதன் உண்மை நிலையை அறிய வைப்பதுதான் தியானம்.

தியானம் மூலம் நம் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும், மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். மேலும் நம் மனதை விசாலப்படுத்தி கொள்வதற்கான விசேஷமான முறையே தியானம்.

தியானம் செய்வோருக்கு தெளிவுகள் வந்து விடும். வம்புக்கு போகாத அமைதி ஏற்படும். கனவுகளில் மூழ்காத நிதானம் வரும். சொற்களில் பரபரப்பு இருக்காது. பதட்டம் ஏற்படாது. கும்பலிலிருந்து பிரியும் எண்ணம் வரும். செயல்பாடுகள் சுத்தமாகும், தெளிவாகும்.

ஓழுங்கு முறையாக மனதை செயற்படுத்துவதினால், அக வாழ்வு தூய்மைபெறும். அகவாழ்வு தூய்மைபெறுவதால், நமது வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாக சுகமானதாக மாறும். நாம் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் கொண்டவராவோம். கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் கொண்டவராவோம். சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்வோம்.

தனிமை தியானத்தை வலுப்படுத்தும். தியானம் தனிமையினை அதிகப்படுத்தும். தியான பலத்தால் எண்ணம் தோன்றும் போதே ஏன்? எது? எதற்கு? என்கிற வினாக்கள் எழுந்து, சடசடவென்று விடையும் தெரியவரும். மனதை மேன்மை படுத்துவதால் இவ்வனைத்தையும் நம்மால் பெற முடியும்.

நம்மால் அதிக நேரம் தியானம்  செய்ய முடிந்தால் நம் மனம் விரைவாக மேன்மையடையும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்