மாபெரும் ஞானி மஹ்பூப் சுப்ஹானி
1.மாபெரும் ஞானி மஹ்பூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி
இது ஏற்கனவே நான் எழுதி வெளியிட்டு இருந்த ஒரு நூல்! இதை மீண்டும் திருத்தி அமைத்தும் பல புதிய தகவல்களை இணைத்தும் வெளியிட நினைத்து முதலில் முகநூலில் வெளியிட நாடி உள்ளேன்.
வாசியுங்கள்!
வாசித்தபடி வாழுங்கள்!!
முன்னுரை
மனிதன் மனிதனாக வாழ வலிமார்களை அனுப்பிக் கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்!
நபிமார்களின் வாரிசுகளில் முதல் தரமாணவர்களான வலிமார்களை இனம் காட்டித்தந்த இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் வலிமார்கள் எங்களூரில் (பெரிய வடகரை ) அடங்கி இருக்கும் இறை நேசர் மவ்லானா, அப்துல்லாஹ் ஹள்ரத் பாகவி (ரஹ்) அவர்கள் மீதும் இறையருள் உண்டாவதாக!
நபிமார்களில் சிறந்தவராக நபி (ஸல்) அவர்கள் திகழ்வது போல் வலிமார்களில் சிறந்தவராக ஷைஹு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் திகழ்கிறார்கள்.
ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய வலிமார்களில் ஒருவரான ஷைஹு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை அன்று முதல் இன்றுவரை அவனியில் தோன்றிய அனைத்து முஸ்லிம்களும் அறிந்திருப்பார்கள் என என்னுகிறேன்.
இறைவனை நேசிப்பவர்களை இறைவனுடைய நேசத்திற்குரியவர்களை நாம் நேசித்தால் ஈமான் - இறை நம்பிக்கை உறுதியாகும்.
நான் இந்நூல் மூலம் பல புதிய தகவல்களை அறிந்துக் கொண்டேன். இப்பொழுது இந்நூல் மிகச் சிறப்பாக, காலத்திற்கேற்ற கருத்துகளுடன் உங்கள் கைகளில் தவழ்கிறது. நீங்கள் வாசியுங்கள் பிறர் வாசிக்க வாங்கிக் கொடுங்கள். அல்லாஹ் இந்நூல் மூலம் அனைவருக்கும் அருள் செய்வானாக ஆமீன்.
B.M.கலீலுர் ரஹ்மான்
18.03.2008
கௌதுல் அஃலம்
பற்றிய முன்னறிவிப்பு
========================
ஸய்யிதினா ஷைஹுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்பே அவர்களது பிறப்பை பற்றி அதிகமான இறைநேசர்கள் முன்னறிவிப்புச் செய்திருக்கிறார்கள்.
ஹள்ரத் பல்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,
"ஹிஜ்ரீ 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 'முஹ்யித்தீன்' என்ற சிறப்புப் பெயருள்ள ஒருவர் ஈராக் தேசத்தில் தோன்றுவார்; அவர் அக்காலத்தைய வலிமார்களுக்கு தலைவராக திகழ்வார்; மக்கள் அவரைப் பின்பற்றுவார்கள்; அவருடைய அதிகாரம் அவர் வாழும் பொழுது இருப்பது போலவே அவரது மரணத்திற்குப் பிறகும் இருக்கும்" என்று கூறியுள்ளார்கள்.
ஷைஹுல் மஷாயிஹ், அபூ அப்தில்லாஹ் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் யஃகூப் ஹமதானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
"வெகு விரைவில் ஈராக் தேசத்தில் ஒரு மஹான் தோன்றுவார். அவருடைய பெயர் 'அப்துல் காதிர்' என்பதாகும். அவர் அல்லாஹ்வின் வலிமார்களுக்குக் கிரீடமாவார்''.
ஷைஹு அபூபக்ர் ஹர்ரார் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரீ 428 ஆம் வருடம் ரமலான் மாதம் ஒரு பெரும் சபையில் கூறினார்கள்.
"சமீபகாலத்தில் ஈராக் நாட்டில் அல்லாஹ்வின் வலி ஒருவர் வருவார். அவர் பெயர் 'அப்துல் காதிர்'. அவருடையப் புனைப் பெயர் 'முஹ்யித்தீன்'. அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படி 'என் பாதம் அனைத்து வலிமார்களின் பிடரியின் மீதிருக்கும்' எனக் கூறுவார் ".
قَدَمِي هَذِهِ عَلَى رِقَابِ كُلِّ وَلِيِّ اللهِ
“என் பாதம், அல்லாஹ்வின் அனைத்து வலிமார்களின் கழுத்தின் மேல் உள்ளது" என்பதின் உண்மையான பொருளைக் காண்போம்.
“அனைத்து வலிமார்களும் என்னைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்களை விட நான் உயர்ந்தவன்; மேலும் அவர்களை நான் அடக்கி வைத்திருக்கிறேன்" என அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாக பொருள் கொள்ளக்கூடாது.
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை அல்லாஹ் இறைநேசர்களில் மிக உயர்ந்த நிலையில் வைத்திருந்தான்.
அவர் மார்க்க விஷயத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால் மற்ற இறைநேசர்கள் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் காட்டிய நேரிய பாதையின் கீழ் வழி நடந்து செல்ல வேண்டும் என்பதையே இந்த சொல் குறிக்கிறது.
மேலும் அந்த சொல்லை அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் சொன்ன போது அக்காலத்தில் இருந்த பல வலிமார்கள் ஆன்மிக உலகில் (காஷ்ஃப் வழியாக) “ஆம், அது உண்மைதான்” என்று ஒப்புக்கொண்டனர். இதனால் அது ஒரு பெருமிதப் பேச்சாக இல்லாமல், ஒரு இறை அருளின் அறிவிப்பு என கருத வேண்டும்.
“பாதம்” அல்லது “காலடி” என்பது அதிகாரத்தையும் வழிகாட்டுதலையும் குறிக்கும். அதாவது, “என் பாதம் அவர்களின் கழுத்தில் இருக்கிறது” என்றால் இறைநேசராக இருப்பவர்கள் அனைவரும் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் வாழ்ந்து சென்ற அடிச்சுவற்றை பின்பற்றி வாழ வேண்டும் என வலியுறுத்துவதாக பொருள் கொள்ள வேண்டும்.
நூல்: ஃபுதூஹுல் கைப், கலாயிதுல் ஜவாஹிர்
ஷைஹு மன்ஸூர் பதாஇஹி (ரஹ்) அவர்கள் தம் சபையில் ஒரு நாள் உபதேசித்தார்கள்.
"வெகு விரைவில் ஒருவர் பிறப்பார். அவரது பெயர் அப்துல் காதிர். அவர் ஞானிகளில் உயர்ந்த மதிப்பு உடையவர். இவ்வுலகத்தாரில் அவர் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மற்றவர்களை விட அதிக பிரியமுள்ளவராக இருப்பார்.
உங்களில் எவரேனும் அவருடைய காலத்தை அடைவீராயின் அவருடைய மகத்துவத்தைக் கவனித்து அவருக்கு மரியாதை செய்யுங்கள்."
ஹிஜ்ரீ 460 ஆம் ஆண்டு ஷைஹு அபூ அஹ்மத் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் தம் சீடர்களிடையே கூறினார்கள்.
"அண்மையில் அஜமி (பாரசீக) தேசத்தில் ஒருவர் பிறப்பார். அவர் தம் செயல்களினால் உலகம் முழுவதும் பிரபலமாவார். வலிமார்கள் எல்லோரிடத்திலும் அவருக்கு ஆதிக்கம் உன்டாகும். 'என் பாதங்கள் எல்லா வலிமார்களின் பிடரியின் மீதிருக்கின்றன' என்றும் அவர் கூறுவார்".
ஷைஹு உகைல் முன்ஜீ (ரஹ்) அவர்கள் "விரைவில் ஈராக் தேசத்தில் (பாரசீக) வாலிபர் தோன்றி பக்தாத் நகரில் சொற்பொழிவாற்றுவார். 'என்னுடைய பாதம் வலிமார்களின் பிடரியின் மீதிருக்கின்றது' என அவர் கூறுவார். வலிமார்கள் அவருக்கு தலைசாய்த்து பணிவார்கள்.
அவருடைய காலத்தில் நானிருப்பேன் அவருக்கு நான் தலைசாய்ப்பேன். அவரை உண்மைப்படுத்துவோருக்கு இறைவன் அநேக நன்மைகளை நல்குவான்' என கூறியுள்ளார்கள்.
ஒரு முறை வெள்ளிக் கிழமையன்று ஹள்ரத் ஸய்யிதுனா ஜுனைதுல் பஃதாதி (ரஹ்) அவர்கள் மெய்ப் பொருளாகிய இறைவனின் தியானத்தில் மெய்மறந்திருந்தார்கள். அச்சமயம் "அவர் பாதம் என் தலை மீது, அவர் பாதம் என் தலைமீது” என்று கூறித் தம் சிரசைச் சாய்த்தார்கள்.
அவர் தெளிவுற்ற பின் சீடர்கள் அவரிடம் "ஏன் அவ்வாறு கூறினீர்கள் ? " என வினவ அதற்கவர் "ஹிஜ்ரி 5வது நூற்றாண்டில் 'ஜீலான்' எனும் நகரில் ஒருவர் பிறப்பார்; அவரது இயற் பெயர் அப்துல் காதிர், சிறப்புப் பெயர் முஹ்யித்தீன், பஃதாது அவர் வாழும் இடமாகும்.
தமது பாதம் எல்லா வலிகளின் சிரசு மீதிருப்பதாக இறை உத்தரவின்படி அவர் கூறுவார். அம்மாபெறும் மெஞ்ஞானியின் பாதம் என் தலைமீது ஏன் இருக்கக் கூடாது? என நினைத்தேன். ஆதலால் அவ்வாக்கியங்களைக் கூறினேன் சிரம் சாய்த்தேன் எனக் கூறினார்கள்.
இவர்களைத் தவிர்த்து இன்னும் அநேக இறை நேசர்கள் கௌதுல் அஃலம் பிறப்பைப் பற்றி முன்னறிவிப்புச் செய்து இருக்கிறார்கள்.
நூல்: தாரீக் பக்தாத், சீரா அஃலாமு நுபுலா
தந்தை வழி பறம்பரை :
=======================
ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் தந்தை அபூ சாலிஹ் ஐங்கி தோஸ்த் அவரின் தந்தை அப்துல்லாஹ், இவரின் தந்தை யஹ்யா அல்ஜாஹித் இவரின் தந்தை முஹம்மது; இவரின் தந்தை தாவூது; இவரின் தந்தை மூஸா; இவரின் தந்தை அப்துல்லாஹ்; இவரின் தந்தை
மூஸா அல்ஜோன் ; இவரின் தந்தை அப்துல்லாஹ் அல் மஹழ் ; இவரின் தந்தை மூஸா; இவரின் தந்தை அல்ஜோன்; அவரின் தந்தை அல் ஹஸனுல் முஸன்னா; இவரின் தந்தை ஹசன் (ரலி); இவரின் தந்தை அலீ பின் அபீ தாலிப் (ரலி) ஆவார்கள்.
தாய் வழி பறம்பரை :
=====================
ஷெய்கு அவர்களின் தாய் பெயர் பாத்திமா இவரின் தந்தை செய்யது அப்துல்லாஹ் அஸ்ஸவ்மயீ ஜாஹித் இவரின் தந்தை அபூ ஜமாலுத்தீன் முஹம்மது அவரின் தந்தை மஹ்மூது அபுல் அதா அப்துல்லாஹ் இவரின் தந்தை கமாலுத்தீன் ஈஸா இவரின் தந்தை அல் கமாம் அபூ அலாவுத்தீன் முஹம்மது அல் ஜவ்வாது இவரின் தந்தை அலீ ரிழா இவரின் தந்தை அல்கமாம் மூஸா அல் காழிம் இவரின் தந்தை ஜஅஃபர் சாதிக் இவரின் தந்தை முஹம்மது பாக்கர் இவரின் தந்தை இமாம் அலீ ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) இவரின் தந்தை இமாம் ஹுசைன் (ரலி) இவரின் தந்தை அலி (ரலி) ஆவார்கள்.
நூல்: ஃபுதூஹுல் கைப், அஃலாமுல் முஸ்லிமீன்
பிறப்பும் பெற்றோரின் சிறப்பும் :
================================
ஹிஜ்ரீ 470 ஆம் ஆண்டு கி.பி. 18.03.1078 ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாதம் முதல் பிறையன்று அபூஸாலிஹ் பின் மூஸா பாத்திமா தம்பதியருக்கு ஹள்ரத் கௌதுல் அஃலம் அவர்கள் மகனாக பிறந்தார்கள்.
இவர் பிறக்கும் பொழுது இவர்களின் தாயாருக்கு வயது அறுபது. முதுமையான பருவத்தில் பெண்கள் கருவுற்று பிற்சவிப்பது வழக்கமில்லை. ஆகையால் அவருடைய பிறப்பே அபூர்வச் செயல்களில் ஒன்றாகும்.
மற்ற வலிமார்கள் நபிமார்கள், பிறக்கும் போதெல்லாம் உலகில் அநேக அற்புதங்கள் நிகழ்வது போல் இவர்கள் பிறந்த போதும் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
இவர் பிறந்த தினத்தன்று அவர் தந்தையின் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றி "அபூ ஸாலிஹே! உங்களுக்கு அல்லாஹ் சிறந்த மகனை அளித்திருக்கிறான். அவர் எனக்கும் அல்லாஹ்வுக்கும் பிரியமானவர் வலிகளிரிடையே அந்தஸ்து மிக்கவர்" என கூறினார்கள்.
இவர் கருவிலிருந்த காலத்தில் இவரது அன்னையின் கனவில் ஹள்ரத் கிலுறு (அலை) அவர்கள் தோன்றி "உமது கருவறையில் இருப்பவர் எல்லா வலிமார்களுக்கும் தலைவரான முஹ்யித்தீன் என்பவராவார்" என அறிவித்து சென்றார்கள்.
இவர் பிறந்த இரவில் ஜீலான் நகர் முழுவதிலும் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தன. இக்குழந்தைகள் யாவும் ஆண்களே! அவைகளில் பெண் குழந்தை ஒன்று கூட இல்லை; இக்குழந்தைகள் யாவும் பிற்காலத்தில் பரிபூரணமான வலிகளாகவே வாழ்ந்தார்கள்.
இவர் பால்குடிப் பாலகராக இருக்கும் பொழுது நோன்பின் காலமாகிய ரமலான் மாதத்தின் பகலில் பால் குடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
நூல்: நூருல் அஃப்ஸார்
இம்மெஞ்ஞானியின் இயற்பெயர் அப்துல் காதிர். சிறப்புப் பெயர் முஹ்யித்தீன். காரணப் பெயர் அபூ முஹம்மது. மக்கள் அழைப்பது கௌதுல் அஃலம். இவர் பிறந்த ஊர் ஜீலான்' என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் சில அறிஞர்கள் இவர் பிறந்த இடம் 'நீப்' என்றும் வேறு பலர் 'புஷ்தீர்' என்றும் கூறுகின்றனர்.
எனினும், 'நீப்' என்பதும் புஷ்தீர் என்பதும் ஒரே ஊருக்குள்ள இரு பெயர்களாக இருக்கக் கூடும். என்றாலும், இவ்வூர்கள் ஜீலான் நகரைச் சார்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. குத்துபு நாயகமவர்கள் தாய், தந்தை ஆகிய இருவழியிலும் ஹள்ரத் இமாம் ஹஸன் , ஹுசைன் (ரலி) ஆகிய இருவரின் வம்சத்தவர்கள் ஆவார்கள்.
இவர்களின் பெற்றோர், பாட்டனார், தந்தையின் சகோதரியான அத்தை ஆகிய யாவரும் இறைவனின் ரிழா - பொருத்தத்தைப் பெற்ற நல்லடியார் களாகவும், அன்றைய வலிமார்களாகவும் இருந்தார்கள்.
தாய் வழிப் பாட்டனார் ஸய்யது அப்துல்லாஹிஸ் ஸௌமயீ என்பவர் பிரபல இறைநேசர்களில் ஒருவர். இல்லரத் துறவி நித்திரை நீக்கி தியாணிப்பவர், தினசரி நோன்பு நோற்பவர், பொறுமைமிக்கவர், நன்றி மறவாதவர் பனிவை தனக்குரிய ஆபரணமாகக் கொண்டவர். இவர் அநேக அற்புதங்களை உடையவராக இருந்தார்கள்.
குத்துபு நாயகமவர்களின் தகப்பனாருடன் பிறந்தவராகிய ஆயிஷா என்ற அம்மையார் தெய்வ வழிபாட்டில் சிறந்தவராக இறைவனின் கட்டளைக்கு சிறிதும் மாற்றமில்லாமலும் இறை விலக்கல்களை தவிர்ப்பவராகவும், இவர் கேட்கும் பிரார்த்தனைகள் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படுபவராகவும் இருந்தார்கள். இவர் முஸ்தஜாபுத் துஆ எனக் கருதப்பட்டு வந்தார்கள்.
நூல்: கலாயிதுல் ஜவாஹிர்
கௌதுல் அஃலம் அவர்களின் தந்தை ஹள்ரத் ஸய்யிதுனா அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் பயபக்திஉடையவர். மார்க்கக் கடமைகளை மிகவும் பேணி நடப்பவர். இவரைப் பற்றி ஒரு சம்பவம் பிரபலமாக கூறப்படுகிறது.
இவர் ஓர் ஆற்றின் கரையோரமாக பசியோடு நின்று கொண்டிருந்தார். ஓர் அத்திப் பழம் அவ்வாற்றில் மிதந்து வந்தது. அதை அவர் எடுத்து சாப்பிட்டார்.
பழத்தைப் புசித்த பின் இது எவருக்குச் சொந்தமான பொருளோ? சொந்தக்காரரின் சம்மதமில்லாமல் சாப்பிட்டது ஹலாலாாகுமா? என நினைத்தார். வருந்தினார், அப்பழத்திற்குரியவர் யாரெனத் தேடலானார்.
ஆற்றின் கரையோரமாகவேச் சென்றார். இறுதியாக ஒரு தோட்டம் தென்பட்டது. அதில் அத்திமரம் ஒன்று ஆற்றின் கரையில் இருந்தது. அம்மரத்தின் கிளைகள் ஆற்றின் நீரில் உரசி கொண்டிருக்கவும் கண்டார். தான் தின்ற அத்திப்பழம் இம்மரத்தின் கனியாகவே இருத்தல் வேண்டும் என உணர்ந்தார்.
இத்தோட்டத்தின் உரிமையாளர் யார்? அவர் வீடு எங்கே? என விசாரித்தார். அத்தோட்டத் திற்குரியவர் ஸய்யது அப்துல்லாஹிஸ் ஸௌமயீ என்பவர் என்றும் அவர் அத்தோட்டத்தின் நடுவில் இருக்கின்ற மாளிகையில் வசித்து வறுகிறார் என்றும் அறிந்தார்.
அனுமதியில்லாமல் அத்திப்பழம் உண்டதற்காக தமது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்க அவரிடம் சென்றார்.
அவர் மெஞ்ஞானியாக இருந்தார். இவரைச் சோதிப்பதற்காக , "பன்னிரெண்டு ஆண்டுகள் என்னிடம் வேலை செய்தால் தாங்கள் செய்த குற்றத்தை மன்னிப்பேன்" என்றார்.
இறை பக்தியில் சிறந்தவராகிய ஆபூ ஸாலிஹ் அவர்கள் இதற்கு அஞ்சுவார்களா என்ன? இறைப் பொறுத்தம் பெற பன்னிரெண்டாண்டு ஊழியம் செய்ய ஒரு பொருட்டாக தோன்றவில்லை.
அவர் ஏவிய ஊழியத்தை ஏற்றுக் கொண்டார். பன்னிரெண்டாண்டு தொண்டாற்றினார். கெடு முடிந்தது. மன்னிக்க வேண்டுமென மன்றாடினார்.
எனினும் இப்பன்னிரண்டு ஆண்டு காலம் சோதனை செய்து அவரது மன உணர்ச்சியைக் கண்ட ஹள்ரத் அப்துல்லாஹ் ஸௌமயீ என்ற இறைநேசர் மேலும் ஒரு சோதனை செய்ய நினைத்து மற்றொரு நிபந்தனை விதித்தார்.
"இன்னொரு ஊழியம் உண்டு அதையும் நிறைவேற்றினால் மன்னிப்பேன். எனக்கு ஒரு மகள் உண்டு. அவள் குருடு, செவிடு, ஊமை, முடம், சப்பானி ஆகிய குறைபாடுள்ளவள், அச்செல்வியை நீர் மணம் புரிய வேண்டும்" என்றார்.
அதற்கும் அவர் இறைவனின் திருப்தியை பெறுவதற்காக திருமணம் செய்து கொள்ளவும் ஒப்புக் கொண்டார்கள். உடனே திருமணமும் நடந்தது.
தம்பதிகளிருவரும் தனித்தனர். மணமகள் அளவற்ற அழகு பொருந்தியவராகவும் தமக்கு அறிவிக்கப்பட்ட குறைகளில் எதுவும் இல்லாத கன்னியாகவும் இருக்கக் கண்டு கலங்கினார், மயங்கினார்.
இவர் தமக்குரிய மனைவியல்லவே என எண்ணினார். ஏதும் அப்பெண்ணிடம் பேசாமல் தன் மாமனாரிடம் வந்து விஷயங்களை கூறினார்.
அதற்கவர், "நான் உம்மிடம் உரைத்த விஷயங்கள் யாவும் அக்கன்னியிடம் உண்டு. இதில் எதுவும் தவரில்லை; அன்னிய ஆண்களை என் மகள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை அதனால் அவர் குருடே!
தேவையில்லாத பேச்சுக்களை கேட்கமாட்டார். அதனால் அவர் செவிடே! சட்ட விரோதமான எப்பேச்சையும் பேசமாட்டார் அது விஷயத்தில் ஊமையே!
அந்நிய ஆடவரைத் தீண்டும் விஷயத்தில் என் புதல்வி முடமே! உம்முடைய உத்தரவிற்கு விரோதமாக இனி எந்த இடத்திற்கும் செல்ல மாட்டார்; இவ்விஷயத்தில் அவர் சப்பாணியே" என விளக்கினார்.
தமக்குக் கிடைத்த பாக்கியவதியின் அரும் பெரும் குணத்தைக் கேட்ட அபூ ஸாலிஹ் அவர்கள் நிம்மதியானார்கள். சந்தோஷத்தால் பூரித்தார்கள். அன்று முதல் தம்பதிகள் இருவரும் ஒருவருக் கொருவர் அன்புடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி வந்தனர்.
நூல் : நூருல் அப்சார்
தொடரும்.......
Comments
Post a Comment