ஏழைகள் ஹஜ் செய்ய ஆசைப்படுவது பேராசையா?
ஹாஜிகளின் சேவையில் ........20
ஏழைகள் ஹஜ் செய்ய
ஆசைப்படுவது பேராசையா?
ஆசை மனிதர்களின் இயற்கை குணங்களில் ஒன்று. ஆசை ஓர் ஆபத்தான நோய் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.
ஆனால் மனிதனின் அடிப்படையே ஆசைதான்! ஆசையை விட்டு விட வேண்டும் என சொல்வதும், அது இல்லாமல் வாழ வேண்டும் என எண்ணுவதும் ஒரு ஆசைதான்!
மனிதன் ஆசைப்பட்டது நிறைவேறாமல் போகும்போதுதான் நிராசை அடைகிறான்; மனம் நொந்து கவலைக்குள்ளாகிறான்.
ஆசை மனிதனில் பாதிப்பு உள்ளாகாத வண்ணம் ஆசைப்படலாம்.
ஒன்றை அடைந்த பிறகு மற்றொன்றை நோக்கி பயணிப்பது தான் ஆசை.
பெரிய ஒன்றை அடைய நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அதை அடைந்த பிறகு அத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டால், அது உடலுக்கும் உள்ளத்திற்கும் நிரந்தர நன்மை தரும்.
நபி சுலைமான் அலை அவர்களின் ஆசையை பாருங்கள்.
قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
என் இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் வழங்கப்படாத ஆட்சி அதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! நிச்சயமாக, நீயே மகத்தான கொடையாளன் ஆவாய்”.
அல்குர்ஆன்: 38: 35
சுலைமான் (அலை) அவர்கள் "எவருக்கும் நீ வழங்கி இருக்காத ஆட்சி அதிகாரத்தை கொடு" என ஆசைப்பட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அவரின் ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றினான் என்பது வரலாறு.
எனவே வசதி இருப்பவர்களும் வசதி இல்லாதவர்களும் ஹஜ் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தால் போதுமானது. நமது ஆசைகளை அல்லாஹ் நனவாக்குவான்.
احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ رواه مسلم
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
“உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்துவிடாதே!
நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய்விட்டால், நான் இப்படி இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!”
நூல்: முஸ்லிம்.
'அனைத்திற்கும் ஆசைப்படு' என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆசைப்படுங்கள் ஹஜ் செய்வோம்.
عن أبي هريرة – رضى الله عنه - قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا تمنى أحدكم فلينظر ما يتمنى فإنه لا يدري ما يكتب له من أمنيته ) رواه مسنداحمد
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”உங்களில் ஒருவர் ஆசைப்பட்டால் அவர் எதை ஆசைப்படுகிறார் என்பதை நன்கு சிந்தனை செய்து கொள்ளட்டும். ஏனெனில், அவரின் ஆசைக்கும் கூலி எழுதப்படுகிறது. (அது என்ன கூலி? எவ்வளவு கூலி? என்பதை) அவர் அறியமாட்டார்”
நூல்: முஸ்னது அஹ்மத்
وعن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم : ( إِذَا تَمَنَّى أَحَدُكُم فَلْيُكثِر ، فَإِنَّمَا يَسأَلُ رَبَّهُ عَزَّ وَجَلَّ
رواه ابن حبان والطبراني
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களில் ஒவ்வொருவரும் அதிகமாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவர் தன் ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்கப்போவது தன்னைப் படைத்த ரப்பிடம் தான்”
நூல்: இப்னு ஹிப்பான்
ஆசைப்படுங்கள் ஹஜ் செய்வோம்.
ஹஜ் செய்ய வேண்டும் என்கிற ஆசை அல்லாஹ்வைப் பற்றிய நினைவு.
அவனை நினைக்கிற நம்மை அவன் மறக்க மாட்டான்.
Comments
Post a Comment