அப்துல் வாஹித் (ரஹ்) அவர்கள்
வாஹிதியத்துல் பாத்திமா நிறுவனர் அப்துல் வாஹித் (ரஹ்) அவர்கள்
1992 இல் கூத்தாநல்லூர் ஃபைஜுல் பாக்கியத் மதரஸாவில் நான் ஓதிக் கொண்டிருக்கும் போது அத்திக்கடையில் வாஹியத்துல் பாத்திமா மதரசா தொடங்கப்பட்டது.
அப்பொழுது எங்கள் மதரஸா மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். வாஹிதியாவில் ஒவ்வொரு அறையிலும் ஒரு ஃபேன் போடப்பட்டுள்ளது, நாஷ்டா காசு அதிகமாக வழங்கப்படுகிறது, மதியம் மற்றும் இரவில் ஒவ்வொரு நாளும் ஒருவகையான ஆனம் காய்ச்சி பரிமாறப்படுகிறது என்றெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டோம்.
கூத்தாநல்லூர் ஃபைஜுல் பாக்கியாத் மதரஸாவில் மூன்று வகுப்புகள் மட்டுமே இருந்தது. எனவே நான்காம் வகுப்பிற்கு அங்குதான் போக வேண்டும் என மாணவர்கள் பேசிக்கொண்டார்கள்.
மதரஸா தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே ஆலிம்களாளும் மாணவர்களாளும் அதிகம் பேசப்பட்ட மதரஸாக்களில் இது முதன்மையானது.
இந்த மதரஸாவின் நிறுவனர் அல்ஹாஜ் அப்துல் வாஹித் அவர்கள் கடந்த
22/ 2/ 2021 அன்று சென்னையில் காலமாகிவிட்டார்கள். அவர்களின் தீதாரை பார்வையிட்டேன். அவர்களுக்காக நான் அதிகம் பிரார்த்தனை செய்தேன்.
அவர்களின் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏழாம் நாள் துஆவில் அத்திக்கடைக்கு சென்று கலந்து கொண்டேன். அவர்களின் சேவையை மதித்து சில வரிகள்
எழுத ஆசைப்படுகிறேன்.
அவர்களைப் பற்றி சில வரிகள் :
**********************************
வாஹிதியத்துல் பாத்திமா மதரஸா தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே மூன்று அடுக்குமாடிகளோடு விசாலமான இடத்தில், மாணவர்களுக்கு அதிகமான சௌகரியங்கள் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.
அதேபோல் அங்கு ஆசிரியப் பணி ஆற்றுகிற ஆசிரியர்களுக்கு மற்ற மதரஸாக்களை விட அதிகமான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனாலும் இம் மதரசா அதிகம் பேசப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே தனிப்பட்ட ஒரு மனிதரால் கடந்த 28 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிற ஒரே மதரஸா இதுவாகத்தான் இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.
மாதம் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகிறது என்று நாம் வைத்துக் கொண்டால், கடந்த 28 ஆண்டுகளில் 17 கோடி ரூபாய்கள் செலவழித்திருக்கிறார் என தெரிய வருகிறது.
மதரஸாவிற்கு எதிரே புதிதாக வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. எனவே இரண்டு கட்டிடங்களின் செலவினங்களையும் சேர்த்து பார்த்தால் 20 கோடிக்கும் மேலாக செலவழித்திருப்பார்கள் போல் தெரிகிறது.
ஹாஜியார் அவர்கள் இந்த மதரஸாவை தொடங்கும்போது அவர்களுடைய வயது 61. அவர்கள் இறக்கும் பொழுது வயது 90. எனவே இடைப்பட்ட 28 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் அதற்கான செலவின தொகைகளை வழங்கும்போது அவருடைய மனம் மாறாமல், அல்லாஹ்விற்காக செலவழிக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தை நினைத்து பார்க்கும் போது உடல் சிலிர்க்கிறது.
நம்மிடம் பணம் கேட்கும் ஒருவருக்கு, நமது கைகளை தூக்கி, ஜேப்பிர்குள் விட்டு, நாம் நினைத்த தொகையை தேடி எடுப்பதற்குள் நமது மனம் எத்தனையோ மாற்றங்களை சந்தித்துவிடுகிறது.
ஒரு முறைக்கே நமது மனம் பல மாற்றங்களை சந்திக்கிறது என்றால் மர்ஹூம் அப்துல் வாஹித் ஹாஜியார் அவர்கள் கடந்த 28 வருடங்களாக எந்த மன மாற்றங்களுக்கும், தடுமாற்றங்களும் உள்ளாகாமல் தொடர்ந்து மதரஸா நடைபெற தொகைகளை வழங்கி இருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய உள்ளத்தின் உறுதியையும் ஷைத்தானின் ஊசலாட்டம் அவர்களிடம் பலிக்கவில்லை என்பதையும், ஒவ்வொரு முறையும் ஷைத்தானை ஜெயித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த மதரஸா உலகம் உள்ளளவும் தொடர்ந்து நடைபெற இம்மதரஸாவின் மாதாந்திர செலவினங்களுக்கு தேவையான சொத்துக்களை பல வருடங்களுக்கு முன்னதாகவே எழுதி வைத்து, அதன் வழி வரும் வருவாய் இந்த மதரஸாவிற்கே செலவழித்து வந்திருக்கும் பாங்கையும், எண்ணத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எந்த ஒரு சொத்தும் வக்ஃபு செய்யப்படவில்லை என ஒரு தகவல் அறிக்கை கூறுகிறது.
ஆனால் ஹாஜியார் அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்களை மதரஸாவிற்கு என எழுதி வைத்து, மதரஸாவை ஒரு அறக்கட்டளையாக ஆக்கி, அதில் தன் குடும்பத்தினரை பாதுகாவலர்களாக நியமித்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை காணும்போது அவர்களின் தீர்க்கமான முடிவையும், பார்வையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மக்காவில் நானும்
அப்துல் வாஹித் ஹாஜியார் அவர்களும்
********************************************
மக்காவில் நான் ஹஜ்ஜில் இருக்கும்போது ஹாஜியார் அவர்கள் எங்கள் அல் அமானத் ஹஜ் சர்வீசில் ஹஜ் செய்ய வந்திருந்தார்கள்.
அச்சமயம் தஹஜ்ஜுத் பாங்கு சொல்லப்பட்ட பிறகு தொழுகைக்காக எழுந்து செல்வேன்.
முதலில் ஒரு தவாஃப் செய்வது வழக்கம். அப்பொழுது தவாஃபில் ஹாஜியார் அவர்களும் அவர்களுடைய மனைவியும் எனக்கு முன்னால் தவாஃப் செய்துகொண்டிருந்தார்கள்.
அப்பொழுது நான், "என்ன ஹாஜியார் ! இப்பதான் வந்தீங்களா?" என்று கேட்டேன்.
அவர்கள், "ஒரு தவாஃப் முடிந்துவிட்டது இரண்டாவது தவாஃபில் ஐந்தாவது சுற்று" என்று சொன்னார்கள். நான் அவர்களைப் பார்த்து பிரமித்து சந்தோசத்தோடு அவர்களை கடந்து சென்றேன்.
ஹாஜியார் அவர்களும் அவர்களுடைய மனைவியும் ஹரம் ஷரீஃபின் மூலைமுடுக்குகளில் எல்லாம் இருவரும் சேர்ந்தே பயணித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் இரு உடல்களுக்கும் ஒரு நிழல் இருப்பதுபோல் தோன்றும். அப்படி இணைந்தே இருப்பார்கள்.
(கணவரை பிரிந்து வாழும் ஹஜ்ஜா பாத்திமா அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும், நோய்நொடி இல்லாத வாழ்வையும், இன்னும் பல நல்லறங்கள் செய்கின்ற மனநிலையையும் அல்லாஹ் அருள்வானாக!)
நான் ஹாஜியார் அவர்களிடம் சொல்லுவேன். ஹாஜியார்! "உங்களுக்கு வயதாகிவிட்டது, இன்னும் சில நாட்களில் ஹஜ் செய்ய வேண்டி இருக்கிறது, அதனால் நன்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், ஹஜ்ஜை திருப்திகரமாக செய்து முடித்து வரவேண்டும், எந்த நோய் நோக்காடுகளும் இல்லாமல் திரும்பி வரவேண்டும், அதனால் உங்கள் உடலை அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள்" என்று சொல்லுவேன்.
அதற்கு ஹாஜியார் அவர்கள், "ஹள்ரத் எனக்கு வயதாகிவிட்டது, அதனால் இருக்கிற நேரத்தில் இயன்ற அளவு நல்ல செயல்களை செய்வோமே என்றுதான், வந்த இடத்தில் ஓடியாடி ஓய்வில்லாமல் அமல் செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு எதுவும் நேராமல் இருக்க தாங்கள்தான் இருக்கிறீர்களே! துஆ செய்யுங்கள் " என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு நழுவுவார்கள்.
ஒவ்வொரு நேரத் தொழுகையையும் மதாஃபில் இருந்து கொண்டு, கஅபாவை பார்த்த வண்ணமே தொழுவார்கள். அங்கே இருக்கிற காலத்தில் இமாம் ஜமாஅத்தை தவறவிடாமல் தொழுவார்கள்.
நானறிந்தவரை அவர்கள் களவாக எந்தத் தொழுகையையும் தொழுததில்லை என்றே எண்ணுகிறேன்.
அடக்கவிடம்
**************
1992 களில் வாஹிதியதுல் பாத்திமா கட்டப்படும் போது அங்கே ஒரு வெற்றிடம் விட்டு விட்டுதான் கட்டியிருக்கிறார்கள்.
அந்த இடத்தில் தானும், தன் மனைவியும், தனது மூன்று மகன்களும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு காலி இடம் விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலம்சென்ற தனது ஒரு மகனை அங்கே தான் ஹாஜியார் அவர்கள் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
தான் இறந்த பிறகும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொன்னதின் அடிப்படையில் வாஹிதியத்துல் பாத்திமா மதரசாவிற்குள்ளேயே அப்துல் வாஹித் ஹாஜியார் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
فَقَدْ رَوَى الحاكم عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ عِنْدَ قَبْرٍ فَقَالَ: «قَبْرُ مَنْ هَذَا؟»
فَقَالُوا: فُلَانٌ الْحَبَشِيُّ يَا رَسُولَ اللهِ.
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: «لَا إِلَهَ إِلَّا اللهُ، لَا إِلَهَ إِلَّا اللهُ، سِيقَ مِنْ أَرْضِهِ وَسَمَائِهِ إِلَى تُرْبَتِهِ الَّتِي مِنْهَا خُلِقَ». وَقَالَ: هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ.
وروى عبد الرزاق عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: يُدْفَنُ كُلُّ إِنْسَانٍ في التُّرْبَةِ التي خُلِقَ مِنْهَا.
அபூ ஸஈதுல் குத்ரி ( ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமயம் கபூர்ஸ்தானில் ஒரு ஜனஸாவுடன் நடந்து சென்றார்கள். அப்போது நபி ( ஸல் ) அவர்கள், "இது யாருடைய அடக்கத்தளம்" எனக் கேட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் "இன்ன ஹபஷீ மனிதருடையது" என கூறினார்கள்.
அப்போது நபி ( ஸல்) அவர்கள், "லா இலாஹ இல்லல்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை , இவர் படைக்கப்பட்ட மண்ணை நோக்கி, வாழ்ந்து கொண்டிருந்த வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் இவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார்" என்று சொன்னார்கள்.
நூல் : ஹாக்கிம்
இப்னு அப்பாஸ் (ரலி ) அவர்கள் அறிவிப்பதாவது; ஒவ்வொரு மனிதனும் எந்த மண்ணினால் படைக்கப்பட்டானோ அதே மண்ணில்தான் அடக்கம் செய்யப் படுவான்.
நூல் : அப்துர் ரஸ்ஸாக்
இந்த ஹதீஸின் கருத்தும் ஹாஜியார் அவர்களின் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது மிகப்பெரும் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு மனிதன் இறந்து போன பிறகு, அதிலும் அடக்கம் செய்யப்பட்ட பிறகுதான் அவன் இதே மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என தெரியவரும்.
ஆனால் ஹாஜியார் அவர்கள், தான் இதே இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று 28 ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுசெய்து, அதற்காக இடத்தையும் ஒதுக்கி, சென்னையில் இறந்த ஹாஜியார் அவர்களின் உடலை அத்தி கடைக்கு எடுத்துச் சென்று குறிப்பிட்ட அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்கும் போது ஹாஜியார் அவர்களின் எண்ணம் போல் வாழ்வு அமைந்திருப்பதை காண முடிகிறது. அவர்களின் பிரார்த்தனை இறைவனிடம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.
தான் அடக்கம் செய்யப்படும் மண் இதுதான் என 28 வருடங்களுக்கு முன்னதாகவே தேர்ந்தெடுத்திருப்பதை நாம் பார்க்கும்போது,
இன்று எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.
இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் :
********************************************
உமர் ( ரலி ) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது தம் மகன் அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி) அவர்களிடம், "என் மகனே! நீ (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று நபிகளாருக்கு அருகில் உள்ள இடத்தில் நான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன், நீங்கள் அனுமதிப்பீர்களா? என நான் கேட்டதாக நீ கேள்" என சொல்லி அனுப்பினார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி )அவர்கள், "இங்கே! நான் அடக்கமாகலாம் என்று இருந்தேன், ஆனால், உங்கள் தந்தை என்னைவிடச் சிறந்தவர், நல்லவர். எனவே நான் உம் தந்தைக்காக அந்த இடத்தை விட்டுத் தருகிறேன்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே பிறகு உமர் ( ரலி) அவர்கள் அந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
எனவே குறிப்பிட்ட இடத்தில், தான் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று ஒரு மனிதர் ஆசைபடுவதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்பதை இந்த நிகழ்வு நினைவுறுத்துகிறது.
ஒரு பெரிய பள்ளிவாசலில் திக்ரு மஜ்லிஸ் நடந்து கொண்டிருந்தது. அதை ஒரு ஷைஹு வழிநடத்திக் கொண்டிருக்கிறார் . அவரைச்சுற்றி அமர்ந்திருப்பவர்களுள் சிலர் அன்று பள்ளிவாசலுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள்.
மிக உச்சகட்டமாக திக்ரு நடந்து கொண்டிருக்கும் அந்த மாலை வேளையில், அந்தக் கடுமையான வெயில் காலத்தில் கரண்ட் நின்றுவிட்டது. கடுமையான கூட்டத்தில் A C, ஃபேன் என எதுவும் இல்லாததால் ஷைஹு அவர்களுக்கு சிலர் விசிறியால் விசிறி விட்டார்கள். அந்தக் காற்று அங்கே அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அன்று(தான்) பள்ளிவாசலுக்கு வந்திருந்தவர்கள் மீதும் வீசுகிறது.
திக்ரு மஜ்லிஸ் முடிந்து சபை கலைந்து செல்லும்போது அன்று பள்ளிக்கு வந்திருந்த முசல்லி விசிறி வீசியவரிடம், "எனக்கு நீ நல்லா வீசி விட்டாயப்பா" என்றாராம்.
அப்போது வீசியவர் சொன்னாராம். "நான் உங்களுக்கு வீசவில்லை, ஷைஹு அவர்களுக்கு தான் வீசினேன்.
நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் நாம் சென்று தங்கினாலோ, அல்லது நாம் அடக்கம் செய்யப்பட்டாலோ, அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாலோ அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளினால் நமக்கும் சற்று தண்டனை குறையும், ஷிஃபா கிடைக்கும், ஆறுதல் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நபிமார்களின் தலைவர் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களின் தலைவர் அபூபக்கர் (ரலி) அவர்களும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கருகே நாமும் அடக்கம் செய்யப்பட்டால், நமக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அப்படி உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
மேலும் இங்கே தொழ வருகிற ஆயிரமாயிரம் முஸல்லிகளின் துஆ, திக்ரு, திலாவத்துல் குர்ஆன் போன்ற காரணங்களினாலும் நமக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உமர் (ரலி) அவர்கள் அப்படி சொன்னதாகவே நமக்குத் தெரிய வருகிறது.
வாஹித் ஹாஜியார் அவர்கள் மேற்கண்ட நிகழ்வுகளை மனதில் கொண்டுதான் இப்படி ஒரு மதரஸாவையே உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.
ஆம்! இந்த மதரஸாவில் ஐவேளைத் தொழுகையையும் அங்கேயே நடக்கிறது. 24 மணி நேரமும் அங்கே மார்க்க சம்பந்தமான விஷயங்கள் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.
எனவே இப்படி மார்க்கக் கல்வி போதிக்கப்படும் இடத்திற்கு அருகே, ஐவேளை தொழுகை இமாம் ஜமாஅத்துடன் தொழப்படுகிற இடத்திற்கு அருகே, தாம் அடக்கம் செய்யப்படும் போது, தமக்கும் அடக்க விடத்தில் ஆறுதல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உறுதியாக இருந்ததின் விளைவே அவர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மூன்றுக்கும் சொந்தகாரர் :
*****************************
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ” أخرجه مسلم في صحيحه (3/ 1255)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிப்பதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரினார்கள்.
''ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)
1 . நிலையான தான தர்மம் (ஸதகத்துன் ஜாரியா)
2 .பயனளிக்கக் கூடிய கல்வி
3 .தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய நல்ல பிள்ளை''
நூல் : முஸ்லிம்.
நமது வாஹித் ஹாஜியார் அவர்கள் மேற்கண்ட நபிமொழியின் மூன்று விசயங்களுக்கும் உரியவராக, சொந்தக்காரராக வாழ்ந்திருக்கிறார்கள்.
நிலையான தர்மமாக வாஹிதியத்துல் பாத்திமா மதரஸா மற்றும் பள்ளிவாசல்கள் போன்ற பொது கட்டிடங்களை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டாவதாக பயனளிக்கக்கூடிய கல்வியை போதிக்கிற ஆசிரியர்களையும் அதை கேட்கிற மாணவர்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
அதேபோல் தனக்காக பிரார்த்தனை செய்யக் கூடிய மூன்று ஆண் மக்களையும் அவர்களை ஸாலிஹ் - நல்லவர்களாகவும் வளர்த்திருக்கிறார்கள்.
அவ்வாபீன் தொழுகை :
*************************
ஹாஜியார் அவர்கள் சென்னையில் ஒரு பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்கு சென்றிருந்தபோது ஒரு ஆலிம் மங்ரிபுக்குப் பிறகு தொழப்படுகிற ஆறு ரக்அத்கள் கொண்ட அவ்வாபீன் தொழுகையின் சிறப்புகளை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.
அதைக்கேட்ட அந்த நாளிலிருந்து மரணிக்கும் வரை அவர் அவ்வாபீன் தொழுகையை விட்டதே இல்லை என்று அவரே சொல்ல தான் கேள்வி பட்டதாக வாஹிதியத்துல் பாத்திமாவின் முதல்வர் ஃபவ்ஜ் அப்துல் ரஹீம் பாக்கவி அவர்கள் கூறினார்கள்.
இவ்வளவு பேணுதலாக இருக்கக்கூடிய ஹாஜியார் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களுக்கு உயர்ந்த சொர்க்கமாகிய ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தை அல்லாஹ் அளிப்பானாக.
வாஹிதியாவில் ஓதி பட்டம் பெற்று ஆங்காங்கே பணி செய்யக்கூடிய 200க்கும் மேற்பட்ட மவ்லவி ஆலிம் வாஹிதிகள் காலம் உள்ளளவும் ஹாஜியார் அவர்களுக்கு தொடர்ந்து ஈஸால் ஸவாப் செய்யும்விதமாக நன்மைகளை எத்தி வைத்துக்கொண்டு இருக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
சமுதாய ஊழியன்
கலீலுர் ரஹ்மான்
3/3/2021
Comments
Post a Comment