சூஃபிகளின் நோன்பு - 3

நேற்றைய தொடர்ச்சி.....

சூஃபிகளின் நோன்பு - 3 
^^^^^^^^^^^^^=======^^^^^^^^^^

4. பிற உறுப்புகள் பாவங்களில் ஈடுபடாமல் பாதுகாப்பது : 

கை, கால்கள் மற்றும் அனைத்து உறுப்புகளும் பாவமானவற்றை விட்டும், சந்தேகத்திற்குரியவற்றை விட்டும், சிறு குற்றங்களை விட்டும் முழுமையாக  பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

நோன்பு துறக்கும் நேரத்தில் சந்தேகத்திற்கு உரியவற்றை சாப்பிடுவதை விட்டும் விலகி இருக்க வேண்டும். 

ஏனென்றால் ஹலாலானதை சாப்பிட்டு நோன்பு நோற்று விட்டு நோன்பு துறக்கும் போது ஹராமானதை சாப்பிடுவதால் என்ன பயன்?

5. நோன்பு துறக்கும் போது கவனமாக இருப்பது : 

இஃப்தார் -  நோன்பு துறக்கும் போது வயிறு நிரம்ப சாப்பிடுவது நல்லதல்ல! 

ஹலாலான உணவை நோன்பு துறக்கும் நேரத்தில் சாப்பிடுவது ஆகுமானதாக இருந்தாலும், வயிறு நிரம்ப உண்பது அல்லாஹ்விடத்தில் கோபத்தை ஏற்படுத்தும்.

நோன்பின் நோக்கம்; மன எழுச்சிகளை அடக்குவதும், அல்லாஹ்வின் விரோதியான ஷைத்தானை கட்டுப்படுத்துவதும் தான்.

பகலில் நோன்பின் காரணமாக சாப்பிட முடியாமல் போன  வண்ணமயமான பல உணவுகளையும், பானங்களையும் நோன்பு துறக்கும் போது உண்பதால் நோன்பின் நோக்கம் முழுமை பெறாது.

நோன்பின் போது  காலியான வயிற்றோடு இருப்பவர், நோன்பு துறக்கும்போது வயிறு நிரம்ப சாப்பிட்டால், சாப்பிடுகிற அவரால் பிறருக்கு ஏற்படும் அபாயத்தை நினைத்தும், அவருக்கே ஏற்படும் அபாயங்களை நினைத்தும் சூஃபியாக்கள் அஞ்சுகிறார்கள்.

விரும்பியதை சாப்பிடும் போது அவரின் ஆன்மா இரண்டு மடங்கு அதிகமான ஆசைகளுக்கும் மன எழுச்சிகளுக்கும் உள்ளாகிறது. 

அதாவது நோன்பு காலத்திற்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது அவருடைய ஆன்மா அதிகமான ஆசைகளையும், மன இச்சைகளையும் பெறுகிறது . 

எனவே நோன்பு துறக்கும் போது சாப்பிடுவதில் கவனம் வேண்டும் என சூஃபியாக்கள் வலியுறுத்துகிறார்கள்.

நோன்பு நோற்காத காலை நேரத்தில்  சாப்பிடுவதை விட நோன்பு நோற்கும் ஸஹரில் அதிகமாக  சாப்பிடுவதில் சூஃபியாக்களுக்கு உடன்பாடு இல்லை.

நோன்பு காலம் வருவதற்கு முன்பு நோன்பு நோற்பதின் மீது ஆசையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும், இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் என்கிற நம்பிக்கையும் இருக்கும். 

ஆனால் நோன்பு காலத்தில் அதிகமாக உண்பதால் இவற்றில்  எதையும் பெற்றுக் கொள்ள மாட்டோம். 

அதனால் நோன்பு குறித்த நல்லெண்ணம், மதிப்பு ஆகியன குறைந்து, நோன்பை துச்சமாக மதிக்கும் நிலை உண்டாகிவிடும் எனவும் சூஃபியாக்கள் அஞ்சுகிறார்கள்.

நோன்பு துறக்கும் போது அளவு கடந்து சாப்பிடுகிறவருக்கு உலகியல், உடலியல் மற்றும் மறுமையின் பயன், மிகக் குறைவாகவே கிடைக்கும்.

6. நோன்பு துறந்த பிறகு உள்ள நிலை :  

நோன்பாளி நோன்பு துறந்த பிறகு  அச்சத்தோடும் எதிர்பார்ப்போடும் காணப்படுவார். 

அவருடைய நோன்பு ஏற்கப்பட்டு அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருப்பாரா? அல்லது  அவரது நோன்பு இறைவனால் நிராகரிக்கப்பட்டு இறைவனை விட்டும் தூரமாக்கப்படுவாரா  என்கிற தடுமாற்றத்தில் அவர் இருப்பார்.

சூஃபியாக்களை பொருத்தமட்டில் ஒருவர் அருவருப்பான செயல்களை செய்தாலே நோன்பு முறிந்து விடும் என்பார்கள்.

மேற்குறப்பட்ட அருவருப்பான காரியங்களை செய்கிறவர்கள், பார்ப்பவர்கள், கேட்பவர்கள் நோன்பு நோற்காமல் இருப்பதே நல்லது என்றும் சூஃபியாக்கள் கருதுகிறார்கள்.

உண்ணாமல், உடலுறவு கொள்ளாமல் தம்மை தற்காத்திருந்து, பாவங்கள் செய்ததின் காரணமாக ஒருவரின் நோன்பு முறிவது, குளிப்பு கடமையான நிலையில் உள்ள ஒருவர் உளுவின் உறுப்புகளை முறையாக மூன்று முறை கழுகிய பிறகு அவர் தொழுவதை போன்று உள்ளது. 

இவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாதது போலவே அவரின் நோன்பும் ஏற்றுக் கொள்ளப்படாது.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்