மீலாது விழா கொண்டாடிய இரவில் நடந்த அதிசயம்

மீலாது விழா கொண்டாடிய 
இரவில் நடந்த அதிசயம்
============================

காஃபிரின் கனவில் 
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் 
===============≠==================

அல்லாமா ஆபித் சிந்தீ (ரஹ்) அவர்கள் தனது ஹுக்மு இத்ஆமுத் தஆமு ஃபீ முநாசபாத்தில் ஃபரஹி அவித் தரஹி எனும் உணவளிப்பது சம்பந்தமான நூலில் கூறுவதாவது; 

அல்லாமா ஆபித் சிந்தீ (ரஹ்) அவர்கள் 1841 களுக்கு முன்பு மதீனாவில் வாழ்ந்த பேரறிஞர்களில் ஒருவர். புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களுக்கு ஷரஹ் -  விரிவுரை எழுதியவர்; தஃப்ஸீர் பைலாவி போன்ற நூல்களுக்கும் விரிவுரை எழுதியிருக்கிறார். இவர் 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்; அவற்றில் ஒன்றுதான் மேற் குறிப்பிட்ட நூல்.

நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாளில் தம் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு முஸ்லிம் தம் தெருவில் இருந்த அனைவருக்கும் விருந்தளிக்கிறார்; அந்த விருந்தில் மத பாகுபாடு இல்லாமல் அனைவரும் வந்து கலந்து கொள்கிறார்கள். 

இந்நிலையில் ஒரு யூதப் பெண், "ஏன் அவர் விருந்தளிக்கிறார்?" என விருந்து சாப்பிட்டு சென்ற ஒருவரிடம் கேட்டாள்.

அப்பொழுது அவர், "முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளில் தன் சந்தோஷத்தை, தன் மரியாதையை, தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் உணவளிக்கிறார்" என்று சொல்லிவிட்டு சென்றார். 

இதைக் கேட்ட அப்பெண்மணியின் உள்ளத்தில் அந்த முஸ்லிம் குறித்தும், நபிகள் நாயகம் அவர்கள் குறித்தும் ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டானது.

இந்நிலையில் அன்று இரவு அப்பெண்ணுடைய  கனவில் நபி (ஸல்) காட்சியளித்தார்கள்.

அப்பெண், தன் கனவில் கண்ட ஒருவரிடம்  "இவர்கள் யார்? ஏன் அவருடைய (விருந்தளித்தவர்) வீட்டுக்குள் செல்கிறார்கள்? ஒருவருடைய முகம் மட்டும் மிக அழகாக இருக்கின்றதே அவர் யார்?" என்று கேட்டாள். 

அதற்கு கனவில் இருந்த ஒருவர், "இவர்தான் நபிகள் நாயகம் அவர்கள்! இவர் உடன் வந்திருப்பவர்கள் அவருடைய தோழர்கள்" என்று கூறினார்.

உடனே அப்பெண், "அவர் என்னுடன் பேசுவாரா?" என்று கேட்டாள்.

அதற்கு அவர், "ஏன் பேச மாட்டார்?" என்று அவர் பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே நபிகள் நாயகம் அவர்கள் அப்பெண்ணுக்கு அருகில் வந்து, "பெண்ணே! உமக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அப்பெண், "நான் ஒரு யூத பெண்! உங்களையும், உங்கள் மார்க்கத்தையும் வெறுக்கிறவள்; ஆனால் உங்களை நான் என் இரு கண்களால் பார்த்ததால் நீங்கள் அருள் வடிவமானவர், அன்பானவர், அனைவரையும் நேசிப்பவர் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று கூறினாள்.

நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமக்கு நேர் வழி காட்டுவான்" என்று சொன்னார்கள். பின்னர் மறைந்து விட்டார்கள்; கனவு கலைந்தது. 

மறுநாள் காலை அப்பெண் எழுந்ததும் உணவளித்த பக்கத்து வீட்டாரிடம் சென்று கனவை விவரித்துக் கூறினாள். பின்னர் அவர் கைகளில் இஸ்லாத்தில் இணைந்தார்.

நபி ஸல் அவர்கள் மீதுள்ள பிரியத்தின் பொருட்டால் உணவளித்த ஒருவரின் வீட்டிற்கு நபிகள் நாயகம் அவர்கள் வருகை தந்தார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அது மட்டுமின்றி உணவளித்த செயலை உயர்வாக கருதிய மாற்று மத பெண் இஸ்லாத்தில் இணைய அதுவே காரணமாக அமைந்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

எனவே நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளில் நபிகளாரை  கண்ணியப்படுத்தும் விதமாக, நபிகளாருக்கு நன்மை சேர்ப்பிக்கும் விதமான செயல்களில் ஈடுபடுவது சிறந்ததே!

யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் இருந்த போது மிஸ்ரு நாட்டின் இறைமறுப்பாளர் (காஃபிரான)   மன்னர் ரையான் பின் அல் வலீத் என்பவர் 

وَقَالَ ٱلۡمَلِكُ إِنِّيٓ أَرَىٰ سَبۡعَ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعَ سُنبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖۖ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ أَفۡتُونِي فِي رُءۡيَٰيَ إِن كُنتُمۡ لِلرُّءۡيَا تَعۡبُرُونَ

‘நான் கனவில் ஏழு கொழுத்த மாடுகளை கண்டேன்; அவற்றை ஏழு மெலிந்த மாடுகள் தின்றன. மேலும் ஏழு பசுமையான கதிர்களையும், மற்ற ஏழு உலர்ந்த கதிர்களையும் கண்டேன்.......12: 43 எனும் கனவை  குறித்து நாம் அறிவோம். 

நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் ஒரு இறைமறுப்பாளர் கண்ட கனவை இறைவன் திருமறையில் சொல்லி, உலகம் உள்ளளவும் அதை படிப்பினைக்கு உரியதாக ஆக்கி இருக்கின்றான்.

இந்தக் கனவின் அடிப்படையில் ஒரு காஃபிரானவர் நபிகள் நாயகம் அவர்களை காண இயலும் என தெரிய வருகின்றது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்