ஹஜ் கடமை செல்வந்தர்களுக்குத்தான்! ஆனால் ஏழைகளே அதிகமாக ஹஜ் செய்கிறார்கள்.
ஹஜ் கடமை
செல்வந்தர்களுக்குத்தான்!
==========================≠
ஆனால் ஏழைகளே
அதிகமாக ஹஜ் செய்கிறார்கள்.
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۖ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
பொருள் :
==========
ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு நீர் அழைப்பு விடுப்பீராக! (உமது அழைப்பை ஏற்று) அவர்கள் நடந்தும், (சந்துகள் குறுக்குத்தெருகள் நிறைந்த) தொலை தூரப் பகுதிகளிலிருந்து, மெலிந்த ஒட்டகங்களின்மீது (பயணித்தும்) வருவார்கள்".
தங்களுக்குரிய நன்மைகளைப் பெற (அவர்கள் வருவார்கள்;) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகங்களைக் குறிப்பிட்ட தினங்களில், அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுப்பதற்காகவும் அவர்கள் வருவார்கள்); எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; ஏழை எளியோருக்கும் உண்ணக் கொடுங்கள். 22 : 27, 28
விளக்கம் :
•••••••••••••••••
ஹஜ், செல்வந்தர்கள் மீது மட்டுமே கடமையான ஒரு அமல்!
ஆனால் இந்த வசனத்தில் அல்லாஹ் ஹஜ்ஜுக்கு வரக்கூடிய ஹாஜிகளை குறித்து சொல்லும் பொழுது செல்வந்தர்கள் எப்படி பயணித்து வருவார்களோ அது போன்று அவர்களின் ஆடம்பரமான பயணத்தைக் குறித்து சொல்லாமல்,
ஏழை எளியவர்கள் பயணித்து வருவதைக் குறித்தே இங்கு விவரமாக குறிப்பிடுகிறான்.
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا
நபியே நீங்கள் ஹஜ்ஜுக்கு அழைப்பு விடுங்கள்; மக்கள் நடந்து வருவார்கள் .
நடந்து வருகிறவர்கள் செல்வந்தர்களா?
ஏழைகள்தானே !
وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ
மெலிந்த ஒட்டகங்களில் அவர்கள் வருவார்கள்!
செல்வந்தர்களின் ஒட்டகம் மெலிந்தா இருக்கும் ?
ஒட்டகம் மெலிந்து காணப்படுகிறது என்றால் அது ஏழைகளின் ஒட்டகம் அல்லவா?
يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ
ஒவ்வொரு சந்து பொந்துகளில் இருந்தும் வருவார்கள் என்றால் சந்துக்களிலும், குறுக்குத் தெருக்களிலும் செல்வந்தர்களா வசிப்பார்கள் ?
செல்வந்தர்கள், விசாலமான தார் சாலைகள் அமைந்த, செல்வந்தர்கள் மட்டுமே மிகுதமாக குடியிருக்க கூடிய பகுதிகளில் அல்லவா அவர்கள் வசிப்பார்கள்.
சந்துகளும் குறுக்குத் தெருக்களும் நிறைந்த பகுதியில் வாழ்வோர் ஏழைகள் அல்லவா?
எனவே இந்த வசனத்தின் மூலம் செல்வந்தர்களை விடவும் அதிகமான ஏழைகள் தான் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்ற கருத்தை மறைமுகமாக இறைவன் சொல்கிறான்.
لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ
அவர்கள் தங்களுக்குரிய இம்மை மறுமையின் பயன்களை அடைவதற்காக வருவார்கள்.
மறுமையின் பயன் என்ன என்பது நமக்கு நன்கு தெரியும்.
இம்மையின் பயன்கள் என்பது ஹஜ்ஜூக்காக வந்திருக்கக் கூடியவர்கள் ஹஜ்ஜுடைய நாட்களுக்கு முன்னும் பின்னும் வியாபாரம் செய்யலாம் என்பதை இந்த வசனம் ஆகுமாக்குகிறது .
மற்றொரு வசனத்திலும், ஹஜ்ஜுக்கு வந்திருப்பவர்கள் வியாபாரம் செய்வது கூடும் என குறிப்பிடுகிறான்.
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ
(ஹஜ் செய்கிற காலத்தில் வியாபாரத்தின் மூலம் ) உங்களைப் படைத்தாள்பவன் உங்களுக்கு அளிக்கும் செல்வத்தை நீங்கள் சம்பாதிப்பது குற்றமாக ஆகாது. 2 : 198
இறைக் கடமையை நிறைவேற்ற வந்திருக்கக் கூடிய செல்வந்தர்களா வியாபாரம் செய்வார்கள்?
மிகுதமான ஏழைகள் தானே, தாம் வந்துச் சென்ற செலவை ஈடு கட்டுவதற்கு யோசிப்பார்கள்! வியாபாரம் செய்வார்கள்.!!
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۖ
அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகங்களை குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதற்காகவும் அவர்கள் வருவார்கள்.
இந்த வார்த்தை மிக மிக ஆழமான ஒரு கருத்தை குறிப்பிடுகிறது.
40 வருடங்களுக்கு முன்புவரை நமது ஊர்களில் இரண்டு பெருநாட்களில் மட்டுமே இறைச்சி எடுத்து சமைக்கும் பழக்கம் இருந்தது. (எனது ஊர் மற்றும் எனது குடும்பத்தின் நிலை இதுதான்.)
அதிலும் குறிப்பாக ஹஜ் பெருநாளில் கண்டிப்பாக இறைச்சி சமைத்து உண்ணுவோம் என்கிற நம்பிக்கையும், அந்த இறைச்சியை எதிர்பார்த்து இருக்கும் மன நிலையும் இருக்கும்.
அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் வாழ்கிற மக்கள் விரும்பி உண்ணுகிற உணவு இறைச்சி தான்.
அந்த இறைச்சியை பிறை 10, 11, 12, 13, ஆகிய குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அல்லவா வழங்குகிறான்.
மனிதர்கள் ஆசையோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்த்த இறைச்சி எனும் உணவை அல்லாஹ் அல்லவா வழங்கி இருக்கிறான்?
அதைத்தான் இந்த வசனம் ,
"உங்களுக்குத் தெரிந்த அந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அல்லாஹ் உங்களுக்கு உணவாக வழங்கி இருக்கிறான் என்பதற்காக (நன்றி செலுத்தும் வகையில்) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்" என்று கூறுகிறான்.
மேலும் செல்வந்தர்கள், தாம் நினைக்கும் பொழுது இறைச்சி எடுத்து சமைத்து உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் இறைச்சியை குறித்து இவ்வளவு ஆழமாக யோசிக்க வேண்டியது இருக்காது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
"நீங்களும் உண்ணுங்கள்; ஏழை எளியோருக்கும் உண்ண கொடுங்கள்" என்கிற இந்த வார்த்தைகள்,
ஏழைகளுக்குதான் ஏழையின் நிலை நன்கு தெரியும், எனவே ஏழைகளாக இருக்கக்கூடிய நீங்கள் (செல்வந்தர்களாக இருக்கக்கூடிய நீங்களும் ) அறுத்த குர்பானி பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்; ஏழை எளியோருக்கும் உண்ண கொடுங்கள் என்று கூறுகிறான்.
وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ
மற்றொரு வசனத்தில் அல்லாஹ், "ஹஜ்ஜுக்கு தேவையானதை நீங்கள் சேகரித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்கள் சேகரிப்பில் சிறந்தது இறையச்சமே" என்று கூறுகிறான்.
ஏழைகள் ஹஜ் செய்ய வேண்டும் என்கிற ஆசையின் காரணமாக தமக்குள் இறையச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே வந்து,
இறையச்சத்தின் வெளிப்பாடாக கொஞ்சம் கொஞ்சமாக பணம் காசுகளை சேகரித்துக் கொண்டே வந்து ஹஜ்ஜை செய்து முடிக்கிறார்கள்.
செல்வந்தர்களில் பெரும்பாலானவர்கள் செல்வம் தமக்கு ஹஜ்ஜை கடமையாக்கி விட்டதே என்பதற்காகவே ஹஜ் செய்கிறார்கள்.
ஆனால் ஏழைகள் அனைவருமே ஹஜ்ஜை செய்ய வேண்டும், அதன் மூலமாகவும் இறையச்சத்தை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்; இறையச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஹஜ்ஜை செய்கிறார்கள்.
எனவே உலகத்தில் இன்றுவரை ஹஜ்ஜை அதிகமாக செய்தவர்கள் ஏழைகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹஜ் செய்யக்கூடியவர்களோடு
பசி இருக்கின்றது .
பசி இருப்பவர்களோடு
அல்லாஹ் இருக்கிறான்.
அல்லாஹ் தன்னை தன் வீட்டில் தேடுவதில்லை !
ஏழைகள் வீட்டில் இறைவன் இருக்கின்றான்.
Comments
Post a Comment