ஹஜ் செய்வதால் பல நல்லது நடக்கும்
ஹிஜ்ரீ 300 களில் பக்தாதில் பிறந்து, நுட்பமான கருத்துக்களை பேசும் நாடறிந்த நாவலர் அபல் ஹுசைன் பின் ஸம்வூன் (ரஹ்) அவர்களின் குடும்பத்தினர் நூல்களை கைகளால் எழுதி பிரதி எடுத்து கொடுக்கும் ஒரு தொழிலை செய்து வாழ்ந்து வந்தார்கள்.
அபல் ஹுசைன் பின் ஸம்வூன் (ரஹ்)
அவர்கள் தமது முதல் வயதிலிருந்தே நூல்களை எழுதும் பழக்கத்திற்கு வந்து விட்டார்கள்.
தனக்காக ஒரு நூலையும், தன் தாயாருக்காக ஒரு நூலையும் எழுதுவதாக கூலியை பேசிக் கொண்டு, இரண்டையும் இவர்களே எழுதிக் கொடுப்பார்கள். அதனால் அதிகமான பயன்களை அந்தத் தாய் அடைந்தார்!.
ஒரு நாள் இருவரும் அருகருகே அமர்ந்து நூலை பிரதி எடுத்துக் கொண்டிருந்த போது தாயிடம், "இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்" என்று மகன் இப்னு ஸம்வூன் கூறினார்;
அதற்கு தாயார், "மகனே...! ஹஜ் எப்படி உமக்கு சாத்தியமாகும்? செலவுக்கு என்று பணம் எதுவும் இல்லையே? உனக்கு கொடுப்பதற்கென்று என்னிடமும் பணம் ஏதும் இல்லையே? நம் வாழ்க்கையே இந்த நூல்களை பிரதி எடுத்து, அதில் கிடைக்கும் சொற்ப கூலியை வைத்து தானே வாழ்கிறோம்?" என்று கூறினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு தாயாருக்கு அசதி ஏற்பட்டு தூங்கினார்; ஒரு மணி நேரம் கழித்து சந்தோஷமாக விழித்தார்; அப்பொழுது, "மகனே....! நீ ஹஜ் செய் ! நான் உறங்குவதற்கு முன்பு, 'நீ ஹஜ் செய்ய வேண்டாம்' என தடுத்தேன்; நான் உறங்கி எழுந்த பிறகு, 'நீ ஹஜ் செய்ய நான் அனுமதி வழங்கி விட்டேன்'; ஏன் தெரியுமா?
எனது கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன்; அவர்கள், "அவரை விட்டுவிடு! அவருக்கான நலவுகள் அனைத்தும் அவர் முதலும் முடிவுமாக செய்யக்கூடிய இந்த ஹஜ்ஜில் தான் இருக்கிறது" என்று சொன்னார்கள்.
அவர் மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தார்! 0அது ஹஜ்ஜுடைய காலமாக இருந்ததால், தாம் எழுதி வைத்திருந்த நூல்கள், எழுதுவதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் விற்று காசாக்கினார். அவ்வாண்டு பயணமான ஹாஜிகளோடு புறப்பட்டார்.
காடுகளில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஹாஜிகளிடம் அரேபிய திருட்டுக் கூட்டம் ஒன்று ஹாஜிகள் அனைவரிடத்திலும் இருந்த செல்வங்களை பறித்துக் கொண்டார்கள்.
இப்னு ஸம்வூன் (ரஹ்) அவர்களுடைய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டார்கள்; எந்த அளவிற்கென்றால் அவர் உடுத்தியிருந்த ஆடையையும் கழட்டிக் கொண்டு நிர்வாணமாக விட்டுச் சென்றார்கள்.
பின்னர் அவ்வழியாக அபா எனும் ஆடையை அணிந்து வந்த ஒரு மனிதரை சந்தித்தார் ; (வேஷ்டி போன்ற ஒரே துணியினால் கரண்டைக் காலில் இருந்து தலைவரை முழுக்கால் சட்டை, முழுகை சட்டை போன்ற தோரணையில் ஃபக்கீர்கள் போல ஒருவர் கட்டிக் கொண்டு வந்தார்.)
இவ்வாறு அணிந்து வந்தவரிடம் அவர் அணிந்திருந்தை தனக்காக இப்னு ஸம்வூன் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்; அவர் வேறொரு ஆடையை அணிந்து கொண்டு தான் அணிந்திருந்த ஆடையை அவருக்காக கொடுத்தார்.
அதைப் பெற்று பாதியை கீழாடையாகவும், மற்றொரு பாதியை மேலாடையாகவும் அணிந்துக் கொண்டார்.
அந்த ஆடையில்,
"என்னைப் படைத்தாள்பவனே!பேரருளாளனே ! உனது அருள் முழுமைப் பெற்றுள்ள இடத்திற்கு நிம்மதியாக கொண்டுச் சேர்ப்பாயாக" என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது கடுமையான பசி எனக்கு ஏற்பட்டது; வழியில் ஒரு கூட்டத்தினரை சந்தித்தேன்; அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்களுக்கு அருகில் நின்று அவர்கள் சாப்பிடுவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; அவர்கள் எனக்கும் கொஞ்சத்தை கொடுத்தார்கள்; அன்றைய நாளில் அது எனக்கு போதுமானதாக இருந்தது.
பல்வேறு சிரமங்களுக்கு இடையே நான் மக்காவை சென்றடைந்தேன் எனது ஆடைகளை துவைத்து இஹ்ராமாக அணிந்து கொண்டேன்;
பனீ ஷைபா வம்சத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கஃபாவிற்குள் நுழைய வேண்டும் என அவர்களில் ஒருவரிடம் கேட்டேன். எனது ஏழ்மை நிலையை அவர்கள் புரிந்து கொண்டு, ஏற்கெனவே ணகஃபாவிற்குள் சென்றிருந்த மக்கள் வெளியேறிய பிறகு என்னை மட்டும் தனியாக உள்ளே அனுப்பிவிட்டு வாசலை பூட்டிக் கொண்டார்கள்.
اللهم إنك بعلمك غني عن إعلامي بحالي، اللهم ارزقني معيشة أستغني بها عن سؤال الناس”
கஃபாவிற்குள் நான் இப்படி பிரார்த்தனை செய்தேன்! இறைவா ! எனது இந்த நிலையை உனக்கு நான் தெறிவிப்பதை விட்டும் நீ நிறைவானவன்; உனக்கு நான் எதையும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை!
இறைவா! நான் மக்களிடம் தேவையாகாத அளவிற்கு, எனது நெருக்கடியான சூழல் விலக வாழ்வாதாரங்களை வழங்கு! என்று நான் பிரார்த்தித்த போது எனக்கு பின்னால்,
“اللهم انه ما يحسن ان يدعوك اللهم ارزقه عيشًا بلا معيشة”.
இறைவா! இவர் உன்னிடம் அழகான முறையில் பிரார்த்தித்து இருக்கிறார்; நெருக்கடி இல்லாமல் நல்லதொரு வாழ்வை வாழ தேவையான வாழ்வாதாரங்களை விசாலமாக வழங்குவாயாக! என்று ஒரு குரலைக் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன் யாரும் இல்லை.
நான் சொல்லிக் கொண்டேன்; இது ஒரு சமயம் கிளிர் அலைஹிஸ் ஸலாம் அவர்களாக இருக்கலாம்; அல்லது கண்ணியமான (நான்கு) வானவர்களில் ஒருவராக இருக்கலாம்; இவ்வாறு நான் பிரார்த்தனை செய்வதை விடவில்லை.
தொடர்ந்து பலமுறை பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன். பிறகு நான் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு எனது பக்தாத் நகரத்திற்கு திரும்பினேன்.
பக்தாத் நாட்டின் கலீஃபா - மன்னர் தனது அடிமைப் பெண்களை தமக்கு ஹராமாக்கிக் கொண்டார்; மேலும் அவர்களை தமது வீட்டை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்துவிட்டார்.
அவர்கள் மீது ஏற்பட்ட கரிசனம் மற்றும் கருணையின் காரணமாக அவர்கள் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்பினார்.
எனவே கலீஃபா அவர்கள் " கட்டுப்பாடான நல்ல ஒரு ஆணை தேடி கண்டுபிடியுங்கள்; அவருக்கு இந்த அடிமையை திருமணம் செய்து வைப்போம்" என்று கூறினார்.
அங்கு இருந்தவர்களில் பலரும் இப்னு ஸம்வூன் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்று இருக்கிறார்கள்; அவர்களுக்கு இந்த அடிமைப் பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம்" என்று சொன்னபோது அங்கிருந்த அனைவரும் அதை ஆமோதித்தனர்.
பின்னர் அவர் ஹஜ்ஜில் இருந்து திரும்பி வந்துவிட்டதை அறிந்தவர்கள் அவரை அழைத்து வந்து அந்த அடிமைப் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
கலீஃபா - மன்னர் அந்தப் பெண்ணோடு ஆடைகள், அணிகலன்கள், வீட்டுப் பொருட்கள் என ஒரு இளவரசிக்கு வழங்குவது போல் சீதனங்களை வழங்கி அனுப்பி வைத்தார்.
"இப்னு ஸம்வூன் (ரஹ்) அவர்கள் கஃபாவிற்குள் இருந்து கேட்ட அத்தனை பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதின் விளைவாகவே இந்த திருமணம் நடைபெற்றது" என மக்கள் பேசிக் கொண்டனர்.
நூல் : மிர்அதுல் ஜினான் வ இப்ரதுல் யக்ழான்
பிரார்த்தனை மிகவும் வலிமையானது; அல்லாஹ்வோடு உரையாட நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment