தஃப்ஸீர் செய்வோரில் முதன்மையானவர் யார்? Leader of the Quran interpreters..
தஃப்ஸீர் செய்வோரில் முதன்மையானவர் -
Leader of the Quran interpreters..
============================
திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொன்ன நபித்தோழர்களில் முதன்மையானவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இளம் வயதுடையவராக இருந்தார்கள்.
இவர்கள் திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்திற்கும் திருக்குர்ஆனை கொண்டு முதலில் விளக்கம் சொல்லுவார்கள்.
இரண்டாவதாக நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன விளக்கங்களையும், மூன்றாவதாக நபித்தோழர்கள் சொன்ன விளக்கங்களையும், நான்காவதாக சொந்த அபிப்பிராயங்களையும் சொல்லும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
இவர்களை "இமாமுத் தஃப்ஸீர்" என்றும் "தர்ஜுமானில் குர்ஆன்" என்றும், "தஃப்ஸீர் செய்யும் முறையை தோற்றுவித்தவர்" என்று ஸஹாபாக்களாலும், பின்னர் தோன்றியவர்களாலும் புனைப் பெயர் வைத்து அழைக்கப்பட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;
உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்து கொண்ட பத்ரு ஸஹாபாக்களுடன் (ஒவ்வொரு வருடமும் பத்ரு யுத்தம் நடந்த நாளில் ஒரு விழா நடத்துவார்கள்.
அந்த கூட்டத்தில் பதுரு நிகழ்வுகள் குறித்து நினைவுபடுத்தி பேசிக் கொள்வார்கள்.
இந்த கூட்டத்திற்கு பத்ரு ஸஹாபாக்களைத் தவிர வேறு யாருக்கும் அழைப்பும், அனுமதியும் இல்லை.)
இந்நிலையில்
மூத்த ஸஹாபாக்களுடன் (பத்ரு ஸஹாபியாக இல்லாத இப்னு அப்பாஸ் ஆகிய எனக்கும்) இடமளித்து வந்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் நடக்கும் பத்ரு ஸஹாபாக்கள் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு வந்தேன்.
இந்தச் சூழ்நிலையில் பத்ரு ஸஹாபாக்களில் சிலர் வருத்த மடைந்து, "எங்களுக்கும் இவரைப் போன்ற (வயதில்) பிள்ளைகள் இருக்க, இவரை எங்களுடன் ஏன் அமரச் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால்தான்" என உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
பின்னர் ஒரு முறை பத்ரு ஸஹாபாக்கள் விழா நடந்த போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய என்னை உமர் (ரலி) அவர்கள் (தமது அவைக்கு அழைத்தார்கள். அப்போதும் என்னை பத்ரு ஸஹாபாக்களுடன் அமரச் செய்தார்கள்.
"அவர்களுக்கு (என் தகுதியை உணர்த்தி) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்திருந்தார்கள்" என்றே கருதினேன்.
அப்போது உமர் (ரலி) அவர்கள்,
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
"1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது,
2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டங்கூட்டமாக நுழைவதை (நபியே!) நீர் காணும்போது,
3. உம்முடைய இறைவனை நீர் போற்றித் துதிப்பீராக! அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை அதிகம் ஏற்பவனாக இருக்கின்றான்;"
எனும் இந்த அத்தியாயம் (110) குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?" என்று அங்கு வந்திருந்த பத்ரு ஸஹாபாக்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அவர்களில் சிலர், "நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது
அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக் கப்பட்டுள்ளோம்" என்று (விளக்கம்) கூறினர்.
அவர்களில் பலரும் இதுபோன்று, வசனத்தின் பொருளையே வேறு வார்த்தைகளில் கூறினார்கள். இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் என்னிடம், "இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறு தான் கூறுகிறீர்களா?" எனக் கேட்டார்கள்.
நான், 'இல்லை' என்றேன். "அவ்வாறாயின் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
நான், "அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டதை) குறித்து அவர்களுக்கு அவன் செய்த (முன்) அறிவிப்பாகும், அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது... - அதாவது இது உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும்.
எனவே, உம்முடைய இறைவனை நீர் போற்றித் துதித்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை அதிகம் ஏற்பவனாக இருக்கின்றான் (என்பதே இதன் விளக்கமாகும்)" என்று பதிலளித்தேன்.
மேலும் இந்த வசனம் அருளப்படும் போது நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் துல்ஹஜ் பிறை 12 அன்று மினாவில் இருந்தேன்.
அதாவது மக்கா போன்ற பெரு நகரங்கள் நபிகளாரின் அதிகாரத்திற்கு வந்ததுடன் அப்பகுதிகளில் இஸ்லாம் நன்கு வேரூன்றிவிட்டது;
இந்த அத்தியாயம் இதையே இலைமறைவு காய்மறைவாக உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்களும் இதைப் புரிந்து கொண்டார்கள்.
வெற்றியும் உதவியும் கிடைத்துவிட்டது; மக்களும் கூட்டங்கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைய ஆரம்பித்துவிட்டனர். இனி, இஸ்லாம் எனும் மரம் வானுயர வளரும் என்ற இக்கட்டத்தில், தாம் அனுப்பப்பெற்ற நோக்கம் பூர்த்தியாகிவிட்டது; தம் தவணை (மரணம்) நெருங்கிவிட்டது என்பதை நபிகளார் அறிந்து கொண்டார்கள்.
பொதுவாக, ஒரு பொருள் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டால், அப்பொருளுக்கு அங்கே என்ன வேலை?
எனவேதான், இந்த அத்தியாயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஓதிக் காட்டியபோது, தோழர்கள் பலரும் புளகாங்கிதம் அடைந்த வேளையில், (அப்பாஸ் ரலி ஆகிய நான் மட்டும்) அழுது விட்டேன்;
"ஏன் அழுகிறீர்கள்?" என நபிகளார் வினவ, "உங்கள் இறப்பு முன்னறிவிப்புச் செய்யப்பட்டதாக அறிகிறேன்" என்று கூறினேன்.
நபியவர்கள், "நீங்கள் சொல்வதைப் போன்றுதான்!" என்று பதில் கூறினார்கள்.
அதன்படியே இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எண்பது நாட்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்.
மேற்கண்டவாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்லி முடித்ததும் உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் கூறுகின்ற விளக்கத்தையே இந்த அத்தியாயத்திலிருந்து நானும் அறிகின்றேன்" என்று சொன்னார்கள்.
நூல் : தஃப்ஸீர் அல் பஹ்ருல் முஹீத், பைஹகீ, முஸ்னது அல் பஸ்ஸார்.
நூல் : புகாரி 4294, 4970 (பல ஹதீஸ்களின் கூட்டுத் தொகுப்பு)
திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்வது அறியதொரு கலை.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதரஸாவிலும் அந்தக் கலையை போதிக்கும் அறிஞர்கள் இருக்கிறார்கள். பலர் நம்மை விட்டு மறைந்து விட்டார்கள்.
இவர்களின் போதனையின் வெளிப்பாடுதான் நான்கு தஃப்ஸீர்களும் 26 தர்ஜமாக்களும் தமிழ்நாட்டில் உருவாகி இருக்கின்றது.
உலக அரங்கில் தமிழ் மொழியும் திருக்குர்ஆனுக்கு முழுமையான சேவையை வழங்கி இருக்கிறது.
திருக்குர்ஆன் தர்ஜமா, திருக்குர்ஆன் சொல்லுக்கு சொல் பொருள், அகர வரிசை முறைப்படி திருக்குர்ஆனுக்கான தர்ஜமா போன்ற இன்னும் பல மொழிபெயர்ப்புகள் வெளிவராமலே இருக்கின்றது.
அல்லது அவர்கள் வெளியிடுவதற்கு முன்னரே காலமாகி விட்டார்கள். அவை அந்தந்த ஆலிம்களின் இல்லங்களில் கையேட்டுப் பிரதிகளாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அதில் ஒரு பிரதி என்னிடம் இருக்கிறது; அது குறித்து நாளை பார்ப்போம்.....
Comments
Post a Comment