காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி - நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்கள்

காயல்பட்டணம் 
மஹ்லரா அரபுக் கல்லூரி - 
நீங்கள் அறிய வேண்டிய 
அரிய தகவல்கள்
=========================

செயலாளர், மஹ்லரதுல் காதிரிய்யா காயல்பட்டணம்..

சுமார் நூறு அடி உயரம்! நூறு அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்ட வடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்!

நூற்றி ஐந்து (105) ஆண்டுகளைக் கடந்தும்கூட புதுமை மாறாத பொலிவு மிக்க தோற்றம்! பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு!

குவலயம் போற்றும் குதுபு நாயகம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ஆண்டகை (ரலி) அவர்களின் புனித ரவ்ளா ஷரீபின் அமைப்பில் பரவசமூட்டும் இது, பாங்கான கவர்ச்சி!

சிறு மக்கமெனும் செகம் புகழ் கொண்ட, காயல்மாநகரின் நடுவண், "ஞாலம் போற்றும் ஞானியர் திலகம் முஹ்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் நினைவாக, காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் வண்ண 'மஹ்லரா'வின் எண்ண இனிக்கும் அமைப்பு!

ஹிஜ்ரி 1288-ம் ஆண்டு ஷவ்வால் பிறை 25-ம் நாள்!

அண்ணல் முஹ்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் வழி வந்த அருமைத் திருப்பேரர், பாங்குயர் பகுதாது நன்னகரைச் சார்ந்த ஹல்ரத் மௌலானா செய்யித் அப்துல்லாஹில் 'பகுதாதி' (ரஹ்) அவர்கள்,

காயல்மா நகரைச் சார்ந்த பெரியார்களான ஆலி ஜனாப் கம்பெனி அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம், குளம் சதக்குத்தம்பி ஹாஜி (மர்ஹும்) ஆகியோரின் பெருமுயற்சி காரணமாக,

ஆலி ஜனாப் அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலத்தில் இம்மாமண்டபத்தை நிறுவி முடித்து, "மஹ்லரதுல் காதிரிய்யா'' என்னும் திருப்பெயர் சூட்டினார்கள்.

புனித 'மஹ்லரதுல் காதிரிய்யா'வின் நிர்மாண கர்த்தரான ஹலரத் மௌலானா செய்யது அப்துல்லாஹில் பகுதாதி (ரஹ்) அவர்கள், சிறப்புறும்
இத் திருத்தலத்தைக் கட்டி முடித்து எழுதிய வக்ஃபில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்கள்:

ஹிஜ்ரி 1288-ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 25-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை,

பகுதாது நகரைச் சார்ந்த செய்யிது ஹபீபுல் காதிரிய்யி அவர்களின் குமாரர் செய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில் ஹனஃபிய்யாகிய நான் கூறுவது,

திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டணம் நகரில், ஜைனுத்தீன் புலவர் அவர்கள் வீட்டுக்கு வடக்கு, கதீபு மூஸா நைனா அவர்களின் வழியினர்கள் வீட்டிற்குத் தெற்கு, குத்பா சிறு பள்ளிக்கு மேற்கு, பொதுப் பாதையான அம்பல மரைக்காயர் தெருவிற்குக் கிழக்கு (இத்துடன் சிறு பள்ளிக்கும் மஹ்லராவுக்கு மிடையில் ஒரு சிறு பாதை இருக்கிறது) இந்நான்கு திசைகளையும் உள்ளடக்கி இருக்கிற தென்வடல் காலடி 75, கிழ மேல் தச்சுக்கோல் 45 அளவு கொண்ட நிலத்தை,

மகுதூம் முஹம்மது அவர்களின் குமாரர், அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து ரூபாய் முந்நூறுக்கு (Rs. 300/-) கிரயம் வாங்கி,

அல்லாஹ்வின் நற் கூலியையும், அண்ணல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் நல்லாசியையும் வேண்டியவனாக,

சுவாதீனமும் நற்சுகமும் உள்ளவனாயிருக்கின்ற நிலையில்,

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ஆண்டகை (ரஹ்) அவர்களின் "காதிரிய்யா தரீகா"வைச் சார்ந்தவர்களுக்காக 'வக்ஃப்' செய்து

இத் திருத்தலத்துக்கு "மஹ்லரதுல் காதிரிய்யா"என்று பெயரிட்டிருக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவா! இதைப் புனிதத் தலமாக ஆக்குவாயாக!

இத்தலத்தை எவரேனும் விற்கவோ வாங்கவோ செய்தால் யுக முடிவுநாள் வரை அவருக்கு இறைவனின் முனிவு உண்டாகட்டும்!

இதே 'வக்ஃபு'க்கு கீழ்காணும் நபர்கள் சாட்சிகள்! இறைவனே சாட்சிக்கும் பொறுப்புக்கும் மிகவும் மேலானவன்! எல்லாப் புகமும் அல்லாஹ்வுக்கே!"

இன்னணம்

செய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில் பகுதாதி

சாட்சிகள்:-

தைக்கா ஷெய்ஹு முஹம்மது ஸாலிஹ் லெப்பை குலஃபா) 

(கலீஃபதுல் கிலுரு முஹம்மது (கலீஃபா) S/3. ஷெய்ஹு அப்துல்காதிர்.

அஹ்மது முஹ்யித்தீன் (கலிஃபா) S/o. மகுதூம் முஹம்மது.

முஹம்மது சுலைமான் லெப்பை (கலீஃபா) S/O அப்துல்லா லெப்பை ஹில் ஆலிம்.

கதீபு காதிர் சாகிப் (கலீஃபா) S/o. அபூபக்கர் சாகிப்.

பாளையம் முஹம்மது அப்துல் காதிர் லெப்பை (கலீஃபா).

முஹம்மது சுலைமான் லெப்பை (கலீஃபதுல் குலஃபா) S/o. அப்துல் காதிர் நைனா லெப்பை.

ஷெய்ஹு முஹ்யித்தீன் லெப்பை (கலீஃபா) S/o. கல்லிடைக்குறிச்சி, பீர் முஹம்மது லெப்பை,

அப்துல்காதிர் S/o. அஹ்மது முஹ்யித்தீன்.

முஹ்யித்தீன் தம்பி S/o. விளக்கு முஹம்மது.

முஹ்யித்தீன் அப்துல்காதிர் S/o, மீரா லெப்பை.

கண்ணைக்கவரும் கவினார் தோற்றமும், நாடிவருவோருக்கு நல்லருள் ஏற்றமும் அளிக்கும் புனித மஹ்லராவின் நிர்மாணக் கர்த்தரான ஹல்ரத் மௌலானா செய்யித் அப்துல்லாஹில் பகுதாதி (ரஹ்) அவர்களும், அவர்களுக்கு உதவியாளர்களாகவம், ஒத்துழைப்பாளர்ளாகவும் இருந்து, 

இதன் நிர்மாணப் பணியில் ஆக்கமும் ஊக்கமும் கொண்டு செயல் புரிந்த மூலகர்த்தாக்களும், இம்மஹ்லரதுல் காதிரிய்யாவுக்கு பின்வரும் மூன்று முக்கிய இலட்சியங்களை வகுத்தளித் துள்ளார்கள்.

1.அண்ணல் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை (ரஹ்) அவர்கள் மேற்கொண்டு நடத்திக் காட்டிய இஸ்லாமியக் கலைஞானங்ளை பரப்பும் பணியை மத்ரஸாவை சிறப்புற நடத்துவது.

2.கீர்த்திமிகும் 'காதிரிய்யா தரீகா'வின் "திக்ரை” தொடர்ந்து நடத்தி வருவது.

3.அண்ணலெம் பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுடையவும், நமது நாதர் - நபிகளாரின் முஹ்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களுடையவும் மீலாத் - கந்தூரி வைபவங்களை கவினுற நடத்தி வருவது!

மூலக் கர்த்தாக்களின் இம்மூன்று இலட்சியங்களையும் நிறைவேற்றுவதில் கீர்த்திமிகும் 'மஹ்லரா' சீர்த்திநிறை பணியாற்றியிருக்கிறது. இன்றும் பணியாற்றி வருகிறது.

மாண்புயர் மார்க்கக் கலையின் வளர்ச்சியிலும், தேர்ச்சியிலும் புனித மஹ்லராவின், நனிசிறந்த நிறுவனங்கள் மிகப் பெரும் அக்கரையும் ஆர்வமும் கொண்டிருந்தார்கள். அவ்வாறே அரும்பாடுபட்டு உழைத்தார்கள். 

இதன் நிறுவன நாள் முதலான வரவு - செலவு கணக்குகளைப் பார்க்கும் போது, மார்க்கக் கல்வியின் தேவைக்காக. அதன் வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றியுள்ள சேவையின் அருமையை பெருமையைப் புரிந்து கொள்ளலாம்.

அருமறை குர்ஆன், திருநபி (ஸல்) ஹதீஸ், பிக்ஹ், தஸவ்வுஃப் இன்னோரன்ன இஸ்லாமிய கலைஞானத் துறைகளைச் சார்ந்த நூற்றுக் கணக்கான நூல்களை - அறிய கலைஞானப் பொக்கிஷங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

சன்மார்க்கக் கலையொளி பரப்பும் 'மதி' நிகர்த்த ‘மஹ்லரா'வின் நிதி நிலையைப் பெருக்குவதற்காகவும் அவர்கள் முயற்சி மேற்கொண்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

1941-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18-ம் நாள் அல்ஹாஜ் முஃப்தி நஹ்வி செய்யிது அஹ்மது லெப்பை ஆலிம் (மர்ஹும்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 'மஹ்லரதுல் காதிரிய்யா' அரபிக் கல்லூரி புனரமைப்புச் செய்யப்பட்டது.

நூற்றாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இம்மாமன்றம், ஹிஜ்ரி 1388-ம் ஆண்டு, ஷவ்வால் பிறை 16-ம் நாள் (6-1-69) முதல், 'மஹ்லரா' அரபிக் கல்லூரியை சிறந்த முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டு இன்று ஏற்றமிக்க வகையில் நடை பெற்று வருகிறது!

*அறிவுக்கு அரண் செய்த ஆசிரியப் பெரியோர்!*

இதன் நிறுவன நாள் முதல் ஏறத்தாழ 40 ஆண்டுகள் வரை ஹலரத் மௌலானா செய்யித் அப்துல்லாஹில் பகுதாதி (ரஹ்) அவர்களின் கலீஃபாக்களான "மஹ்லரா ஆலிம்" என எல்லோராலும் அன்புடன் அழைக்கப் பட்ட மர்ஹூம் ஹலரத் செய்யித் இஸ்மாயீல் ஆலிம் முஃப்தி அவர்களும், மர்ஹூம் ஹலரத் செய்யிது முஹம்மது ஆலிம் முஃப்தி அவர்களும் முறையே தலைமை ஆசிரியர் - திக்ரு நடத்தும் ஸர்தாராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்து உயர்பணி புரிந்தனர்.

இவர்களில் முன்னவரான பெரியார் ஹலரத் செய்யிது இஸ்மாயில் ஆலிம் மூஃப்தி அவர்கள் கி.பி. 1908-ம் ஆண்டு இறையடி சேர்ந்து, 'மஹ்லரா' வின் முன் வாயிலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். பின்னர்,

இப்பெரியாரின் மகனார் ஹலரத் செய்யிது இபுராஹீம் ஆலிம் அவர்கள் "திக்ரு மஜ்லிஸை" நடத்திச் சிறப்பித்தார்கள். இவர்களின் வஃபாத்துக்குப் பின்,

ஹல்ரத் செய்யிது இஸ்மாயில் ஆலிம் முஃப்தி அவர்களின் மற்றொரு தனயர் ஹலரத் செய்யிது முஹம்மது புகாரி ஆலிம் அவர்கள், பேரர் செய்யிது இஸ்மாயீல் ஆலிம் அவர்கள் ஆகியோருக்குப் பின் இப்போது,

கலீஃபா L. O. M. முஹம்மது அலி ஆலிம் அவர்களும் மௌலவி E. M. ஷேஹு உதுமான் ஆலிம் அவர்களும் இப் பொறுப்புக்கு உரியவர்களாக இருந்து ஏற்றமிகு பணியாற்றி வருகின்றார்கள்.

'மஹ்லரா ஆலிம்" ஹலரத் செய்யிது இஸ்மாயீல் ஆலிம் முஃப்தி அவர்களின் மறைவுக்குப் பின்,

தென் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரபலமானவரும், "மாதிஹுல் கௌது'' எனச் சிறப்புப் பெயர் பெற்றவருமான பெரியார் அல்ஹாஜ் நஹ்வி செய்யிது அஹ்மது லெப்பை ஆலிம் முஃப்தி அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று 15 ஆண்டுகள் சிறப்பித்துள்ளார்கள்.

இப் பெரியாரிடம் கல்வி கற்ற மாணவர்களில் பலர் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரபல ஆலிம்களாக வும், முஃப்திகளாகவும், முதர்ரிஸ்களாகவும் திகழுகிறார்கள். இதைத் தொடர்ந்து,

பெரியார் நஹ்வி செய்யிது அஹமது லெப்பை ஆலிம் முஃப்தி அவர்களின் அருமை மாணவர் அல்ஹாஜ் மா. மு. க. முஹ்யித்தீன் தம்பி ஆலிம் முஃப்தி தலைமை ஆசிரியராகப் பொருப்பேற்று, இப்போதைய சூழ்நிலைக்கேற்ப பாடத்திட்டங்களை அமைத்து, ஏற்றமிகும் கல்வி பெற்ற ஆலிம்களை உருவாக்கினார்கள். 

இவர்களைத் தொடர்ந்து தென்காசி மெளலானா மெளலவி முஹம்மது சுலைமான் ஆலிம் ஹலரத் அவர்களும், கடையநல்லூர் மெளலானா மெளலவி ஹாபிஸ் M. S. அப்துல்காதிர் ஆலிம் (பாகவி) அவர்களும், மற்றும் பல வெளியூர் ஆலிம்களும் முதர்ரிஸ்களாக இருந்து அரும்பணி புரிந்துள்ளனர்.

நமது புனித மஹ்லரா அரபிக் கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த அரபிக் கல்லூரியாகத் திகழ்ந்திட வேண்டும் என்ற மஹ்லரா நிருவாகக் குழுவின் திட்டத்தை செயல்படுத்தும் அரும் பெரும் முயற்சியால் பல பெரியார்களின் ஒத்துழைப்பால்,

தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க மேதையும், இஸ்லாமிய கலைஞான மேதையுமான கல்விக் கடல் மௌலானா மௌலவி அல்ஹாஜ் P. A. முஹம்மது அபூபக்கர் ஹலரத் கிப்லா அவர்கள் முதல்வர் பொறுப் பேற்றார்கள்.

இக் கல்லூரியை இதன் நிருவாகிகளுடையவும், ஊர் பொதுமக்க ளுடையவும் நோக்கத்திற்கிசைந்த வாறு பேரும் புகழுமிக்கதாகவும் "ஸுன்னத் - வல்-ஜமாஅத்" கோட்பாட்டிற்கு உட்பட்டு, உயர்பணியாற்றும் புகழுக்குரியதாகவும் ஆக்கும் அறப் பணியில் தங்களையே அர்ப்பணித்து உழைத்தார்கள் மௌலானா 'கிப்லா ஹலரத்' அவர்கள். 

அதன் பெரும் பயனாக, 7-6-71-ம் நாள் திங்கட் கிழமை தமிழக, கேரள உலமாப் பெருமக்களும், உள்ளூர் வெளியூர் பிரமுகர்களும் பொதுமக்களும் பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த பேரவையில்,

தஹ்ஸீல் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எண் மருக்கு" மௌலவி -ஆலிம்” (மஹ்லரி) ஸனதும்,

வான்மறை குர்ஆனை மனனம் செய்து, தேர்வுபெற்ற மாணவர்கள் பதின்மருக்கு "ஹாஃபிலுல்-குர்ஆன்" ஸனதையும் கண்ணியத்துக் குரிய 'ஹலரத் கிப்லா' அவர்கள் தங்களின் திருக்கரத்தால் வழங்கினார்கள். எனினும்,

பெரும் புகழ் கொண்ட பெரியார் ஹலரத் கிப்லா அவர்களின் அரும் பெரும் சேவையைப் பெறும் பாக்கியம் அதிகநாள் கொடுத்து வைக்கவில்லை.

கண்ணியத்துக்குரிய 'கிப்லா ஹலரத்' அவாகள், ஹிஜ்ரி 1391-ம் ஆண்டு ஷஃபான் பிறை 1-ம் நாள் (22 -9-71) அகால மரணமடைந்து விட்டார்கள். (இன்னாலில்லா ஹி-வ-இன்னா இலைஹி-ராஜிவூன்)

இது தென்னகத்திற்கு குறிப்பாக புனித மஹ்லரதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்!

எல்லாம் வல்ல அல்லாஹ், அவர்களை தன் சிறப்புறு நல்லடியார்கள் குழுவில் சேர்த்து, "ஜன்னத்துல் ஃபிர் தெளஸில்" சிறப்பிடம் தருவானாக! ஆமீன்!!

இவ்வாண்டு (1972) 'ஹலரத் கிப்லா' அவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமான, பெரு மதிப்புக்குரிய கேரளா தானூர் மௌலானா மௌலவி அல்ஹாஜ். K. K. அபூபக்கர் ஆலிம் ஃபாஜில் பாகவி -- ஃபாஜில் தேவ்பந்த்) அவர்கள் தலைமையில்,

கண்ணியத்துக்குரிய மௌலானா மெளலவி அல்ஹாஜ் K. முஹம்மது முஸ்தபா ஆலிம் (பாகவி-ஃபாஜில் தேவ்பந்த்) அவர்களும்,

மெளலானா மெளலவி M. முஹம்மது நூஹ் ஆலிம் (ஃபாஜில்-பாகவி), மௌலானா மௌலவி M. S. முஹம்மது ஆலிம் (பாகவி), மௌலானா மௌலவி A.M ஷப்பீர்அலி ஆலிம் (ஃபாஜில்- பாகவி), மெளலானா மௌலவி S.S. K. மஸ்தான் ஆலிம் (ரஹ்மானி), 

மௌலானா மௌலவி S. M. H. முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம் (ரஹ்மானி-பாகவி), மௌலானா மௌலவி S. N. சாகிப் தம்பி ஆலிம் (மஹ்லரி), மௌலானா மௌலவி W. செய்யிது முஹம்மது ஆலிம் (பாகவி) ஆகியோர் அரும் பணியாற்றி வருகின்றார்கள்.

குர்ஆன் "ஹிஃப்லு” பிரிவில், ஹாஃபீஸ் K. அப்துல் காதிர் ஆலிம் பணிபுரிந்து வருகிறார்கள்.

நகரச் சிறுவர்களுக்கு குர்ஆன் பயிற்றுவிக்க மௌலவி E. M. ஷேக் உதுமான் ஆலிம் (ஃபாஜில்-மன்பயீ) அவர்களும், மௌலவி முஹம்மதுஅலி
முஹ்யித்தீன் ஆலிம் (மஹ்லரி) அவர்களும் சேவையாற்றி வருகிறார்கள்.

ஹாஜி S. முஹ்யித்தீன் இபுறாஹீம் (B.A.) அவர்கள் ஆங்கிலம், கணக்கு கற்பிக்கும் பொறுப்பை சிறப்பித்து வருகிறார்கள்.

இவ்வாண்டு 10 தஹ்ஸீல் மாணவர்கள் உட்பட மொத்தம் உயர் கல்வி பெறும் உள்ளூர் - வெளியூர் மாணவர்கள் 61-பேரும், "குர்ஆன் ஹிஃப்லு" பிரிவில் 15 மாணவர்களும், குர்ஆன் ஓதும் பிரிவில் 125 மாணவர்களும் பயின்று வருகின்றனர். எதிர் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் நல்லாசியாலும், அண்ணல் கௌது நாயகம் (ரலி ) அவர்களின் பொருட்டாலும், இக் கலைக்கூடம் மேலும் பலவகைச் சிறப்புக்களைப் பெற்று, 'ஸுன்னத் வல் ஜமாஅத்' கோட்பாட்டின் அடிப்படை நின்று, இதன் நிருவாகிகளுடையவும், ஊர் பொதுமக்களுடையவும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் ஹலரத் கிப்லா அவர்களுடையவும் நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் பீடு நடைபோட்டு, பெரும் புகழ்கொண்டிட வல்ல அல்லாஹ் நல்லருள் நல்குவானாக! ஆமீன்!

அல்ஹாஜ், M. A. அப்துர்ரஷீது அவர்கள்
2/8/1972

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்