இஸ்மாயில் {அலை} அவர்களுக்கு பாரகமாக அல்லாஹ் வழங்கிய ஆடு
ஹாஜிகளின் சேவையில்........18
==============================
இஸ்மாயில் {அலை} அவர்களுக்கு
பாரகமாக அல்லாஹ் வழங்கிய ஆடு
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தம் கரத்தில் இருந்த கத்தியால் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுக்க தன் சக்தியை முழுமையாக பயன்படுத்தி பலமுறை அறுத்த போதும் அவர் அறுபடவில்லை.
தன் கரத்திலிருந்த கத்தியை தூக்கி எறிந்த போது அருகில் இருந்த ஸபீர் மலை இரண்டாகப் பிளந்து அதிலிருந்து அகன்ற கண் விழிகள் உடைய, நீண்ட கொம்புகள் கொண்ட வெள்ளை நிற செம்மரி ஆடு வெளிவந்தது.
இந்த ஆடு சொர்க்கத்தில் நாற்பது ஆண்டுகள் மேய்ந்து கொண்டிருந்தது.
ஆதம் (அலை) அவர்களின் மகன் ஹாபீல் அவர்கள் அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுத்த ஆடுகளை அல்லாஹ் ஒப்புக் கொண்டான் அல்லவா? அந்த ஆடுகளில் ஒன்றுதான் இந்த ஆடு.
இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பகரமாக வந்த ஆட்டை இப்ராஹீம் (அலை) அவர்கள் அறுத்தார்கள்.
அந்தக் காலத்தில் அவர்களின் மார்க்கப்படி அறுக்கப்பட்ட இறைச்சியை யாரும் சாப்பிடக்கூடாது. மாறாக, அதைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட வேண்டும்.
வானத்திலிருந்து ஒரு நெருப்பு இறங்கி அதைச் சாப்பிட்டுவிடும். அதுபோன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் அறுத்த ஆட்டின் தலையைத் தவிர, மற்ற எல்லா பாகங்களையும் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டார்கள்.
வானிலிருந்து நெருப்பு வந்து அதைச் சாப்பிட்டுவிட்டது. தலையை மட்டும் நபி இப்ராஹிம் {அலை} அவர்கள் எடுத்து வந்து கஅபாவின் உள் சுவரில் மாட்டி வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் காலம் வரை அது அங்கேயே இருந்து வந்தது.
حدثنا سفيان حدثني منصور عن خاله مسافع عن صفية بنت شيبة أم منصور قالت أخبرتني امرأة من بني سليم ولدت عامة أهل دارنا أرسل رسول الله صلى الله عليه وسلم إلى عثمان بن طلحة وقال مرة إنها سألت عثمان لم دعاك النبي صلى الله عليه وسلم قال إني كنت رأيت قرني الكبش حيث دخلت البيت فنسيت أن آمرك أن تخمرهما فخمرهما فإنه لا ينبغي أن يكون في البيت شيء يشغل المصلي قال سفيان لم يزل قرنا الكبش في البيت حتى احترق البيت فاحترقا هذا آخر حديث
மன்சூர் அவர்களின் தாய் ஸஃபியா பின்த் ஷைபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
பனீ சுளைம் வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னிடம் கூறினார். அப்பெண்னை எங்கள் குடும்பத்தினர் வளர்த்து வந்தார்கள்.
(ஃபதஹ் மக்கா - மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கி இருந்த போது ஒரு நாள்) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களின் வீட்டுக்கு ஒருவரை அனுப்பி அழைத்து வரும்படி கூறினார்கள்.
உடனே உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குச் சென்று சந்தித்து விட்டு மீண்டும் தன் இல்லத்திற்கு திரும்பி வந்தார்கள்.
வந்தவரிடம் அந்தப் பெண், " நபி (ஸல்) அவர்கள் உங்களை ஏன் அழைத்தார்கள்?" என்று கேட்டார்.
அதற்கு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள்; "கஃபாவின் உள் புறம் நான் தொழுவதற்காக சென்றிருந்தபோது ஆட்டின் இரண்டு கொம்புகளைப் பார்த்தேன்; அவ்விரண்டையும் மறைத்து வையுங்கள் என்று, அங்கேயே உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன்; மறந்துவிட்டேன்;
இப்பொழுதே அவ்விரண்டையும் நீங்கள் மறைத்து வையுங்கள்; ஏனென்றால் கஃபாவிற்குள் தொழுவோரை திசை திருப்பக் கூடிய எப்பொருளும் இருக்கக் கூடாது' என்று கூறினார்கள்" என பதிலளித்தார்.
சுஃப்யானுஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; இந்த ஆட்டுத்தலை நீண்ட காலமாக கஃபாவிற்குள் இருந்தது; கஃபா எரிந்த போது அவ்விரண்டும் எரிந்து போய்விட்டது.
நூல் : முஸ்னது அஹ்மத் - 22710
நபி (ஸல்) அவர்கள் மரணித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் காலத்தில் யஜீத் இறந்து போன செய்தியை கேட்ட முஸ்லிம் பின் அபூ கலிஃபா என்பவரும் அவரின் அடிவருடிகள் சிலரும் சேர்ந்து எஜீதின் மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் கஃபாவிற்கு அருகில் இருந்த நிழல் தரும் பந்தல்கள் மீது தீ வைத்தார்கள். அத்துடன் கஅபாவும் நெருப்புக்கு இரையானது. அச்சமயம் அந்த ஆட்டுத் தலையும் எரிந்துவிட்டது.
நூல்: தாரீக் மக்கா , இப்னு அபீ ஹாதிம், இப்னு கஸீர்.
Comments
Post a Comment