மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி ஞான கல்வி
நேற்றைய தொடர்ச்சி......
மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
====================================
ஞான கல்வி :
சுமார் பத்து வருடங்கள் பக்தாதில் மார்க்கக் கல்வியை பயின்ற பிறகு ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிஃபத் ஆகிய ஞான முறைக்கல்வியை கற்க முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
பொதுவாகவே முற்காலத்தில் மார்க்கக் கல்வியை கற்பிக்கும் பாடசாலைகள் குருகுலம் போல் இயங்கி வந்திருக்கின்றது; அங்கு பயின்று வெளியேறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆன்ம ஞான பயிற்சியை பெற்றே வருகின்றனர்.
அதனால்தான் அவர்கள் அன்று செய்த தீனுடைய சேவைகள் உடனுக்குடன் மக்களிடம் சென்று மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஜீலானி (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் ஹம்மாது (ரஹ்) அவர்களிடமும் பின்னர் காஜி அபூ ஸயித் அல் முபாரக் அல் மக்ஸூமி (ரஹ்) அவர்களிடமும் ஆன்ம ஞான பயிற்சி பெற்று பைஅத் - ஞான தீட்சை பெற்றார்கள்.
மார்க்கக் கல்வி பயின்று வந்த வேலைகளிலேயே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் காடுகளுக்குச் சென்று இரவு பொழுதிலும் விடுமுறை நாட்களிலும் இபாதத் - இறைவழிபாடு செய்து இன்புற்று வந்தார்கள்.
இப்பொழுது மார்க்கக் கல்வியை முழுவதுமாக படித்து விட்டதால் படித்ததுபடி அமல் செய்து பார்க்க காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு ஞான வழிபாட்டை கற்பித்த ஆசான்கள் காட்டிய வழிமுறைதான்!
ஞான அறிவைப்
புகட்டிய ஆசிரியர்கள் :
===============================
ஜீலானி (ரஹ்) அவர்கள் ஸைய்யிதுனா காஜீ அபூ ஸயீத் அல் முபாரக் அவர்களிடம் ஞான உபதேசம் பெற்றது போலவே, அவர் ஸைய்யிதுனா அபுல் ஹஸன் அலி (ரஹ்) அவர்கள் இடத்திலும், அவர் ஸைய்யிதுனா அபுல் ஃபஸ்லு அப்துல் வாஹித் (ரஹ்) அவர்கள் இடத்திலும், அவர் ஸைய்யிதுனா அபூ பக்ர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் இடத்திலும்,
அவர் ஸைய்யிதுனா ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் இடத்திலும், அவர் ஸைய்யிதுனா சிர்ரிய்யுஸ் ஸிக்தீ (ரஹ்) அவர்கள் இடத்திலும், அவர் ஸைய்யிதுனா மஃரூப் கர்கீ (ரஹ்) அவர்கள் இடத்திலும், அவர் ஸைய்யிதுனா தாபூதுத் தாயீ (ரஹ்) அவர்கள் இடத்திலும், அவர் ஸைய்யிதுனா அலி (ரலி) அவர்களிடத்திலும் அன்னார் நமது நாயகம் (ஸல் ) அவர்களிடத்திலும் குரு உபதேசம் பைஅத் பெற்றனர்.
இதுதான் அவர்கள் பைஅத் செய்த சில்சிலா வமிசத் தொடர்.
ஜீலானி (ரஹ்) அவர்களின் குருவழி பரம்பரை பன்னிரண்டாவது தலைமுறையில் நபி (ஸல்) அவர்களை சென்று சேருவது போலவே, அவர்களின் வம்சாவளி பரம்பரையும் பனிரெண்டாவது தலைமுறையில் நபி (ஸல்) அவர்களை சென்றடைகிறது.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் உபதேசங்களும் ஸைய்யது பரம்பரை மரபிற்கு கிடைக்கும் சக்தியும் ஒரே அளவில் இவர்களுக்குக் கிடைக்கின்றது.
மற்ற மகான்களுக்கு குடும்ப பரம்பரையும், சைய்யது பரம்பரையும் ஒரே அளவில் கிடைத்ததாக சரித்திரம் இல்லை.
கிலிர் அலை சந்திப்பு :
=======================
இவ்வாறு பல குருமார்களிடம் ஞான உபதேசங்களை பெற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த காடுகளுக்குச் சென்று கடுமையாக இறைவழிபாட்டில் ஈடுபட்டார்கள்.
ஆன்மஞானத் துறையில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டியாகத் திகழும் 'கிலுரு' (அலை) அவர்கள் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் திடீரெனத் தோன்றி, "எப்பொழுதும் என் சொல்லுக்கு மாறு செய்ய மாட்டேன் என எனக்கு வாக்குறுதி கொடுங்கள்" எனக் கேட்டதும் வழங்கி விட்டார்கள்.
ஆனால் வந்திருப்பது யார்? எதற்காக இந்த வாக்குறுதியை கேட்கிறார்? என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமலே வாக்குறுதி வழங்கினார்கள்.
பின்னர் கிலிர் (அலை) அவர்கள், "நான் திரும்பி வரும்வரை இந்த வனத்திலேயே இறைவழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வாருங்கள்; இந்த வனத்தை விட்டும் வெளியே செல்ல கூடாது" என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.
பின்னர் ஒரு வருடம் கழிந்ததும் மீண்டும் வந்து, முன்பு கூறியது போலவே சொல்லிவிட்டு சென்றார்கள். ஜீலானி (ரஹ்) அவர்கள் கடும் தவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள்.
பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் வந்து இறைவழிபாட்டின் சில வழிமுறைகளை சொல்லிக் கொடுத்து அதையும், தாங்கள் இன்று வரை செய்யும் அமல்களையும் தொடர்ந்து செய்து வாருங்கள்! இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
இவ்வாறு மூன்று முறை தோன்றி அமல்களை செய்ய ஆர்வப்படுத்திவிட்டு சென்றவர்கள் நான்காவது முறையாக வந்து, "மக்களிடையே சென்று இஸ்லாத்திற்கு அழைப்பு விடுங்கள், மக்களை நல்வழிப் படுத்துங்கள் எனவும் அறிவுரை பகர்ந்துச் சென்றார்கள்.
மூன்று ஆண்டு காலம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வெய்யில், மழை, பனி, தனிமை முதலியவைகளைப் பொருட்படுத்தாமல் வனத்தில் அருந்தவம் செய்து வந்தார்கள்.
அந்தக் காலத்தில் பருவ காலத்திற்கு ஏற்றார் போல் விளையும் இலை, சருகு, பூக்கள், விதைகள், கிழங்குகள் போன்றவற்றை மட்டுமே உண்டு வந்தார்கள். நெருப்பில் சமைத்த எதையும் சாப்பிடவில்லை. இது அல்லாமல் வேறு எந்த உணவையும் கண்ணில் கூடக் கண்டதில்லை.
முதல் வருடத்தில் இலைகளை சாப்பிட்டுக் கொண்டு தண்ணீரை மிக மிகக் குறைவாக குடித்து தியானம் செய்து வந்தார்கள். அதாவது தண்ணீரை பருகாமல் தமது சரீரத்தை தயார் செய்தார்கள்.
இரண்டாவது வருடம் தண்ணீரை தாராளமாக குடித்து இலைகளை மிக மிகக் குறைவாகவே சாப்பிட்டு வந்தார்கள். அதாவது உணவை உட்கொள்ளாமல் தமது சரீரத்தை தயார் செய்தார்கள்.
மூன்றாவது வருடம் இரண்டையும் ஒதுக்கி வைத்து விட்டு உயிர் வாழ்வதற்குத் தேவையான தண்ணீரையும் இலைகளையும் மட்டுமே சாப்பிட்டு தவத்தில் ஈடுபட்டார்கள். அதாவது இரண்டையும் உட்கொள்ளாமல் தமது சரீரத்தை தயார் செய்தார்கள்.
பொதுவாகவே இறைநேசர்கள் ஆன்மாவை சரி செய்ய தியானம் மற்றும் இறை வழிபாடுகளை அதிகப்படுத்தும் அதே நேரத்தில், உணவு, பானம் ஆகியவற்றை குறைக்கவும் செய்வார்கள்.
இதனால் நஃப்ஸ் எனும் தீய ஆத்மா படிப்படியாக அழிந்து வானவர்களின் சுபாவம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும்.
வானவர்களின் ஆத்மா வந்து சேரும்போது உண்ணாமலும் பருகாமலும் நீண்ட நாட்கள் இருக்க உடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும். அதே நரம் அதற்கான சக்தியையும் வல்லமையையும் அல்லாஹ் வழங்கி விடுகிறான் என்பதை உண்மை.
மேலும் அந்த மூன்று ஆண்டுகள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் கண் முன்னே பல வகையான ஆசாபாசங்கள் தோன்றி மனக்குழப்பத்தை உண்டாக்கி தவ வாழ்வில் இருந்து வெளியேற்ற ஷைத்தான் முயற்சித்தான்.
ஆனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எந்த மனக்குழப்பங்களுக்கும் இடம் கொடுக்கவில்லை; முன்னேறிச் சென்றார்கள்.
மேலே கிலிர் (அலை) அவர்கள் குறித்து கண்டீர்கள். கிலிர் (அலை) அவர்கள் இப்பொழுதும் உயிரோடு இருக்கிறார்கள்; அவர்கள் இறைநேசர்களிடம் காட்சியளித்து அவர்களை தொடர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபட ஆக்கமும் ஊக்கமும் அழித்து வருகிறார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
கிலிர் அலை அவர்களை பல நூற்றுக்கணக்கான இறைநேசர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்ற சம்பவங்கள் ஆதாரப்பூர்வமான நூல்களில் இடம்பெற்றுள்ளது.
எனவே கிலிர் (அலை) அவர்கள் குறித்து இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது அந்த இடங்களை நீங்கள் மௌனமாக கடந்து சென்று விடுங்கள்; மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மௌனமாக இருந்து விடுங்கள்.
உலகத்தில் எத்தனையோ மர்மமான விஷயங்கள் இருக்கின்றது; அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கட்டும்.
தொடரும்.....
Comments
Post a Comment