எனது ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டே இரு!
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 8
தொடர் : 69
எனது ஹதீஸ்களை
அறிவித்துக் கொண்டே இரு!
==============================
சுலைமான் பின் யஜீத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; ஹிஜ்ரி 293 களில் ஈரானில் வாழ்ந்த அலீ பின் அபீ தாஹிர் (ரஹ்) அவர்கள் சிரியாவிற்கு பயணமானார்கள்; அவர்கள் அதிகமான ஹதீஸ்களை சேகரித்து எழுதி வைத்திருந்தார்கள்.
அவர் தனது நூல்களை ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து கொண்டு கடலில் பயணித்தார்.
கடல் கொந்தளிப்பின் காரணமாகவும், கப்பலின் எடை கூடுதலாக இருந்ததின் காரணமாகவும் கப்பல் நிலை தடுமாறியது; அப்பொழுது அவர் தனது பெட்டியை கடலில் தூக்கி எறிந்தார்; சிறிது நேரத்தில் கடல் அமைதி அடைந்தது;
பின்னர் கப்பலில் இருந்து இறங்கியதும் துறைமுகத்திலேயே மூன்று நாட்கள் தங்கி இருந்து, இரவும் பகலும் தொழுது இறைவனிடம் பிரார்த்தித்தார்.
மூன்றாவது நாள் அதிகாலையில் இறைவனை தொழுத பிறகு, "இறைவா! உன் முகத்திற்காகவும், நபியின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஹதீஸ் சேகரிப்பு பணியில் நான் ஈடுபட்டிருப்பதாக நீ அறிந்தால், அந்தப் பெட்டியை திரும்ப எனக்கு கொடுத்து உதவிடு" என்று மன்றாடினார்கள்.
விடிந்ததும் கடற்கரை ஓரத்தில் அந்தப் பெட்டி கிடந்ததைக் கண்டார்கள்; சென்று அதை எடுத்துக்கொண்டு மீண்டும் சிறிது நேரம் அங்கேயே இருந்தார்கள்.
அங்கு இருந்த நேரத்தில் சிலர் வந்து, "எங்களுக்கு ஹதீஸ்களை சொல்லுங்கள்" என்று வேண்டினார்கள்; ஆனால் அலி பின் அபீ தாஹிர் (ரஹ்) அவர்கள், "என்னால் இயலாது" என்று சொல்லி மறுத்துவிட்டார்கள்.
அலீ பின் அபீ தாஹிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; அன்று இரவு நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டேன்; நபிகளாரோடு அலி பின் அபூதாலிப் (ரலி) அவர்களும் இருந்தார்கள்;
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அலியே! கடற்கரையில் உமக்காக அல்லாஹ் ஓர் அற்புதத்தை நிகழ்த்தி பெட்டியை வழங்கினான்; எனது நபிமொழிகளை அறிவிப்பதிலிருந்து நீங்கள் பின் வாங்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
உடனே நான் அல்லாஹ்விடம் தவ்பா - பாவமன்னிப்பு கேட்டு மீண்டேன்; நான் அப்படி நடந்து கொண்டதற்காக வருந்தினேன்;
இதனை பார்த்த நபி (ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள்; ஹதீஸ்களை தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கும் படி என்னை வலியுறுத்தினார்கள்.
நூல்: ஸியரு அஃலாமு நுபலா
வேறு யாராலும் செய்துவிட முடியாத உதவியை ஒருவர் செய்தால், அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் பிரதி உபகாரத்தை காலதாமதப்படுத்தாமல் உடனே செய்திட வேண்டும் என்பதை மேற்கண்ட வரலாறு உணர்த்துகிறது.
(பொதுவாகவே எனது கட்டுரைகளில் சில புகைப்படங்கள் A i தொழில்நுட்பத்தில் உருவாக்கி வழங்கியிருக்கின்றேன்.
இந்தக் கட்டுரையோடு தொடர்புடையதாக இருப்பதால் இவ்வாறு உருவாக்கி இருக்கின்றேன்.
ஆனால் புகைப்படத்திற்கும் இந்தக் கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கும் தொடர்புடைய நேரடி படங்கள் அல்ல! காட்சி அமைப்புதான்)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611
http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ
Comments
Post a Comment