டாக்டர், ஸலாஹுதீன் முஹம்மது அய்யூப் அல் அஜ்ஹரி,

மவ்லானா, மவ்லவீ, அல் ஹாஜ், முஃப்தி, தமிழ்நாடு தலைமை காஜி , டாக்டர்,  ஸலாஹுதீன் முஹம்மது அய்யூப் அல் அஜ்ஹரி, காதிரி, கஸ்னாசானி.
==================================
(1942 - 2025)

عَنْ أَبِي الدَّرْدَاءِؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: وَمَوْتُهُ (أَيِ الْعَالِمِ۞) مُصِيبَةٌ لاَ تُجْبَرُ وَثُلْمَةٌ لاَ تُسَدُّ وَهُوَ نَجْمٌ طُمِسَ مَوْتُ قَبِيلَةٍ أَيْسَرُ مِنْ مَوْتِ عَالِمٍ
رواه البيهقي

அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

ஓர் ஆலிமின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு! நிறைவு செய்ய முடியாத குறை! அவர்  மரணித்ததின் காரணமாக  ஒளியிழந்த நட்சத்திரமாக அவர் ஆகுகிறார். ஓர் ஆலிமுடைய மரணத்தைவிட ஒரு கோத்திரத்தார் அனைவரும் மரணிப்பது மிகச் சாதாரணமானது!'' 

நூல் : பைஹகீ

காஜி அவர்களின் மரணம் இணை இல்லாத இழப்பு! அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து,  ஜன்னத்துல் ஃபிர்தௌசை வழங்கி அவர்களை அமைதிப் பெறச் செய்வானாக! ஆமீன்!!

1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக ராஜாஜி அவர்கள் இருந்தபோது காஜி பதவிக்கு அரசு இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து ஐந்து நபர்கள் விருப்ப மனு அளித்திருந்தார்கள்.

அவர்களுக்கான நேர்காணல் தேதி அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த குறிப்பிட்ட நாளில் நேர்காணல் - இண்டர்வியூவிற்கு நான்கு பேர் குறித்த நேரத்தில் ஆஜராகி இருந்தார்கள்.

முதல் அமைச்சர் ராஜாஜி அவர்கள் வந்திருந்த ஆலிம்களிடம் பேசுவதற்காக தயாரான போது, ஐந்தாவது நபர் ஹபீபுல்லாஹ் என்பவர் வராததை அறிந்து "அவர் ஏன் வரவில்லை?" என்று தம் உதவியாளரிடம் கேட்டார். 

"அய்யா! இன்று வெள்ளிக்கிழமை என்பதால் தம்மால் இண்டர்வியூவிற்கு வர இயலவில்லை" என ஹபிபுல்லாஹ் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார் .

உடனே ராஜாஜி அவர்கள் "ஷரிஅத் சட்டப்படி தீர்ப்பு வழங்கும் காஜி பதவிக்கு இவர்தான் பொருத்தமானவர்; ஹபீபுல்லாஹ் சாஹிபை தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக தேர்வு செய்து அறிவித்து விடுங்கள்" என முதல்வர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உத்தரவுப் பிறப்பித்தார்கள். 

அவ்வளவு பேணுதலும், மார்க்க பற்றுதலும் உடைய மௌலானா, ஹபீபுல்லாஹ் (ரஹ்) அவர்களின் மருமகன் தான்  தமிழ்நாட்டின் தலைமை காஜி  பொறுப்பை அலங்கரித்த  அல்லாமா, முஃப்தி, டாக்டர், ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அஸ்ஹரீ அவர்கள்.

பாரம்பரியம் 
=============

ஷம்சுல் உலாமா, காஜி, உபைதுல்லாஹ் அவர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் 1880 - 1927  ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முதல் காஜி ஆவார்கள். இவர்களின் அடக்கத்தளம் திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் இருக்கின்றது.

காஜி முஹம்மது ஹபீபுல்லாஹ் அவர்கள் 1928 - 1978 வரை சுமார் 50 ஆண்டு காலம் காஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத் தளமும் திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வாலாஜா மஸ்ஜிதில் உள்ளது. 

காஜி ஸைய்யது ஷா முஹம்மது (1978 - 1981 ) அவர்கள் காஜியாக இருந்து செயல்பட்டார்கள். இவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது அங்கேயே வஃபாத் ஆகிவிட்டார்கள். அவர்கள் அடக்கத்தளம் ஜன்னத்துல் முஅல்லாவில் அமைய பெற்றுள்ளது.

காஜி முஹம்மது அஜீஸுத்தீன் அவர்கள் 1982 - 1986 வரை காஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத்தளம் சிட்டி சென்டர் அருகில் உள்ள தஸ்தகீர் ஸாஹிப் தர்கா அடக்கத்தளத்தில் உள்ளது.

இன்றுள்ள டாக்டர், காஜி, முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபீ அவர்கள் 1986 முதல் 25/05/2025 வரை காஜியாக இருந்து செயல்பட்டு வந்தார்கள். 

பிறப்பும் கல்வியும் :
====================

காஜி முஹம்மத் அஜீசுத்தீன் - உம்முல் ஹைர் தம்பதியருக்கு 12/6/1942 - 27/5/1361 அன்று ஹைதராபாத்தில் நமது தலைமை காஜி அவர்கள் பிறந்தார்கள். 

உலகப் புகழ்பெற்ற ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பிஎஸ்சி ஜென்ரல் (B.Sc. General) 1962 ஆம் ஆன்று படித்து முடித்தார்கள். 

1973 ஆம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகம் சென்னையில் அஃப்ஸலுல் உலமா இளம்கலை  கல்வியை கற்றுத் தேரினார்கள்.

1978 இல் "அல் இஜாசத்துல் ஆலியா ஃபீ உஸூலுத்தீன் (ஸஃப்வதுத் தஃப்ஸீர்" என்ற உயர் கல்வியை 
ஆயிரம் ஆண்டு பழமையான உலகப்புகழ் பெற்ற, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான எகிஃப்து 'ஜாமிஉல் அஸ்ஹர்' பல்கலைக்கழகத்தில் 
பயின்றார்கள்.  இங்கு நான்கு வருடங்கள் எகிப்தில் தங்கி இருந்து படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தாயகம் திரும்பி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் M.A., Arabic படித்து 1984 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்கள். 

ஹள்ரத் அவர்கள்  அரபி, உருது, ஃபார்சி, தெலுகு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உரையாடும் திறன் பெற்றவர்வர்கள் ஆவர்.

مولانا محمد غوس شرف الملك ومؤلفاتة العربية

Moulana Mohammed Ghouse Sharf Ul Mulk Wa Mu'allafathul Arabiyah - M.Phil - என்ற தலைப்பில் இளம் முனைவருக்கான பட்டயப் படிப்பை மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1988 ஆம் ஆண்டு படித்து முடித்தார்கள்.

இவர்கள் இந்தப் படிப்பை படிக்கும் பொழுது காஜியாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 
العلماء الكبار من أسرة القاضي بدر الدولة ومساهمتهم للعلوم العربية والإسلامية

Al Ulama Al Kibar Min Usrati Al Qazi Badrud Dawla Wa Musahimatihim Lil Uloom Al Arabiyyah Wal Islamiyyah  எனும் 
தலைப்பில் படித்து 2000 ஆமாவது ஆண்டு பிஎச்.டி (Ph.D) எனும் முனைவர் பட்டம் பெற்றார்கள்.

இவரின் முனைவர் பட்டத்துக்குரிய வழிகாட்டியான சென்னை பல்கலைக்கழக அரபுத் துறை தலைவரும் பலநூறு ஆலிம்களின் வழிகாட்டியும் சிறந்த கல்வியாளருமான மறைந்த நிஜார் அஹ்மது (ரஹ்) அவர்கள் இவரது ஆராய்ச்சி கட்டுரையில் ஒரு புள்ளி ஒரு கமா கூட மாற்றமோ திருத்தமோ செய்யாமல் அப்படியே ஒப்புக்கொண்டார்கள் என்று இப்பொழுதும் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆலிம்களிடையே பேசு பொருளாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி அவர்களின் பரம்பரை 
==========================

நமது தலைமை காஜி அவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, முஹம்மது அஜீசுத்தீன் (ரஹ்) அவர்கள் ஹைதராபாத் நிஜாம்களின் தலைமை செயலக அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில்  பணியாற்றினார்கள்.

நமது தலைமை காஜி அவர்களின் குடும்பத்தினரை அல் நாயித் /  நவாயித் என அழைக்கின்றனர். 

மதீனாவை ஆட்சி செய்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்ற ஆட்சியாளரின் காலத்தில் அவனுடைய கொடுமைகளை தாளாமல் ஒரு கூட்டம் பஸரா (எகிப்து) நகருக்கு குடி பெயர்ந்தது. பின்னர் அவர்கள் இந்தியாவின் வடக்கு பகுதியில் வந்து குடி ஏறினார்கள். 

நாயித் எனும் குடும்பத்தினர் இன்றும்  அரபு நாடு மற்றும் ஈரான், ஈராக் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நவாயித் எனும் குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய தோழர்களின் வம்சாவளியினர் என்பது உண்மை. 

والنَّائِطي: نسبةً لسُلالةٍ من القبائل العربيَّة، هاجرت من المدينة المنوَّرة خوفًا من الحجَّاج بن يوسف الثَّقفي إلى البصرة، ثم إلى السَّاحل الجنوبي للهند، وسكنت به، ومارست التِّجارة والملاحة، ولها جهدٌ عظيمٌ في الدَّعوة، والإرشاد، والتَّأليف، والتَّحقيق، وقد سُمِّيت بـ ((النَّوَائِتِ)) أو ((النَّوَائِطِ)).

இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தான் நமது தலைமை காஜி என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் தங்களை அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை. 'சையது வம்சம்' என்றும் சொல்லிக் கொள்வதில்லை.

காஜி அவர்களின் முன்னோர்கள் :
================================

ஹள்ரத், காஜி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபீ அவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, முஹம்மது அஜீசுத்தீன் (ரஹ்), இவர்களின் தந்தை  ஹள்ரத், காஜி, உபைதுல்லாஹ் ஷம்சுல் உலமா (ரஹ்), இவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, ஸிப்கதுல்லாஹ் மதராஸீ பத்ருத்தவ்லா (ரஹ்), இவர்களின் தந்தை ஹள்ரத், திவான், முஹம்மது கவுஸ் ஷரஃபுல் முல்க் (ரஹ்), 

இவர்களின் தந்தை ஹள்ரத், மவ்லவீ, நஸிருத்தீன் முஹம்மது (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, நிஜாமுதீன் அஹமது ஸகீர் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், முஹம்மது அப்துல்லாஹ் ஷஹீத் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, நிஜாமுத்தீன் அஹமது கபீர் (ரஹ்), 

இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, ஹுசைன் லுத்ஃபுல்லாஹ் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, ரழிவுத்தீன் முர்தழா (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, முஹம்மது கபீர் (ரஹ்), 

இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, அஹமது (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் அபூ முஹம்மத் (ரஹ்), இவர்களின் தந்தை,  ஹள்ரத், ஃபகீஹ் மக்தூம் இஸ்மாயீல் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் மக்தூம் இஸ்ஹாக் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் அதாவு அஹ்மத் (ரஹ் ) ஆவார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்ந்த காலத்தில் மிக பெரும் அறிஞர்களாகவும் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில் தோன்றியவர்கள் தான் நமது தமிழ்நாடு தலைமை காஜி அவர்கள்.

தலைமை காஜி அவர்களின் 
எளிமை, தூய்மை, வாய்மை : 
============================

தலைமை காஜி அவர்கள் தமது அலுவலகத்தில் வெறும் கோரைப்பாயில் அமர்ந்துதான் தம் பணிகளை மேற்கொள்வார்கள்.

பழங்காலத்தில் கணக்குப் பிள்ளைகள் வைத்திருப்பது போன்று மரப்பலகையினால் ஆன சிறியதொரு டேபிள் போட்டு அமர்ந்திருப்பார்கள். 

காலை எட்டு மணிக்குத் தமது பணியைத் தொடங்கி மஃரிப் வரை அலுவலகத்தில் அமர்ந்திருந்து பல பாகங்களிலிருந்து வரும் அனைவருக்கும் கேட்கும் சான்றிதழ்களை வழங்குவார்கள். அதற்காக ஒரு பைசாகூட கட்டணம் பெற மாட்டார்கள். 

தலைமை காஜி அவர்களுக்கு உதவியாளரோ, பியூனோ, டைப்மிஷினோ தொலை பேசியோ எதுவும் கிடையாது. 

ஆடம்பரம் இல்லாமல் மிகப்பணிவுடனும், எளிமையாகவும், புன் சிரிப்புத் தவழ அனைவரையும் வரவேற்று அவர்களின் குறைகளை அறிந்து நிறைவு செய்துத் தருவார்கள். 

எவரையும் கடிந்து கொள்ளாமல் பணியாற்றுவதை காணும்போது நாம் படித்த  கலீஃபாக்களின் வாழ்வுதான் நம் கண் முன்னே வந்துச் செல்லும். 

பார்க்கவும் பழகவும் அவர்கள் எளிமையாக இருந்தாலும் கொள்கையில் உறுதியானவர். இவர்களைப் போன்று கொள்கையில் உறுதியான வேறு எவரையும் நாம் பார்க்க இயலாது. பார்த்திருக்கவும் இயலாது.

இவர்கள் கலந்து கொள்ளும் திருமணங்கள், மீலாது விழாக்கள் ஆகியவற்றுக்கு  தம்மிடமுள்ள இரு சக்கர வாகனத்தில்தான் வருவார்கள். அதற்காக  கட்டணம் எதையும் பெறமாட்டார்கள்.

நிகழ்ச்சி நடத்துனர்கள் எதுவும் நன்கொடை கொடுத்தாலும் கண்டிப்பாக மறுத்துவிடுவார்கள்.

மார்க்கப் பற்றிலும் , கொள்கை உறுதியிலும், பேணுதலான வாழ்க்கையிலும் முன்னோர்களை மிஞ்சிய தனையனாகவே நமது  
தலைமை காஜி அவர்கள் இருந்தார்கள்.

ஆரம்ப காலத்தில் டிவிஎஸ் 50 யோடு வலம் வந்தவர்கள் , பின்பு ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தார்கள். உடல் கொஞ்சம் தளர்வுற்றபோது தான் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். 

சொந்தமாக கார் வாங்கும் தகுதி இருந்தும் , அரசாங்கம் சைரன் வைத்த கார் கொடுப்பதற்கு முனைந்த போதும் வேண்டாம் என்று மறுத்து கடைசி வரை தன்னை ஒரு சாதாரண சேவகனாகவே காட்டிக் கொண்டு வாழ்ந்தார்கள்.

இறைவணக்கமே தனது வாழ்க்கை! இறையச்சமே தனது உயிர்மூச்சு என வாழ்ந்தவர் நமது அரசு தலைமை காஜி அவர்கள் ! 

தமிழ் நாட்டில் தொடர்ந்து 40 ஆண்டுகள் அரசு தலைமை காஜியாக பணியாற்றியவர்கள் !

கலைஞர் , எம்ஜிஆர், ஜெயலலிதா , ஓ.பி.எஸ் , ஈ.பி.எஸ்., மு.க. ஸ்டாலின் போன்ற ஆறு முதல்வர்களின் ஆட்சியில் தலைமை காஜியாக இருந்து  யாரிடமும்  எந்த உதவியும் கோராமல் கோமானாக வாழ்ந்தவர்!

ஒருமுறை ஜெயலலிதா அவர்கள், "உங்களிடம் பேச வேண்டும் நேரம் கிடைக்குமா?" என்று கேட்ட போது சிரித்துக் கொண்டே , "நேரம் இருந்தால் சொல்லுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே நடந்தவர்!

சென்னை புது கல்லூரியில் அரபி பேராசிரியராகப் பணியாற்றிய போது சம்பளம் எதுவும் வாங்காமல் நிறைவாக பணியாற்றியவர்! 

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு முதல்வரையோ , அமைச்சர்களையோ , ஆளுநரையோ கண்டுக் கொள்ளாமல் உடனே அங்கிருந்து புறப்பட்டு விடுபவர் !

தலாக், குலா போன்ற விவாகரத்து விஷயத்தில் யாருடைய பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளாமல் மார்க்க அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய சிறந்த மார்க்க அறிஞர் !

சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள தீவான் சாகிப் பகுதியில் எளிமையாக வாழ்ந்தவர்!

தலைமைக்காஜி எனும் சகாப்தம்
===============================

தலைமைக் காஜி அவர்கள் தன் வாழ்நாளில் ஆறு முதல்வர்களை சந்தித்துள்ளார்கள். இருந்தும் அவர்களில் யாரோடும் நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் தலைமைக் காஜியோடு நெருக்கமாக இருக்க ஆசைப்பட்டார்கள்.

திருமண சபை போன்ற வைபவங்களுக்கு சாதாரணமாக வருவார்கள். கக்கத்தில் ஒரு பையை வைத்திருப்பார்கள். மஜ்லிஸிற்கு வந்தவுடன் அதிலுள்ள வாஸ் கோட்டை எடுத்துப் போடுவார்கள். போட்டவுடன் இராஜ கம்பீரமாக இருக்கும்.

என்னருகில் அமருங்கள்:
========================

ஒர் இஃப்தார் நிகழ்ச்சியை  அ.தி.மு.க. ஆளும் அரசு ஏற்பாடு செய்திருந்தது. அது ஒரு அரசு விழா ஆகும்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேடை ஏறி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார்கள். 
பின்னர் வந்த காஜி சாஹிப் அவர்கள் மேடையில் ஏறியதும்  முன்னிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.

அதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு அமைச்சரை அழைத்து, "காஜி அவர்களை என்  ஆசனத்திற்கு அருகில் அமரச் செய்யுங்கள்" என்று சொன்னார்கள். 

அவரும் சென்று, "வாருங்கள் முதலமைச்சர் அழைக்கிறார்கள் ; முதல்வருக்கு அருகில் உள்ள இருக்கையில் வந்து அமருங்கள் " என்று கூறினார்.  

வழமைப் போல் காஜி சாஹிப் அவர்கள் சிறிய ஒரு புன்னகையுடன் அதை தவிர்த்து விட்டார்கள். 

இதனை சற்றும் அதை எதிர்பார்க்காத முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தானே எழுந்துச் சென்று காஜி சாகிப் அவர்களை சந்தித்து அவர்களின் காதருகில் குனிந்து, "எனக்கு அருகில் வந்து அமருங்கள்" என்று சொல்லி இருக்கையை தம் கைகளை நீட்டி சுட்டி காட்டினார்கள்.  

அதன் பின்னர் காஜி ஸாஹிப் அவர்கள் எழுந்துச் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்தார்கள். 

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே எழுந்துச் சென்று அழைத்தது காஜி ஸாஹிபைத் தவிர வேறு யாருக்காவது இருக்குமா?

"கேட்டுப் பெறுதல்  
இறைவனிடம் மட்டுமே.."
~~~~~~~~~~~~~~~~~~

மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் காஜி அவர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார்கள். 

ஒருமுறை அன்வர் ராஜா எம்.எல்.ஏ. அவர்களை அழைத்து, "காஜி அவர்களுக்கு அரசு சார்பில் ஒரு கார் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்; அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்ற போது அன்வர் ராஜா அவர்களும் காஜி அவர்களை சந்தித்து முதலமைச்சர் அவர்களின் ஆசையை தெரிவித்தார்கள். 

அன்பான அந்த கட்டளையை மறுக்க முடியாமல் சரி என்று காஜி அவர்கள் சொல்லிவிட்டார்கள். 

இதை அன்வர் ராஜா அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் சொல்ல.. அவர்கள் மகிழ்ச்சியுடன், "இது அரசு சார்பாக வழங்கப்படுவதால் சில ஃபார்மாலிட்டிஸ்காக காஜி அவர்களுடைய லெட்டர் பேடில் இது சம்பந்தமாக வேண்டுகோள் விடுத்து ஒரு கையெழுத்தை மட்டும் போட்டு கொடுக்கச் சொல்லுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று முதலமைச்சர் அவர்கள் கூறினார்கள்.

இந்தத் தகவலை மீண்டும் தலைமை காஜி அவர்களிடத்தில் அன்வர் ராஜா அவர்கள் சொன்னபோது, "என் வாழ்நாளில் நான் ஒருபோதும் யாரிடத்திலும் எதையும் கேட்டு பெற்றதில்லை; ஃபார்மாலிட்டியாக இருந்தாலும் லெட்டர் பேடு மூலமாக அரசு வழங்கும் காரை கேட்டு தான் பெற வேண்டும் என்றால் அது எனக்கு தேவை இல்லை; "கேட்டுப் பெறுதல் என்பது என் இறைவனிடம் மட்டுமே".. என்று அழகாய் கூறி மறுத்துவிட்டார்கள்.

பாக்கியம் நிறைந்த 
ஜனாஸா தொழுகை 
~~~~~~~~~~~~~~~~~

ஒரு ஆலிம் இப்படி கூறினார்; 
"ஹழ்ரத்..! நான்  காலையிலேயே தலைமை காஜி அவர்களின் ஜனாஸாவை பார்த்துவிட்டு வந்து விட்டேன். அது போதும் என்று தான் நினைத்திருந்தேன்.  கஃபாவிற்கு ஓர் ஈர்ப்பு இருப்பது போல், இந்த மகத்தான மனிதரின் மீதும் அல்லாஹ் ஒர் ஈர்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் போலும். 

என்னால் இருப்புக் கொள்ள முடியவில்லை. பாக்கியமான மனிதரின் ஜனாஸாவில் கலந்து கொள்வதும் ஒரு பாக்கியம் என்று எண்ணி ஜனாஸா தொழுகையிலும்  கலந்து கொள்ள வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

காலையிலேயே தலைமை காஜி அவர்களின் ஜனாஸாவை பார்த்துவிட்டு வந்த பல ஆலிம்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். அனைவருக்கும் அந்த எண்ணம் தான் மனதில் ஓடி இருக்கும் போல் தெரிகிறது.

அதைப்போல் எவ்வளவு பெரிய பதவிகளை நாம் பெற்றிருந்தாலும்
புகழ், பணம், அதிகாரம் என்கின்ற போதைகள் நம் தலையில் ஏறி விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பணிவு என்கின்ற ஆடையை மட்டும் நாம் எப்பொழுதும்
அணிந்திருக்க வேண்டும்.

அப்பொழுதான் கஃபன் என்கிற  ஆடையை அணிந்து செல்லும் போது நாம் நல்லவிதமாக போய் சேருவோம் என்பதையே காஜி அவர்களின் ஜனாஸா தொழுகைக்கு கூடிய கூட்டம் நமக்கு உணர்த்தும் பாடம்.

தலைமை காஜி அவர்களின் 
அறிவும் அனுபவமும் நிகறற்றது 
=============================

ஒருவருடைய தங்கைக்கு நான் இரண்டாம் திருமணம் செய்து வைத்தேன்.

அவர்கள் தாய்லாந்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அங்கேயே முறைப்படி அவர்கள் விவாகரத்து  பெற்றிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அவருடைய தங்கைக்கும் இங்குள்ள ஒருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயத்து என்னை திருமணம் செய்து வைக்க அழைத்து இருந்தார்கள். 

அழைத்தவர் எங்களது மஹல்லா வாசி தான். தன்னிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதாக கூறினார். அதை நம்பி நான் திருமணம் செய்து வைத்து விட்டேன். 

அந்த ஆவணங்களை நான் முன்கூட்டியே பார்வையிடவும் இல்லை. என் பார்வைக்கு அவர் வழங்கவும் இல்லை. 

திருமணத்திற்கு பின்னர் எனது தஃப்தரை எடுத்துச் சென்று காஜியிடம் வழங்கினேன். இரண்டாம் திருமணத்திற்கான ஆவணங்களையும் வழங்கினேன். 

அவர் அதை சரி பார்த்து விட்டு, "மௌலானா! எல்லாம் சரியாக இருக்கிறது; ஆனாலும் பெண் தரப்பினருடைய சொந்த ஊரின் அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டுதான் நீங்கள் இந்த திருமணத்தை செய்து வைத்திருக்க வேண்டும்; 

இவர்களுடைய முழுமையான தகவல்கள் அனைத்தும் ஊர்வாசிகளுக்கு மட்டுமே நன்கு தெரியும்; அதனால் இனி இப்படி செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்பினார்கள்.

இந்த அறிவுரை, மற்றொரு இரண்டாம் திருமணத்தின் போது என்னை ஏமாற்ற நினைத்தவரிடம் இருந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்டேன்.

காஜி அவர்களின் அனுபவம், மக்களை புரிந்து வைத்திருந்த விதமும் நிகரற்ற அறிவு.

காஜி அவர்களை  நடமாடும் இறைநேசராகவே இந்த இஸ்லாமிய சமூகம் பார்த்தது.

எளிமையின் அடையாளமாகவும் உருவமாகவும் அனைவராலும் பார்க்கப்பட்ட பண்பாளர். 

பெருமை இல்லாதவர்; அதை நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் அடையாளமாகவும், இஸ்லாமியர்களின் அடையாளமாகவும் வாழ்ந்த முன்மாதிரி மிக்கவர்!

வருடத்தில் இரண்டு மாதம் இவரின் இறுதி வார்த்தையை எதிர்பார்த்தே இந்த சமூகம் காத்திருந்தது! 

இவ்வாண்டு பக்ரீத் பிறையை அறிவிக்க இவரில்லாமல், இவர் குறித்த மரண அறிவிப்பை சமூகம் அடைந்திருக்கிறது. 

24.5.2025 இரவு முன்னேறம் 9 மணி அளவில் காலமானார்கள். 

25.5.2025 அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழுகை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலிலும், நல்லடக்கம் தஸ்தகீர் சாஹிப் தர்கா பள்ளிவாசலிலும் நடைபெற்றது.

அல்லாஹ் அவர்களின் மண்ணரையை பிரகாசமாகவும், மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்சையும் நஸீபாக்குவானாக! ஆமீன் !!

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்,
மவ்லவீ, B.M.  கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் 
================================
3/6/2025

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்