மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி ஈஷா (அலை) அவர்களின் ஆசி

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
===================================

நேற்றைய தொடர்ச்சி......5

ஈஷா (அலை) அவர்களின் ஆசி :
==============================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "மக்களுக்கு அறிவுரை சொல்ல வருவோரிடம் மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும்" எனக் கூறுகிறார்கள்.

1.  ஷரீஅத் - மார்க்கக் கல்வியில் அதீத திறமை பெற்றிருக்க வேண்டும்.

2.  ஆன்ம ஞானம் - சூபித்துவக் கலையில் ஈடுபட்டு முதிர்ச்சி அடைந்திருப்பதோடு அனுபவங்களை பெற்றிருக்க வேண்டும்.

3.  எதை சொல்கிறோமோ அதை செய்யும் வழக்கம் இருக்க வேண்டும்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மேற்கண்ட மூன்று வரையறைகளையும் தம் வாழ்க்கைக்கு வகுத்துக் கொண்டு செயல்பட்டதால் அவர்களின் சொல் கேட்கும் அனைவரின் இதயத்திற்குள்ளும்  சென்றடைந்தது.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய மாணவர்கள், சிஷ்யர்கள் ஆகியோர் அவர்கள் பேசும் பேச்சை எழுத்து வடிவமாக்கி உலகம் முழுவதும் பரவச் செய்தார்கள். அதனாலும் அவர்களின் புகழ் பரவியது. 

அந்த நூல்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்கின்றது.

ஷைகு உமர் கீமியா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; ஏமன் நகரைச் சேர்ந்த 'சனான்' எனும் கிறிஸ்தவ பாதிரியார் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் கரங்களில் இஸ்லாத்தைத் தழுவினார். 

அவர் என்னிடம் கூறியதாவது; "நான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என ஆசைப்பட்டேன்; நான் இஸ்லாத்தில் சங்கமிப்பது சாதாரணமாக இல்லாமல் மாபெரும் ஒரு மேதையின் கரத்தில் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என ஆசைப்பட்டேன்; 

இந்த சிந்தனையில் தொடர்ந்து இருந்து வந்த போது ஒரு நாள் ஈஸா (அலை)  அவர்களை கனவில் கண்டேன்.

அப்பொழுது அவர்கள், 'சனானே! நீங்கள் பக்தாத் சென்று இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை சந்தித்து அவர்களின் கரங்களில் இஸ்லாத்தில் இணையுங்கள்; அவர் இன்றுள்ள மக்கள் அனைவரை விடவும் சிறந்தவர்' என்று கூறினார்கள். எனவே நான் புறப்பட்டு வந்து இஸ்லாத்தைத் தழுவினேன்" எனக் கூறினார்.

உயிர்ப்பான பேச்சு :
===================

உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்த முரீதீன்கள் அவர்களின் பேச்சை உயிர்ப்போடு வைத்து கொண்டார்கள்; காலம் சென்ற நபிமார்கள் நபித்தோழர்கள் மற்றும் நல்லவர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் நினைவை  தேவைப்படுவோருக்கு நினைவுறுத்தி வந்தார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; மீண்டும் நான் காடுகளுக்குச் சென்று கடும் தவம் செய்யவே ஆசைப்படுகிறேன்; மக்களில் எவரையும் நான் பார்க்க விரும்பவில்லை; எவரும் என்னை பார்க்க வருவதையும் நான் விரும்பவில்லை என்பதே எனது விருப்பம். 

ஆனால் நான் மக்களுக்கு அறிவுரை பகறாமல் மௌனமாக இருந்தால் எனது குரல்வளை நெரிக்கப்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்; அதனால் நான் அறிவுரை கூறி வருகிறேன் .

எனது பேச்சில் அல்லாஹ் ஒரு வசீகர தன்மையை வைத்திருக்கின்றான்; அதனால்தான் என்னிடம் மக்கள் தேடி வருகிறார்கள்; இஸ்லாத்தில் இணைகிறார்கள்; திருந்தி வாழ முற்படுகிறார்கள்; அதை நான் என் சுயலாபத்திற்காக தடுத்திட விரும்பவில்லை.

முஹம்மது ஸஃது ஹராதா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

இமாம்  ஜீலானி (ரஹ்) அவர்களைவிட அழகிய குணம் கொண்ட,  விசாலமான இதயம் படைத்த, நட்பையும், வாக்குறுதியையும்  காப்பாற்றுகின்ற எவரையும் நான் கண்டதில்லை. 

மேலும், இவர்கள் இவ்வளவு சிறப்பும், கல்வி ஞானமும் பெற்றிருந்தும் கூட சிறுவர்களோடு நின்று பேசுவார்கள்; பெரியவர்களுக்குக் கண்ணியம் அளிப்பார்கள்; தாமே முந்திக் கொண்டு ஸலாம் சொல்லி பேசத் தொடங்குவார்கள்.

சாமானியர்களோடு அமர்ந்திருப்பார்கள்; ஏழைகளிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; அரசர்கள், அமைச்சர்கள், செல்வந்தர்கள் என எவருக்காகவும் எழுந்து நிற்கமாட்டார்கள். 

மன்னர்கள் மற்றும் அமைச்சர்க ளுடைய வாசலுக்கு ஒருபோதும் அவர்கள் சென்றதில்லை.

முஹம்மத் பின் யூசுப்  (ரஹ்) அவர்கள், "இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய பிரார்த்தனை உடனே ஒப்புக்கொள்ளப்படக்கூடிய நிலையில் இருந்தது;  எப்பொழுதும்  இறைவனை நினைவு கூருபவராகவும்,  இளகிய இதயம் கொண்டவராகவும், சிரித்த முகத்திற்கு சொந்தக்காரராகவும் இருந்தார்கள். 

தாராளமாக தர்மம் கொடுக்கும் கரமுடையவராகவும், நிறைவான கல்வியை பெற்றவராகவும் விளங்கினார்கள்.

நூல் : கலாயிதுல் ஜவாஹிர்

இமாம் ஜிலானி (ரஹ்) அவர்கள் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இறைவனை நெருங்கி வாழ்ந்தார்கள்; மக்களுடன் நெருங்கி பழகி வந்தார்கள்.

அல்லாஹ் கண்ணியம் அளித்தவற்றுக்கு எவரேனும் களங்கம் கற்பித்தால் அதனை கடுமையாக எதிர்த்தார்கள்; கோபம் அவர்களிடம் அறவே இல்லை" என முஹம்மது பின் ஹாமித் பக்தாதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

"என் ஆய்வின்படி நாம் செய்கிற அனைத்து வகையான அமல்களை விடவும் ஆகச்சிறந்தது உணவளிப்பது தான். உலகமே எனது கரங்களில் வந்துவிட்டாலும் அவை அனைத்தையும் பசித்தோருக்கு உணவாகவே அளித்துத் தீர்ப்பேன்" என இமாம் ஜிலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு நாள் இரவும் உணவுக்காக விரிப்புகளை விரிக்கும்படி கூறுவார்கள்; அந்த பந்தியில் ஏழைகள், வழிப்போக்கர்கள், நண்பர்கள் என பலரையும் அழைத்து வந்து சாப்பிட வைப்பார்கள்; தாமும் சாப்பிடுவார்கள். ஒரு நாளும் தனியாக சாப்பிட்டதே இல்லை.

தமது மாணவர்களிடம் பொறுமையோடு நடந்து கொள்வார்கள்; அவர்களோடு உரையாடுவார்கள்; தன்னைவிட வேறு யாரும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு கண்ணியத்திற் குரியவராக இல்லை என்று ஒவ்வொருவரும் எண்ணுவர்.

தம் தோழர்களில் எவரேனும் சில நாட்கள் வரவில்லை என்றால் அவர்கள் குறித்து விசாரித்து அவர்களுக்கான தேவைகளை நிறைவு செய்வார்கள்; நண்பர்கள் செய்யும் சில சேட்டைகளையும் மன்னித்து விடுவார்கள்.

தொடரும்........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்