நபி ஸல் அவர்கள் கேட்டார்கள் இமாம் கஸ்ஸாலீ எங்க?

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

மாதம் : 7

தொடர் : 44

இமாம் கஸ்ஸாலீ எங்கே? 
=========================

இமாம் அபுல் ஃபதஹ் அல் ஸாவீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; 

நான் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் நான் நுழைந்தேன் ; மக்கள் திடீரென என்னை நோக்கி வந்தார்கள்; அவர்களுக்கு இடையே மிகப் பெரிய முற்றம் -  ஹால் இருந்ததைக் கண்டேன்; அங்கே அதிகமான மக்கள் அமர்ந்திருந்தார்கள்.

அங்கு இருந்த ஒவ்வொருவருடைய கைகளிலும் மொத்தமான ஒரு நூல் இருந்தது; அவர்கள் அனைவரும் ஒரு மனிதரை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.

நான் அங்கிருந்தவர்களிடம், "அவர்கள் ஏன் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்; நடுவில் அமர்ந்திருப்பது யார்?" என்று கேட்டேன்.

அவர்கள், "நடுவில் அமர்ந்திருப்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்; அவர்களை சுற்றி அமர்ந்திருப்பவர்கள் மத்ஹபுகளை தோற்றுவித்தவர்கள் ஆவர்;

மேலும் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தமது மத்ஹபுகான கொள்கை கோட்பாடுகள் அடங்கிய நூலை பெருமானாரிடம் வாசித்துக் காட்டி, அவர்களுக்கு முன்னிலையிலேயே அதை சரி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.

இமாம் அபுல் ஃபதஹ் அல் ஸாவீ (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்; 

அந்தக் கூட்டத்தில் ஒருவராக நானும் இருந்து கொண்டு கவனித்துக் கொண்டே இருந்தேன்; அப்பொழுது அங்கே வட்டமாக அமர்ந்து இருந்தவர்களில் ஒருவர் எழுந்து வந்தார்; அவருடைய கைகளில் ஒரு பெரிய நூல் இருந்தது. 

"இவர் யார்?" என்று அருகில் இருந்தவரிடம் கேட்டேன்; "இவர் தான் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள்" என்று சொன்னார்கள். 

அப்பொழுது இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் வட்டமாக அமர்ந்து இருப்பவர்களுக்கு நடுவில் சென்று அங்கிருந்த நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். இமாம் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் அங்கே வந்ததற்கும் , நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்ததற்கும் நபிகள் நாயகம்  அவர்கள் சந்தோசம் கொண்டார்கள். 

பின்னர் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் தனது கொள்கைகள் அடங்கிய மத்ஹப் நூலை வாசிக்கத் தொடங்கினார்கள்.

பின்னர் மற்றொருவர் வந்தார்; "இவர் யார்?" என்று கேட்டேன்; "இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள்" என்று சொல்லப்பட்டது. அவருடைய கைகளில் ஒரு பெரிய நூல் இருந்தது; அவரும் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டு இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தார்கள்.  

தமது கொள்கைகள் அடங்கிய மத்ஹப் நூலை வாசித்து காட்டினார்கள்; 

பிறகு ஒவ்வொரு மத்ஹப் சார்ந்த இமாமும் வந்தார்கள்; அதனால் குறைவானவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். 

இவ்வாறு ஒவ்வொருவரும் வரும்பொழுது கடைசியாக வந்து அமர்ந்தவருக்கு அருகில் அமர்ந்து கொண்டார்கள்.

மத்ஹப் சார்ந்த அனைத்து இமாம்களும் வந்து சென்ற பிறகு பிதுஅத்களை உருவாக்கிக் கொண்டிருந்த, தவறான கொள்கைகளை பறப்பிக் கொண்டிருந்த ஒருவர் தனது சில ஏடுகளை தன் கையில் வைத்துக் கொண்டு வந்தார்.

அங்கே வட்டமாக அமர்ந்து இருந்தவர்களுக்கு அருகில் சென்று நபி (ஸல்) அவர்களிடம் அதை வாசிக்க முனைந்தார்.

அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்த ஒருவர் வேகமாக வந்து, அவரைப் பிடித்து நிறுத்தி, அவருடைய கைகளில் இருந்த பேப்பர்களை பிடுங்கி கிழித்து   வெளியே தூக்கி எறிந்தார்; அவரை கேவலமாகவும்,  இழிவாகவும் சபையோர் முன்னிலையில் உரத்த குரலில் பேசினார்.

அறிவிப்பாளர் தொடர்ந்து கூறுகிறார்; 

அங்கிருந்த கூட்டத்தினர் தமது  பணிகளை முடித்துக் கொண்ட பிறகும் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். 

அவர்களில் ஒருவராக இருந்த எனது கையில் ஒரு மொத்தமான நூல் இருந்தது; நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இது எனது கொள்கைகள் அடங்கிய நூல்! அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உடையவர்களின் கொள்கை; என்னை நீங்கள் அனுமதித்தால் உங்களிடம் இதை  வாசித்துக் காட்டுகிறேன்" என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள் ....ம்...... என்றார்கள். அப்பொழுது எனது கையில் இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் தொகுத்த 'கவாயிதுல் அகாயித்' நூல் இருந்தது. 

அனுமதி பெற்றதும் பிஸ்மில்லாஹ் வில் இருந்து அந்த நூலின் நான்கு பிரிவுகளையும் படித்துக் காட்டி முடித்தேன்; 

அந்த நூலில் நபி (ஸல்) அவர்கள் குறித்து இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க தெரியாத, குரைஷிக் குலத்தைச் சேர்ந்த நபியாக, ரசூலாக அல்லாஹ் அனுப்பி இருக்கின்றான்; 

அவர்கள் ஒட்டுமொத்த அரபு மக்களுக்கும், அரபியர் அல்லாதவர்களுக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் அவரே நபியாக இருக்கிறார்" என்ற வார்த்தை உட்பட நான் வாசித்துக் காட்டினேன்.

அறிவிப்பாளர் தொடர்ந்து கூறுகிறார்; 

கடைசி சில வரிகளை நான் வாசித்ததும் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன்; அவர்கள் முகம் மலர்ந்து காணப்பட்டது; புன்முறுவல் பூத்திருந்தார்கள். 

நபி (ஸல்) அவர்கள் குறித்த அனைத்து வகை வர்ணனைகளையும் அந்த நூலில் இருந்து நான் வாசித்து முடித்த போது நபி (ஸல்) அவர்கள் என் பக்கம் திரும்பி "கஸ்ஸாலீ எங்கே?" என்று கேட்டார்கள்.

அப்பொழுது அங்கு வட்டமாக அமர்ந்திருந்தவர்களில் என எதிரே இருந்த இமாம் கஸ்ஸாலீ (ரஹ் )அவர்கள், "இதோ! அல்லாஹ்வின் தூதரே! நான்தான்....!" என சொல்லிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்து ஸலாம் சொன்னார்கள். 

அவர்களுக்கு பதில் ஸலாத்தினை நபிகள் நாயகம் அவர்கள் சொல்லிக் கொண்டே தமது கரங்களால் அவர்களை அணைத்துக் கொண்டார்கள். 

இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கரங்களில் முத்தமிட்டு  நபிகளாரின் இரு கைகளையும் பரக்கத்தை நாடி தனது கன்னத்தில் ஒத்திக் கொண்டார்கள். பின்னர் அவர்கள் எதிரே அமர்ந்தார்கள். 

அறிவிப்பாளர் கூறுகிறார்; வேறு எவரும் தமது நூலை படிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் சந்தோஷப்பட்டதை விட நான் 'கவாயிதுல் அகாயித்' படிக்கும் போது சந்தோஷப்பட்டது அதிகமாக இருந்தது. 

பின்னர் நான் தூக்கத்திலிருந்து விழித்தேன்; நபி (ஸல்) அவர்களை பார்த்த சந்தோஷத்தின் காரணமாக எனது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்து ஓடிக் கொண்டிருந்தது.

நூல் : மிர்அதுல் ஜினான்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்