அடுத்த வருடம் ஹஜ் செய்யலாம் என்று அலட்சியமாக இருப்பவரா நீங்கள்?
ஹாஜிகளின் சேவையில்.......19
அடுத்த வருடம் ஹஜ் செய்யலாம் என்று அலட்சியமாக இருப்பவரா நீங்கள்?
=================================
عن ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((تعجَّلوا إلى الحجِّ؛ فإن أحدَكم لا يدري ما يَعْرِض له
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஹஜ்ஜை விரைந்து செய்யுங்கள். ஏனெனில், உங்களில் எவரும் உங்களுக்கு என்ன மாதிரியான இடையூறுகள் ஏற்படும் என்பதை அறிய மாட்டீர்கள்”
நூல்: முஸ்னது அஹ்மத்
"உலகத்தில் வயோதிகர்கள் அதிகமாக ஹஜ் செய்யும் நாடாக இந்தியாவும் இலங்கையும் திகழ்கிறது" என சவூதி அரசு கூறுகிறது.
இந்த காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழும் மக்களை குறித்து அன்றே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்களோ என எண்ணுகின்றேன்.
தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய ஒவ்வொன்றும் கடமையான உடனேயே செய்து விடுகிற நாம், ஹஜ்ஜை அவ்வாறு செய்வதில்லை.
பொதுவாகவே எந்த ஒரு அமலையும் உரிய நேரத்தில் செய்யாவிட்டால் தாமதப்படுத்தியதற்காக உலகிலும் மறுமையிலும் மிகப்பெரிய பின்னடைவும், நஷ்டமும், இழப்பும், கை சேதமும், வருத்தப்படும் நிலையும் உண்டாகும்.
மூத்தா போரின்போது அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் யுத்தத்திற்கு சுமார் ஒரு நாள் தாமதமாகப் போனார்கள்.
அதாவது அந்தப் போரில் தாம் இறந்து விடுவோம் என்பதை அறிந்ததால் இறுதியாக ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் ஜும்ஆ தொழ ஆசைப்பட்டு அவர் தாமதித்தார்.
ஜும்ஆ தொழுகையில் மறைந்து மறைந்து தொழுத இப்னு ரவாஹா (ரலி) அவர்களை கண்டு கொண்ட நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ்வே! பூமி முழுவதையும் நீர் செலவழித்தாலும் கூட, முன்னால் சென்று விட்ட படையினர் அடைந்த நன்மைகளை உம்மால் அடைந்து கொள்ள இயலாது" என்று கூறினார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு நான் இருக்கும் ஒரு காலைப் பொழுதோ, அல்லது மாலைப் பொழுதோ இந்த உலகமும், உலகின் அனைத்துச் செல்வங்களும் எனக்கு கிடைப்பதை விட மேலாக நான் கருதுகின்றேன்!” என்று கூறி, விடை பெற்று யுத்தகளம் நோக்கி விரைந்தார்கள்.
நூல்: முஸ்னத் அஹ்மத்
மூன்று தளபதிகளில் ஒவ்வொருவராக மூத்தா போரில் இறந்த போது அதனை நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தவாறு வருணித்துக் கொண்டிருந்தார்கள்.
தொடர்ந்து வர்ணிக்கின்ற போது நபி {ஸல்} அவர்கள் இப்னு ரவாஹா கொடியை எடுத்து யுத்தம் செய்கிறார்; அவரும் கொல்லப்பட்டார்; இப்போது அந்த போரில் வீர மரணம் அடைந்த இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் புனித ஆன்மாவை தங்க கட்டிலில் வைத்து சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அதில் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் ஆன்மாவை சுமந்துள்ள கட்டிலின் கால் கொஞ்சம் வலைந்திருப்பதை கண்டேன். காரணம் என்னவெனில் (ஸைது, ஜஃபர் ஆகிய இருவரும் நான் சொன்னவுடன் தாமதிக்காமல் போருக்கு போனார்கள் ஆனால்) இப்னு ரவாஹா அவர்கள் கொஞ்சம் தாமதித்து சென்றார்கள்" எனக் கூறினார்கள்.
நூல் : உஸ்துல் ஃகாபா
நபி (ஸல்) அவர்களின் உத்தரவை தாமதப்படுத்தியதற்கே இந்த நிலை என்றால் அல்லாஹ்வின் உத்தரவை தாமதப்படுத்தினால் என்ன நிலை ஏற்படும்?
எனவே தாமதிக்காமல் உடனே ஹஜ் செய்துவிட உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள்.
இருக்கின்ற வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ஹஜ் செய்வதை ஒரு வேலையாகப் பாருங்கள்.
{மேற்கண்ட தலைப்பின் கீழ் பேசி வந்த கருத்து முடிவுற்றது. இப்பொழுது இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் குறித்த ஒரு செய்தி.}
இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உத்தரவை பிற்படுத்தியது தவறுதான் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கும் இல்லை. உங்களுக்கும் இருக்கக் கூடாது.
மரணிக்கப் போகிறோம் என்று தெரிந்தும், நபியின் உத்தரவை மீறி செயல்பட்டால் மிகப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை அறிந்தும், அவர் இக்காரியத்தை செய்திருக்கிறார் என்றால் அது அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பின் அடையாளமாகவே நான் கருதுகிறேன்.
இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் நபிகளாரின் வார்த்தையை மீறி செயல்பட்டு, தனக்கான அடையாளத்தையும், ஒரு முத்திரையையும் பதித்து விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.
ஆமாம்! அவருடைய உயிரை எடுத்துச் செல்லப்பட்ட தங்க தாம்பாளத்தின் நான்கு கால்களில் ஒன்று வளைந்து இருப்பதுதான் அவரின் அடையாளமும், முத்திரையும் ஆகும்.
நாம் மறுமை நாளில் அந்த தாம்பாலத்தை காண நேர்ந்தால், நாம் அதை கண்டதுமே, "இது இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் உயிர் எடுத்துச் செல்லப்பட்ட தாம்பாலம் அல்லவா? என்று நாம் சொல்லவும் பேசவும் செய்வோம்தானே!
நபி (ஸல்) அவர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன்! நாம் நபிகளாரின் காலத்தில் வாழும் நபி தோழர்கள் அல்ல! அல்லாஹ் மற்றும் ரசூலின் உத்தரவை மீறி செயல்படாதீர்கள்.
Comments
Post a Comment