தமிழ்நாடு தலைமை காஜி அவர்கள் குறித்து
மர்ஹூம், அல் அஜாரி, காதிரி, அல் கஸ்னாஸானி தமிழ்நாடு தலைமை
==================================
சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தலைமை காஜி ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களுக்காக இரங்கல் கூட்டத்தை சைதாப்பேட்டை நவாப் பள்ளியில் வைத்து நடத்தியது. அப்பொழுது பேசப்பட்ட கருத்துக்கள்.
ரஹ்மத் பதிப்பகத்தின் உரிமையாளர் M.A. முஸ்தபா அண்ணன் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
24.11. 2024 அன்று "இமாம் புகாரி (ரஹ்) விருது" வழங்கும் விழாவை நடத்தினோம் ; விருது வழங்குவதோடு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிளியும் வழங்குவது வழக்கம்.
தமிழ்நாடு தலைமை காஜி அவர்களை சந்தித்து மேற்கண்ட விபரங்களை கூறி அழைப்பு விடுத்தோம்; அப்பொழுதே அவர்கள் "நிகழ்ச்சிக்கு வருகிறேன்; கேடயங்களை பெற்றுக் கொள்கிறேன்; ஆனால் எனக்கு பரிசுத்தொகை வேண்டாம்" என்று சொன்னார்கள்.
இந்நிலையில் விழா நாளில் விழா மிகச் சிறப்பாக கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை காஜி அவர்கள் வருவார்களோ, மாட்டார்களோ என்ற பதற்றத்தில் நாங்கள் இருந்தோம்; ஏனென்றால் அவர்களின் உடல்நிலை அவ்வளவு நலமாக இல்லை.
இந்நிலையில் அந்த முதுமையிலும், உடல் நிலையை பொருட்படுத்தாமல் எங்களது அழைப்பை ஏற்று எங்கள் நிறுவனத்தை கண்ணியப்படுத்தும் விதமாக வந்து கலந்து கொண்டார்கள். அது இன்றும் எங்களுக்கு மன நிறைவை வழங்கிக் கொண்டிருக்கிறது.
விழா முடிவுற்றதும் தலைமை காஜி அவர்களுக்கு ஒரு கிஃப்ட் பேப்பரில் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிளியை வைத்து சுருட்டி ஒரு ஃபிளாஸ்க் கிப்ட் வழங்குவது போன்ற தோரணையில் சபையில் கொடுத்து அனுப்பி வைத்து விட்டோம்.
வீட்டுக்குச் சென்ற மறுநாள் அந்த கிஃப்ட் பேப்பருக்குள் என்ன இருந்தது என்று தனது பேரனிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள் தலைமை காஜி அவர்கள்.
நாங்கள் சொல்லி அனுப்பியது போன்று பேரன் அவர்களும் எவ்வளவோ சமாளித்து பார்த்திருக்கிறார்; ஆனால் தலைமை காஜி அவர்களை ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க இயலவில்லை; பேரன் உண்மையை சொல்லிவிட்டார்.
உடனே தலைமை காஜி அவர்கள் இந்த பணத்தை இப்பொழுதே எடுத்துச் சென்று உரியவரிடம் ஒப்படைத்து விடு; இல்லை என்றால் நான் ஆட்டோ பிடித்து சென்று சம்பந்தப்பட்டவர் இடம் வழங்கிடுவேன்" என்று கூறினார்கள்.
தலைமை காஜி அவர்களின் மனநிலையையும் உறுதியான சொல்லையும் கேட்ட பிறகு வீட்டார் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு உடனே எடுத்து வந்து என்னிடம் வழங்கி விட்டார்கள்.
யாரிடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் எதையும் வாங்காத மனப்பான்மை தம் இறுதி காலம் வரை கடைபிடித்து வாழ்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
°
|
°
சென்னை ஜமாலிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்களில் ஒருவரான அப்துல் ரஹ்மான் பாகவி ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.
எங்கள் மதரஸாவிற்கு ஃபத்வா கேட்டு ஒரு கடிதம் வந்தது; அதில் உள்ள கேள்வி.
எங்கள் தந்தை இறப்பதற்கு முன் உயில் எழுதி வைத்திருக்கிறார். மகனுக்கு இதை இதை கொடுங்கள்; மகளுக்கு இதை இதை கொடுங்கள் என்று உள்ளது. இப்பொழுது அவர் இறந்துவிட்டார் நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?
ஜமாலிய்யா ஃபத்வா குழுவினருக்கு இதற்கான பதில் தெரியும் என்று இருந்தாலும் தலைமை காஜி அவர்கள் அந்த நேரம் எங்களது மதரஸாவிற்கு வந்திருந்தார்கள் என்பதால் ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்கலாம் என எண்ணி கேட்டோம்.
அப்பொழுது அவர்கள் சொன்னார்கள்; ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு அவன் எழுதிய உயில் செல்லாது; ஏனென்றால் ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய சொத்தை எப்படி பங்கீடு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவுபடுத்தி இருக்கின்றான்;
எனவே திருக் குர்ஆனுடைய சட்டம்தான் இப்பொழுது செல்லுபடியாகும்; இறந்தவருடைய இறுதி வசியத் - உயில் செல்லாது.
எனவே அதை தூக்கிப் போட்டுவிட்டு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்;" என்று கூறினார்கள்.
மேலும் தலைமை காஜி அவர்கள் 1985 களுக்கு முன்பு ஜமாலிய்யா அரபுக் கல்லூரியில் கௌரவ பேராசிரியராக சில காலம் பணியாற்றினார்கள்.
°
|
°
சென்னை ஜமாலிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் நியாஸ் அஹமது ஜமாலி ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.
ஒருமுறை அமெரிக்கா கவுன்சிலேடர் அவர்கள் தலைமை காஜி அவர்களை பார்க்க வருவதாக நேரம் கேட்டிருந்தார். காஜி அவர்களும் காலை ஒன்பது மணிக்கு வரும்படி நேரம் வழங்கி இருந்தார்கள்.
காஜி அவர்கள் காலை சுபுஹுத் தொழுகை முதலே ஒன்பது மணி வரை பொதுமக்கள் அனைவரையும் பார்ப்பதும், அவர்களுக்கான சர்டிஃபிகேட் - ஆவணங்களை வழங்குவதும், அவர்களுடைய குறைகளை தீர்ப்பதும்மாக வேலைகளை பார்ப்பது வழக்கம்.
அப்படி அவர்கள் தமது பணிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு கவுன்சிலேட்டர் அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் . பத்து மணி ஆகியும் அவர் வரவில்லை.
பத்து மணிக்கு பிறகு அமெரிக்க கவுன்சிலேட்டர் அவர்கள் வந்தார்கள்; பள்ளிவாசலில் நமது காஜி ஸாஹிப் அவர்களை தவிர வேறு யாருமில்லை. அவர் பல கார்கள் புடை சூழ வந்திருந்தார்.
அமெரிக்க கவுன்சிலேட்டர் அவர்கள், நமது காஜி அவர்களிடம், "தமிழ்நாடு தலைமை காஜி எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் தான் காஜி" என்று கூறினார். இதை கேட்டதும் அவர் திகைத்து போனார்.
இவ்வளவு பெரிய மாநிலத்தின் தலைமை காஜி எளிமையாக, சாதாரணமாக, இருக்கிறாரே
என்று எண்ணி பூரித்துப் போனார். அதை தன்னுடன் வந்திருந்த பலரிடமும் சொல்லி பெருமிதம் கொண்டார்.
இவ்வாறு காஜி அவர்கள் மிகவும் எளிமையானவராக தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினார்கள்.
°
|
°
சென்னை மாவட்ட ஜமாஅதுல் உலமா சபையின் தலைவர் பி. எஸ். ஷாஹுல் ஹமீது ஸிராஜி ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.
2002 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நான் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளராக இருந்த போதே தலைமை காஜி அவர்களோடு நெருங்கிய தொடர்பு இருந்தது.
அதனால் அவ்வப்பொழுது அவர்களை ஜமாஅத்துல் உலமா சபை சார்பாகவும், திருமண தஃப்தர்களை கொண்டு சென்று வழங்குவதற்காகவும் சந்திப்பேன்.
ஒருமுறை திருமண தஃப்தரை வழங்குவதற்காக சென்றிருந்த போது காஜி அவர்கள் என்னிடம் சொன்னார்கள்;
"நீங்கள் உங்களுக்கென ஒரு தஃப்தரை தனியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; நான் தருகிறேன்; உங்களுக்கு அது பயனாக இருக்கும்; அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
"இல்லை; எனக்கு வேண்டாம்; பள்ளிவாசலுடைய தஃப்தர் மட்டுமே எனக்கு போதுமானது" என்று சொல்லிவிட்டேன்.
காலங்கள் உருண்டோடியது; நான் சென்னை மடுவன்கரை பள்ளிவாசலில் இமாமாக சேர்ந்தேன்; அது மிகப்பெரிய மஹல்லா! அந்த மஹல்லாவில் ஒரே நாளில் இரண்டு மூன்று திருமணங்களெல்லாம் நடைபெறும்.
அதனால் ஒரே தஃப்தரை வைத்து பல இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் திருமணம் செய்விக்க செல்ல இயலவில்லை.
எனவே ஏற்கெனவே காஜி அவர்கள் நமக்கென தனியாக ஒரு தஃப்தரை வழங்குவதாக சொன்னார்களே என்று எண்ணி அவர்களிடம் சென்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "இரண்டு தஃப்தர் ஒரு மஹல்லாவிற்கு வழங்குவது வழக்கமில்லை; சென்னை பெரம்பூர் ரஹ்மானியா பள்ளிவாசலுக்கு மட்டும் தான் இரண்டு தஃப்தர் வழங்கப்பட்டுள்ளது; வேறு யாருக்கும் வழங்க இயலாது" என்று முடிவாக சொல்லிவிட்டார்கள்.
பிறகு நான், "தாங்கள் சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் இப்படி சொன்னீர்களே! அதை முன் வைத்து தான் இப்பொழுது கேட்கிறேன்" என்று சொன்னேன்.
இவ்வாறு நான் கூறியதும் "அப்படியா நான் சொன்னேன்?" என்று கேட்டுவிட்டு, தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே எனக்கு மற்றொரு தஃப்தரை வழங்கினார்கள்.
இப்படி காஜி ஸாஹிப் அவர்கள் தம் வாக்கை காப்பாற்ற கூடியவர்களாக எல்லா காலத்திலும் இருந்துள்ளார்கள்.
°
|
°
மவ்லவி, அப்துல் காதர் ஸிராஜி ஹள்ரத் அவர்கள் சொன்னார்கள்.
தமிழ்நாடு தலைமை காஜி அவர்களை எனக்கு நன்குத் தெரியும்; எனக்கு நெருங்கிய பழக்கம் உடையவர்கள் தாம்.
இந்நிலையில் ஒரு நாள் ஒரு திருமணத்தை முடித்துவிட்டு அந்த தஃப்தரை எடுத்துச் சென்று அவர்கள் உள்ள பள்ளிவாசலில் வழங்கினேன்; அவர்கள் அதை பார்த்துவிட்டு, "இதில் இன்னின்ன தவறுகள் இருக்கிறது இதை சரி செய்து கொண்டு வாருங்கள்" என்று முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு பேசினார்கள்.
மேலும் என்னை அவர்களுக்கு தெரியாதவர்கள் போலவே நடந்து கொண்டார்கள். தெரிந்தவர், உறவுக்காரர் என்பதெல்லாம் வெளியில் தாம். அலுவலகப் பணி என்று வந்துவிட்டால் தனது வேலையில் எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள்.
அதாவது அலுவலகத்துக்கு வெளியே ஜமாலாகவும் (சிரித்துப் பேசி அழகாக காட்சியளிப்பார்கள்.) அலுவலகத்திற்குள் வந்து விட்டால், ஜலாலாகவும் ( மிக நேர்மையான ஆட்சியாளராக காட்சியளிப்பார்கள்.) இருந்து செயல்படுவார்கள்.
இந்த இரங்கல் கூட்டம் டாக்டர் ஸலாஹுத்தீன் அய்யூபி ஹள்ரத் அவர்களுக்கு, அவர்கள் தமிழ்நாடு தலைமைக் காஜியாக இருக்கிறார்கள் என்பதற்காக நடத்தப்படவில்லை.!
அவர் ஓரு சிறந்த இறைநேசர், ஆலிம்களுக்கும் பொது மக்களுக்கும் சிறந்த முன்மாதிரி என்பதால்தான் இந்த இரங்கல் கூட்டம் நடத்தப்படுகிறது.
Comments
Post a Comment