Preach what you practise !Practise what you preach!!

போதிப்பதை சாதி!
சாதிப்பதை போதி!!
===================

Preach what you practise !
Practise what you preach!!
••••••••••••••••••••••••••••••••••••

ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தாபியீன்களில் ஒருவர்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியரில் ஒருவரிடம் பால்குடித்து வளர்ந்தவர்.

இவர்கள் தம் வாழ்நாளில் தாம் செய்கின்றவற்றை மட்டுமே பேசும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். 

இவர்களின் சொற்பொழிவை கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு கூட்டத்தினர் அவர்களின் அவையை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள். 

ஒவ்வொரு ரமலானிலும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சிறிது நேரம் உபதேசம் செய்வார்கள்; அவர்களின் சபையில் தொழுவதற்கும், சொற்பொழிவை கேட்பதற்கும் தூரத் தொலைவுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

ஏழை எளியவர்களும், செல்வந்தர்களும், அடிமைகளும் என பலரும் அந்த சபையில் இருப்பார்கள்.

ஒரு அடிமை அன்னை ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து, "தாங்கள் என்ன சொன்னாலும் எனது எஜமானர் கேட்டு செயல்படுகிறார்; தாங்கள் ஒரு முறை அடிமைகளை உரிமை விடுவதின் சிறப்புகள் குறித்து பேசுங்கள்; அடிமையாக இருக்கின்ற என்னை எனது எஜமானர் விடுதலை செய்து விடுவார்; நான் எனது குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ்வேன்" என்று கேட்டுக் கொண்டார்.

தினம் தினம் அந்த அடிமை ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அவைக்கு வந்தார்; ஆனால் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் அடிமைகள் உரிமை விடுவது குறித்து பேசவே இல்லை; ரமலானும் முடிந்து விட்டது.

அந்த அடிமை மிகவும் வருத்தப்பட்டார்; "ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் பேசினால் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று தானே எதிர்பார்த்தோம் இவர்கள் பேசாமல் இருக்கிறார்களே!" என மனதுக்குள் வருத்தப்பட்டார். 

மறு வருடம் ரமலான் முதல் நாள் தராவீஹ் தொழுகைக்கு பிறகு  ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் அடிமைகள் உரிமை விடுவது குறித்து உரையாற்றினார்கள்; 

அதனைக் கேட்ட எஜமானர் மறுநாள் காலையில், 'நான் உன்னை அல்லாவிற்காக விடுதலை செய்து விட்டேன்" என்று கூறி விடுதலை செய்தார். 

விடுதலை பெற்ற சந்தோஷத்தில் அந்த அடிமை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் வந்து, "ஷைஹுவே! இதைத் தாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே செய்திருந்தால், நான் விடுதலை பெற்று இருப்பேனே!" என்று கேட்டார்.

அதற்கு ஷைஹு அவர்கள், "எந்த ஒன்றையும் நான் செய்யாமல் சொல்வதில்லை; தாங்கள் சொல்லும் பொழுது என்னிடத்தில் அடிமைகள் இல்லை; அடிமையை வைத்துக் கொள்கிற அளவிற்கு எனக்கு வசதியும் இல்லை; 

தாங்கள் சொன்ன பிறகு சிறுகச் சிறுக பணம் சேர்த்து வைத்து, சில நாட்களுக்கு முன்புதான் ஒரு அடிமையை விலைக்கு வாங்கி உரிமையை விட்டேன்; அதனால் தான் நேற்று இரவு பேசினேன்;

நான் எதை செய்து முடித்திருக்கின்றேனோ அதை மட்டும்தான் பேசுவேன்; நான் செய்யாததை பிறரை செய்யும்படி தூண்ட மாட்டேன்; இது எனது வளமை; இப்படி நான் நடந்து கொள்வதால் தான் எனது பேச்சை அனைவரும் கேட்கிறார்கள்" என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : ஹுல்யதுல் அவ்லியா

உங்கள் பேச்சை பிறர் கேட்க வேண்டுமானால் முதலில் நீங்கள் மௌனமாக இருக்க பழக வேண்டும்.

மௌனமாக இருந்தால் பிறர் எப்படி நம் பேச்சை கேட்பார்கள் என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறதா?. 

ஒரு கூட்டத்தில் சலசலவென்று பேசும் மனிதனை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால் அங்கே மௌனம் நிலவும் போது விழும் நாணயத்தின் ஓசை போல அமைதியானவனின் பேச்சை அனைவரும் கவனிப்பர். 

அப்படிப்பட்ட ஒரு பேச்சுக்கு சொந்தக்காரர் தான் ஷைஹு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்