வெளிவராத ஒரு திருக்குர்ஆன் தமிழ் அகராதியின் விமர்சனம்

திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமா 
தஃப்ஸீர் ஒரு ஆய்வு :- தொடர்ச்சி....
=================================

வெளிவராத ஒரு திருக்குர்ஆன் சொல் அகராதியின் விமர்சனம் : 
==============================

திருக்குர்ஆன் பல்வேறு வடிவங்களில் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது; அவற்றில் ஒன்றுதான் தஃப்ஸீர் -  திருக்குர்ஆன் விரிவுரை.

திருக்குர்ஆனை ஸஹாபாக்கள் எப்படி விளங்கினார்கள்? 

திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் திருக்குர்ஆன் சொல்லும் பொருள் என்ன? 

திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு வசனமும் அருளப்பட்ட பின்னணி என்ன? என்ற வகைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு திருக்குர்ஆன்  எழுதப்பட்டுள்ளது. 

மேலும் திருக்குர்ஆனில் உள்ள வசனங்களில் எந்தெந்த வசனம் மார்க்கச் சட்டங்களை விவரிக்கிறது? 

மாணவர்கள் விளங்குவதற்கு ஏற்ற வகையில் திருக்குர்ஆன் தொகுப்பு, 

தஜ்வீத் முறைப்படி ஓதும் வகையில் ஆன குர்ஆன் தொகுப்பு, 

மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற வகையில் குர்ஆன் தொகுப்பு என்ற வகைகளிலும் திருக்குர்ஆன் ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. 

மேலும் சிறுவர்களுக்கு போதிக்கும் வகையில் குர்ஆன் தொகுப்பு, 

திருக்குர்ஆன் அகராதி, 

வார்த்தைக்கு வார்த்தை பொருள் எழுதப்பட்ட திருக்குர்ஆன் தொகுப்பு என 15 க்கும் மேற்பட்ட வகைகளில் உலகம் முழுவதும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றுதான் மர்ஹூம், மவ்லவீ, B. முஹம்மது சுல்தான் ரஹ்மானி, ஃபாஜில் மன்பயீ, ஃபாஜில் தேவ்பந்தி (ரஹ்) அவர்கள் எழுதிய அல் காமூசுல் குர்ஆன் -  தமிழ் குர்ஆன் அகராதி. 

2000 க்கு முன்பு தமிழ்நாட்டில் பல தர்ஜமாக்கள் வந்திருந்தாலும் 'தமிழ் குர்ஆன் அகராதி' எதுவும் வெளிவரவில்லை. 

அகராதி அடிப்படையில் தமிழுக்கு ஒரு குர்ஆன் வேண்டும் என்பதற்காக மவ்லவீ சுல்தான் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் பெரும் முயற்சி எடுத்து பல வருட உழைப்புக்கு பின்  இந்த நூலை இயற்றினார்கள்; இதை வெளியிடுவதற்கு முன்பே 2003 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்கள்.

இந்தக் குர்ஆன் அ, ப, த, ச, எனும் அரபு மொழி அகர வரிசை அடிப்படையில் திருக்குர்ஆனுடைய சொற்களுக்கு பொருள் செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் மொத்தம் 76930 சொற்கள் இருக்கின்றன; இவற்றில் திரும்பத் திரும்ப வருகின்றவற்றை விட்டுவிட்டு பார்த்தால் 8803 வார்த்தைகள் மட்டுமே மிஞ்சும். 

இந்த வார்த்தைகளுக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒரு வகையான பொருள்கள் பயன்படுத்தப்படும். அந்தப் பொருள்கள் அனைத்தையும் இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிரில் எழுதப்பட்டுள்ளது.

இப்ராஹிம், அஸ்ஹாபுல் உஹ்தூத் போன்ற பெயர்ச் சொற்கள் அல்லது ஒரு வரலாற்றை உள்ளடக்கி உள்ள சொற்களுக்கு அதனதன் வரலாறுகளும் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அமையப்பட்டுள்ள இந்நூல் 807 பக்கங்களில் முழுமை பெற்றுள்ளது.

மேலும் திருக்குர்ஆனில் ஒருமுறை மட்டும் வரும் 8803 சொற்கள் திருக்குர்ஆனில் எந்தெந்த இடங்களில் வருகிறது என்பதை அறிய அத்தியாயங்கள் உடைய எண்ணையும், வசனங்களுடைய எண்ணையும் அல் ஃபாளில் குர்ஆன் அடிப்படையில் இதே நூலின் பிற்பகுதியில் ஒரு குறியீடு எண் அமைத்து வழங்கி இருக்கின்றார்; 

இவை நானூறு பக்கங்களுக்கு இருக்கின்றன. ஆக மொத்தம் 1200 பக்கங்களுக்கு மேலாக இந்த நூல் அமைந்துள்ளது.

(இதன் நூலாசிரியர் கடைசி 400 பக்கங்களை தொகுத்துக் கொண்டிருக்கும் பொழுதே காலமாகி விட்டதால் கடைசி 300 பக்கங்களை அவர்களின் மரணத்திற்கு பிறகு நான் தொகுத்து முழுமைப்படுத்தினேன்.)

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு இடையே இடம்பெறும் இடைச்சொற்கள் லா, அன, மா, இலா போன்ற சொற்களை தனியாக தொகுத்து அதற்கான பொருளையும் வழங்கி இருக்கிறார்கள்.

இதை வெளியிடவோ இதை பார்வையிடவோ விரும்புவோர் என்னை அணுகலாம்.

நீண்ட நாட்களாக இதை எடுத்துப் பார்க்காததின் காரணமாக கரையான் அரித்து காணப்படுகிறது. 

இதை பாதுகாக்கவே இறைவன் இந்தக் கட்டுரையை என்னை எழுதத் தூண்டினான் போல் தெரிகின்றது.

இவற்றை கையேட்டுப் பிறதியாகவே பாதுகாக்க நவீன கால வழிமுறைகள் ஏதேனும் இருந்தாலும் சொல்லுங்கள்.

ஏறத்தாழ இதே மாடலில் வெளிவந்துள்ள மற்றொரு திருக்குர்ஆன் சொல்லகராதியை நாளைக் காண்போம்.

தொடரும்....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்