நோன்பு நோற்ற பிறகு தான் இஸ்லாமியர்களின் இரண்டு பெருநாளும்.....

நோன்பு நோற்ற பிறகு தான் 
இஸ்லாமியர்களின் இரண்டு பெருநாளும்.....
==================================

அரஃபா நோன்பில் உள்ள ஆன்மீகம் 
÷÷÷÷÷÷÷÷÷÷÷===========÷÷÷÷÷÷÷÷÷÷÷

ரமலான் மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமானது அரஃபா நோன்பு!

அதைப்போல் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நாட்கள் !

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் நற்காரியங்கள் செய்வது மிகவும் விருப்பமானது ;  இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் (விருப்பமானதாக) இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?” என்று கேட்க, “ஆம்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட ; 

ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர“ என்று  கூறினார்கள்.

நூல்: புகாரி.

எனவே துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், அல்லாஹ்விற்கும் ரசூலுக்கும் மிகவும் விருப்பமான நாட்களாகும். அந்த நாட்களில் ஒரு நாளான அரஃபா நாளன்று நோன்பு நோற்பது நபிவழி!

عَنْ أَبِي قَتَادَةَ أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ قَالَ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ
ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ ﻟﻠﻨﺴﺎﺋﻲ 2771

அபூ கதாதா ரலி அவர்கள் அறிவிப்பதாவது;  நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் ஒன்பதாவது நாளில் நோற்கப்படும்) அரஃபா நோன்பு குறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு அவர்கள், “முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்” என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் /  நஸாயீ / அபூ தாவூத் / திர்மிதீ / அஸ் ஸுனன் அல் குப்ரா 2771

ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் மதீனாவில் இருக்கும் போது ஒரு நபர் அரஃபா நாளன்று வந்தார். 

அவர் அரஃபா நோன்பு  நோற்கவில்லை. "இன்று ஹஜ்ஜுப் பெருநாளாக இருக்குமோ என்ற சந்தேகத்தினால் தான் நான் அரஃபா நோன்பு நோற்கவில்லை" என்று கூறினார். 

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "மக்கள் பிறை கண்டு நோன்பு வைக்கும் நாள்தான் நோன்பு நாள். 

மக்கள் பெருநாள் கொண்டாடும் நாள் தான் பெருநாள். 

(நாமாக ஒரு நாளை சந்தேகப்பட்டு நோன்பு நோற்காமல் இருக்க வேண்டிய அவசியமில்லை )" என்று கூறினார்கள். 

நூல்: பைஹகீ

அரஃபா நாளை முறையாக கணக்கிட்டு, நோன்பு நோற்காமல் சாக்குப் போக்கு சொல்லும் நபருக்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

எனவே அரஃபா நாள் அன்று ஹஜ்ஜுக்கு போகாத அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்க வேண்டும்;  அதுவே சிறந்தது. 

ஹாஜிகள் அரஃபா நாளன்று அரஃபாவில் இருக்கும் போது  நோன்பு நோற்கமாட்டார்கள். நோன்பு நோற்கவும் கூடாது; 

அவர்கள் ஹஜ் செய்ததின் மூலம் அன்று பிறந்த பாலகனைப் போல திரும்புகின்றனர். 

ஹஜ்ஜுக்கு செல்ல முடியாத நாம் அரஃபா  நோன்பை நோற்பதின்  மூலம் முந்தைய ஒரு ஆண்டு செய்த பாவத்தையும், எதிர்வரும் ஒரு வருடத்தில் செய்கிற பாவத்தையும் இந்த அரஃபா தினத்தின  நோன்பு அழித்து விடுகிறது. 

எனவே நாமும் கூட ஏறத்தாழ அன்று பிறந்த பாலகர்கள் போல் ஆகின்றோம்.

இவ்வளவு பெரிய சிறப்பை இந்த அரஃபா நோன்பு வழங்குகிறது என்பதை புரிந்து கொண்டு, கவனக்குறைவாக இல்லாமல் நோன்பு நோற்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். 

மேலும் இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்களும் அடியார்களின் சிறப்பான வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து வர வேண்டும் எனும் வகையில் அமையப் பெற்றுள்ளது.

ஒரு முஃமினின் மகிழ்ச்சியும் இபாதத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். 

இந்த வகையில் நோன்புப பெருநாள் -  ஈதுல் ஃபித்ரு , கடமையான நோன்பைத் தொடர்ந்து வருகிறது. அது போல் ஹஜ்ஜுப் பெருநாள் கடமையான ஹஜ்ஜைத் தொடர்ந்து வருகிறது. 

மேலும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்ற பிறகு ஈதல் ஃபித்ருடைய பெருநாளை கொண்டாடுகிறோம். 

துல்ஹஜ் மாதத்தில் அரஃபா நாளுடைய நோன்பை நோற்ற பிறகு ஈதுல் அல்ஹா பெருநாளை கொண்டாடுகிறோம்.

"இஸ்லாமியர்களின் இணையற்ற இரண்டு ஈது பெருநாளை நோன்பு நோற்ற பிறகே கொண்டாடுகிறோம்" என்பதையும், நோன்பு நோற்றவர்களுக்கு தான் பெருநாள் என்பதை மறைமுகமாக மார்க்கம் கூறுவதாக ஞான வானவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஹஜ்ஜுக்கு சென்ற முஸ்லிம்களும், ஹஜ்ஜுக்கு செல்லாமல் தமது ஊரிலேயே இருக்கும் முஸ்லிம்களும்  அல்லாஹ்விடமிருந்து அவனுடைய மகத்தான பாவ மன்னிப்பை எதிர்பார்த்தே அவரவருக்கு இயன்ற அமலை செய்து பாவமன்னிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை! 

அல்லாஹ் நம் அனைவருக்கும் முழுமையான பாவ மன்னிப்பை வழங்குவானாக!

அரஃபா உடைய நாளில் நோன்பு நோற்று முறையாக இரண்டாவது பெருநாளை கொண்டாடுவோம்.

அனைவருக்கும் ஈதுல் அல்ஹா உடைய பெருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்