நபிகள் நாயகத்தை கனவில் கண்ட திப்பு சுல்தான் (ரஹ்)
நபிகள் நாயகத்தை
கனவில் கண்ட திப்பு சுல்தான் (ரஹ்)
திப்பு சுல்தான் அவர்கள் கி.பி. 1750 களில் பிறந்து 1799 களில் 49 வது வயதில் காலமானார். இவர் தனது 19-வது வயதில் இருந்து தந்தையோடு யுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
தந்தை ஹைதர் அலி அவர்கள் இறந்த பிறகு 1782 டிசம்பர் 29 அன்று மைசூர் நிலப்பரப்பின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1785 ஆம் ஆண்டுகளில் இருந்து தான் கண்ட கனவுகளை அப்படியே தன் டைரி - நாட்குறிப்பில் எழுதத் தொடங்கினார். சில கனவுகளுக்கு தான் கண்ட விளக்கங்களையும் எழுதி வைத்தார்; அவர் இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு வரை எழுதியிருந்தார்.
அவர் இறந்த பிறகு ஸ்ரீரங்கப்பட்டினத்தின் கோட்டைக்குள் இருந்த பொருட்களை கொள்ளையடிப்பதற்காக கர்னல் கிர்க்பாட்ரிக் என்பவர் திப்பு சுல்தானின் படுக்கை அறைக்குள் நுழைந்தார்.
அங்கிருந்த 2000-க்கும் மேற்பட்ட நூல்கள், ஆய்வுகள் அனைத்தையும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.
அப்பொழுது மறைவான ஒரு இடத்தில் இருந்த டைரியை - பதிவேட்டைக் கண்டுபிடித்தார். அது ஃபார்ஸீ மொழியில் எழுதப்பட்டிருந்தது.
அதை எடுத்து திறந்து பார்த்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது திப்பு சுல்தான் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய சேவகர் ஹபீபுல்லாஹ் அவர்கள், "ஐயா! இது திப்பு சுல்தான் அவர்களின் நாட்குறிப்பு; இதை யாரும் படிக்க விரும்ப மாட்டார்; இதில் எழுதும் பொழுதோ இதை படிக்கும் பொழுதோ இந்த அறையில் யாரும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்;
ஒரு சமயம் எவரேனும் வந்துவிட்டால் விசித்திரமான முறையில் பதட்டப்படுவார்; நாட்குறிப்பை உடனே எடுத்து மறைத்து வைப்பார்கள்" என்று கூறியதும் கர்னல் கிரிக்பாட்ரிக் அந்த டைரியின் மதிப்பை உணர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.
கி.பி. 1800 களில் கலெக்டர் மார்கிஸ் வெல்லெஸ்லி அனுப்பியதாக பிரிட்டிஷ் நீதிமன்ற சபாநாயகர் ஹியூஜ் இங்கிலிஸ் ஈஸ்க்வெர் என்பவரிடம் ஒப்படைத்தார் இது இன்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
Henry Beveridge, (1837–1929) என்பவர்
“The Dreams of Tipu Sultan” (அசல் பெயர்: Khwabnama – காப் நாமா "கனவுகளின் பதிவு") தி டிரீம்ஸ் ஆஃப் திப்பு சுல்தான் எனும் பெயரில் 1897 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.
பின்னர் இந்தியாவைச் சேர்ந்த முஹிப்புல் ஹஸன், இர்ஃபான் ஹபீப் போன்ற ஃபார்ஸீ மொழி தெரிந்தவர்கள் மேலும் விரிவாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த நூலில் 37 கனவுகள் இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஐரோப்பியர்கள் ஆங்கிலேயர்கள் குறித்த 12 கனவுகள் உள்ளது. அவற்றின் வரிசை எண் 3, 5, 10, 17, 18, 19, 20, 21, 26, 30, 32, 33)
நபிகள் நாயகம் மற்றும் கலீஃபாக்கள் ஆகியோரை கண்ட கனவுகள் 7 இருக்கின்றது. அவற்றின் வரிசை எண் 7, 11, 12, 22, 25, 28, 34)
அதிகாரம், அரசியல் குறித்த கனவுகள் 10 இருக்கின்றன. (அவற்றின் வரிசை எண் 4, 9, 14, 16, 23, 24, 27, 29, 35, 36)
தனது வீர மரணம் குறித்த முன்னறிவிப்பு சார்ந்த ஒரு கனவு; அதன் வரிசை எண் 37.
ஏழு கனவுகள் அவர் ஆட்சி செய்த நிலப்பரப்புகள் சார்ந்தும், கட்டிடங்கள் சார்ந்தும், அதிகாரிகள் சார்ந்தும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
திப்பு சுல்தான் அவர்கள் போர்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் அவர்களை கனவில் கண்டிருக்கிறார்; அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் நடக்கப் போகும் யுத்தத்தில் வெற்றி கிடைக்கும் என உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வழிநடத்திச் செல்லும் போரில் கலீஃபாக்கள் மற்றும் ஸஹாபாக்களோடு திப்பு சுல்தானும் படையில் இருப்பது போன்ற கனவையும் கண்டிருக்கிறார்.
கலீஃபாக்கள் குறிப்பாக உமர் (ரலி), அலி (ரலி), போன்றவர்கள் திப்பு சுல்தான் அவர்களுக்காக பிரத்தியேக பிரார்த்தனை செய்வது போலவும், நபி (ஸல்) அவர்களின் கரங்களால் திருக்குர்ஆன் ஷரீஃபை பெறுவது போலவும் என பல கனவுகளை கண்டிருக்கிறார்.
திப்பு சுல்தான் அவர்களின் பாவங்களை மன்னித்து அல்லாஹ் சொர்க்கத்தை தந்தருள்வானாக! ஆமீன்!!
Comments
Post a Comment