காபா ஆலயத்தை பாதுகாத்தது போன்று வக்ஃபு சொத்துக்களையும் அவனே பாதுகாப்பான்.
காபா ஆலயத்தை பாதுகாத்தது
போன்று வக்ஃபு சொத்துக்களையும்
அவனே பாதுகாப்பான்.
வக்ஃபு சொத்துக்கள் அல்லாஹ்வின் பெயரில் தானம் செய்யப்பட்ட சொத்துக்கள் அதன் உரிமை பத்திரம் பட்டா சிட்டா அடங்கல் அனைத்திலும் அல்லாஹ்வின் பெயர் தான் இருக்கிறது. இந்தியாவிலுள்ள 9 இலட்சம் சொத்துக்களுக்கும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே முழு உரிமையாளன்.
அல்லாஹ்வின் செத்துக்களை கொள்ளையிடும் முயற்சிகளை ஆன்மிக அடிப்படையில் முஸ்லிம்கள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த ஒரு வரலாற்று முன்மாதிரி இருக்கிறது.
கி.பி 570 :
காபாவை அழிப்பதற்கு வந்த அப்ரஹா மன்னனின் படையெடுப்பு சம்பவத்தில் மக்கா நகர குரைஷிகளின் மகத்தான தலைவர் அப்துல் முத்தலிப் (பெருமானாரின் பாட்டனார்) அவர்களுடைய நிலைப்பாடு நமக்கு நம்பிக்கையளிக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.
அன்றைய காபா ஆலயத்துக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம் முடிந்துபோக வேண்டும் அதற்கு பதிலாக எமன் நாட்டின் சனா நகரில் தான் கட்டியுள்ள ஆலயம் அரபுகளிடம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற பொறாமை வெறியில் காபாவை அழிப்பதற்கு 13 யானைகளுடன் அறுபதாயிரம் வீரர்கள் கொண்ட மிகப்பெரிய ராணுவத்துடன் மக்காவை நோக்கி வருகிறான் அப்ரஹா மன்னன்.
மக்காவுக்கு சற்று தூரத்தில் வந்தவுடன் அங்கே மேய்ந்து கொண்டிருந்த குரைஷிகளின் ஒட்டகங்கள் சிலவற்றை கைப்பற்றிக் கொண்டு உங்கள் தலைவர் அப்துல் முத்தலிபை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
வசீகரமான முக அழகும் கம்பீரமான தோற்றமும் கொண்ட அப்துல் முத்தலிப் அவர்கள் அப்ரஹா மன்னனின் கூடாரத்திற்கு வருகிறார்.
அப்துல் முத்தலிப் :
மதிநுட்பம் வாய்ந்தவர்.
மக்கா நகரத்தின் பெருந்தலைவர்.
வரலாற்றில் சுமார் முன்னூறு ஆண்டுகள் தூர்ந்து காணாமல் போன ஸம்ஸம் கிணற்றை கண்டறிந்தவர்.
அரபு பழங்குடிகளிடையே எழும் சமூக அரசியல் விவகாரங்களை சமரசம் செய்வதில் ஆகச்சிறந்த சாதுரியக்காரர்.
அப்துல் முத்தலிப்பின் இந்த சிறப்புகளை அறிந்திருந்த அப்ரஹா மன்னன் தனது சிம்மாசனத்தை விட்டு கீழே இறங்கி வந்து அப்துல் முத்தலிப் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்து அவரது கையைப் பிடித்துக் கொண்டு பேரம் பேசினான்.
அப்ரஹா மன்னன் : " உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன். உங்களுடைய குலத்தெய்வச் சிலைகளை எடுத்துக் கொண்டு காபா ஆலயத்தை இடித்து விட வேண்டும் "
அப்துல் முத்தலிப் : " எனக்கு சொந்தமான ஒட்டகங்களை பிடித்துக் கொண்டு வந்துள்ளீர்கள் அதை எங்களுக்கு தந்துவிடுங்கள் "
அப்ரஹா மன்னன் : (சற்று சங்கடத்துடன்) " நான் என்ன பேசுகிறேன்.நீங்கள் என்ன பேசுகிறீர்கள்.உங்கள் மீது நான் வைத்திருந்த மரியாதையை குறைத்து விட்டீர்கள் "
அப்துல் முத்தலிப் : " இல்லை. நான் சரியாகத் தான் பேசுகிறேன். அந்த ஒட்டங்கங்கள் என் சொத்து. அதற்கு நான் தான் உரிமையாளன்.அதை பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் எனக்கு இருக்கிறது.காபா ஆலயம் எனது சொத்தல்ல. அது அல்லாஹ்வின் சொத்து.அதை அவன் பாதுகாப்பான்" என்று கூறிவிட்டு அப்துல் முத்தலிப் வந்துவிடுகிறார்.
அப்ரஹா மன்னனுடைய இராணுவத்துடன் போரிடும் வல்லமை தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அப்துல் முத்தலிப் குரைஷிகளுடன் சேர்ந்து காபாவினுள் இருந்த தங்களது 360 குலத் தெய்வங்களிடம் முறையிடாமல் காபா கதவின் சங்கிலியை பிடித்துக்கொண்டு மூத்த தெய்வம் என்று குறைஷிகள் கொண்டாடிய அல்லாஹ்விடம் கையேந்தி முறையிட்டனர்.
பிறகு மக்காவில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் அப்ரஹா மன்னனுடைய இராணுவத்திடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கா அருகிலுள்ள மலைகளில் தஞ்சம் அடைந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
(Source : History of Prophets and Kings - Al-Tabari)
அப்ரஹா மன்னனுடைய யானைப்படை காபாவை அழிப்பதற்கு நெருங்கியது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்தி தான்.
காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு அன்று நடந்த சம்பவத்தை 40 ஆண்டுகள் கழித்து தனது நேசத்திற்குரிய ரசூல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூரத்துல் ஃபீல் அத்தியாயம் மூலம் அப்ரஹாவின் யானைகளையும் இராணுவத்தினரையும் "மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல ஆக்கினோம் " என்று அல்குர்ஆனில் கூறுகிறான்.
இந்தியாவில் சுமார் 9 இலட்சம் வக்ஃப் சொத்துக்களும் அல்லாஹ்வுடையது. அவனே அதற்கு முதலாளி.
அல்லாஹ்வின் அடியார்களில் அநாதைகள் ஏழைகள் விதவைகள் முதியோர் உள்ளிட்ட வாழ்வின் விளிம்பில் நிற்பவர்களுக்காக அர்ப்பணம் செய்யப்பட்டு நாடு முழுவதும் வியாபித்து கிடக்கிறது. யாரிடமும் சரியான தரவுகள் இல்லை. இவ்வளவு சொத்துக்களை பாதுகாக்கும் அறிவும் அதிகாரமும் மனப்பக்குவமும் இன்றைய முஸ்லிம்களிடமும் இல்லை.
உனது ஆலயத்தை பாதுகாத்தது போன்று இந்த வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் அபகரிக்கும் அதில் ஊதாரித்தனம் செய்யும் அனைவரிடமிருந்தும் நீ பாதுகாப்பாயாக என்று கையேந்துவது காரியங்களை கச்சிதமாக முடித்து வைக்கும்.
.
Comments
Post a Comment