குர்பானி இறையச்சத்தின் வழிபாடா?

குர்பானி இறையச்சத்தின் வழிபாடா? 
==================================

முற்காலத்தில் அரசர்களை சந்திக்க வரும் கிராமப்புற மனிதர்களும், பொதுமக்களும் அன்பளிப்புகளை கொண்டு வந்து கொடுப்பார்கள் .

அவர்கள் தங்களிடம் இருக்கும் கோழி, முயல், திணை, தேன், நெய் போன்ற சாதாரணமான பொருட்களையே  அன்பளிப்புச் செய்வார்கள். 

அரசரின் அந்தப்புரத்திலும் கஜானாவிலும் இவர்கள் வழங்குவதை விட சிறந்தவை ஏராளமாக இருக்கும். ஆனாலும் அவர்கள் கொண்டு வருவார்கள். 

அரசரின் பிறந்த நாள், பதவியேற்ற நாள் போன்ற சிறப்புக்குரிய நாட்களில் ஊர் மக்கள் அனைவரும் வரிசையாக வந்து இவ்வாறு அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம்.  

அரசர் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமர்ந்திருப்பார்.

பொதுமக்கள் ஒவ்வொருவராக முன்வந்து ஸலாம் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு தம் அன்பளிப்பு பொருட்களை சமர்ப்பிப்பார்கள்.  

அரசர் அவை அனைத்தின் மீதும் தன் வலது கரத்தை வைத்து அதை ஏற்றுக் கொண்டதாகக் கூறுவார்.

பின்னர் அவரிடமே அந்தப் பொருளை கொடுத்து, "தாங்களே எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லுவார்; அவர்கள் அதை எடுத்துச் சென்று விடுவார்கள். 

இவ்வாறுதான் அடியார்கள் வழங்குகிற குர்பானி பிராணியில் இருந்து அல்லாஹ் எதையும் தனக்காக எடுத்துக் கொள்வதில்லை. 

இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, அவன் மீதுள்ள உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, இறைவன் சொன்னான் என்கிற கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதமாக, இறையச்சத்தின் வெளிப்பாடாக குர்பானியை நாம் கொடுத்தால் அல்லாஹ் அதை தன் வலகரத்தால் ஏற்றுக் கொள்கிறான். 

அந்தப் பிராணியின் அனைத்து பாகங்களையும், "நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!" என்று அரசர் சொல்வது போல் அல்லாஹ்  கீழ்காணும் வசனத்தில் கூறுகிறான்.

لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ ۚ  الحج ٣٧

அல்லாஹ்வுக்காக பலியிடப்படுகின்றவற்றின் இறைச்சிகளோ உதிரங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை எனினும் உங்களிடம் உள்ள இறையச்சமே அவனை அடையும்.
22 : 37

எனவே இறையச்சத்தின் வெளிப்பாடாக குர்பானி கொடுக்கப்பட வேண்டுமே தவிர, பெருமைக்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ, ஊர் பேச வேண்டும் என்பதற்காகவோ கொடுக்கப்படுவது அல்ல குர்பானி!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்