சந்தோஷ சிரிப்பு

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 64

சந்தோஷ சிரிப்பு 
==============================

ஷைகு அபூ அப்துல்லாஹ் அல் ஜூர்கானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;  ஒரு நாள் இரவு நான் உறங்கிக் கொண்டிருந்தேன்; உறங்குவோர் எதை பார்ப்பார்களோ அதை நானும் பார்த்தேன்.

மக்கள் அபுல் ஃபரஜ் அல்முகிர்ரீ (ரஹ்) அவர்களுடைய கல்விக்கூடத்தின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருந்தார்கள்.

"இந்த மக்களுக்கு என்ன ஆனது? சாரை சாரையாக சென்று கொண்டிருக்கிறார்களே!" என்று நான் கேட்டேன்; அப்பொழுது அவர்களில் ஒருவர்,

"அல் முகிர்ரீ (ரஹ்) அவர்களுடைய பாடசாலைக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் வருகை தந்திருக்கிறார்கள்; அதைக் கேட்டு நான் சந்தோஷமடைந்தேன்; அங்குதான் நானும் விரைந்து சென்று கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

நான் இமாம், அல்ஹாஃபிழ், அபல் அலாவு (ரஹ்) அவர்களை தேடிச் சென்று விவரத்தைக் கூறினேன்; நான் சொன்னதை கேட்டதும் அவர்களும் சந்தோசமும், பெரு மகிழ்வும் அடைந்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் நிறைந்த ஒரு நூலை எடுத்துக் கொண்டு என்னோடு வந்தார்கள்; நாங்கள் இருவரும் அந்தப் பாடச்சாலைக்குள் சென்றோம்.

அப்பொழுது அங்கு நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்; அனஸ் (ரலி) அவர்கள் நபிகளாருக்கு இடது புறமாக அமர்ந்திருந்தார்கள். 

நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்று ஸலாம் சொல்லிவிட்டு அவர்களுக்கு எதிரில் அமர்ந்தோம். 

இமாம், அல்ஹாஃபிழ், அபல் அலாவு (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களின் தொகுப்பு நூலை வாசிக்க நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள்; பெருமானார் அனுமதித்தார்கள்.

இமாம், அல்ஹாஃபிழ், அபல் அலாவு (ரஹ்) அவர்கள் வாசிக்கத் தொடங்கினார்கள்; திக்கல், திணறல் இல்லாமல், தெளிந்த நீரோடை போல அழகாக வாசித்தார்கள்; நான் அப்பொழுது நபி (ஸல்) அவர்களை கவனித்தேன்.

நபி (ஸல்) அவர்கள் வாசிக்கும் அபல் அலாவு (ரஹ்) அவர்களுடைய முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை கண்டும், எனது முகத்தில் ஏற்படுகிற சந்தோஷத்தை கண்டும் சந்தோஷப்பட்டு பொன்முறுவல் பூத்தார்கள். 

அந்த நூலை வாசித்து முடித்திருந்த  நிலையில் நான் உறக்கத்திலிருந்து விழித்தேன்.

எழுந்து சென்று உளூ செய்துவிட்டு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதமாக தொழுதேன்; நபிகள் நாயகம் அவர்களை கனவில் கண்டதற்காக அல்லாஹ்விற்கு மீண்டும் நன்றி செலுத்தினேன்.

நூல் : முஃஜமுல் அதபாவு

நபி (ஸல்) அவர்கள் அபுல் ஃபரஜ் அல்முகிர்ரீ (ரஹ்) அவர்களுடைய பாடசாலைக்கு வருகை தந்திருந்தது அல்முகிர்ரீ (ரஹ்) அவர்களுடைய பணிகளை  அங்கீகரித்துக் கொண்டதின் அடையாளமாகும். 

ஷைஹு அபூ அப்துல்லாஹ் அல் ஜூர்கானீ (ரஹ்) அவர்கள் நபிகள் நாயகம் அவர்கள் வந்திருக்கும் இடத்தை அறிந்ததும், தான் மட்டும் செல்லாமல் தனக்குப் பிரியமான இமாம் அல் ஹாஃபிழ் அபல் அலாவு (ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்ற பாங்கு, சந்தோசத்தின் போது தன்னிலை மறந்து செயல்படாமல் நிதானத்தோடு செயல்பட்ட அந்த நிதானம் நமக்கும் வர வேண்டும் என அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். 

நபி (ஸல்) அவர்களின் பேச்சுகளான அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கும் ஹதீஸ்கள் மட்டும் தொகுக்கப்பட்ட தொகுப்பை எடுத்துச் சென்று வாசித்து, நபியையும், நபித்தோழரையும் சந்தோஷத்தில் ஆழ்த்த வேண்டும் என இருவரும் நினைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "தமக்கு முன்னால் இவ்விருவரும் இந்த ஹதீஸை வாசிப்பதில் தான் சந்தோஷம் கிடைக்கும் என்றால் அந்த சந்தோஷத்தை முழுமையாக வழங்க நான் தயாராக இருக்கிறேன்" என்பது போல் கருதி அந்த ஹதீஸ்களை வாசிக்கும் வரை பெருமானார் கனவில் காட்சியளித்துக் கொண்டே இருந்தார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது?

அதே சமயம் நபிகள் நாயகம் அவர்கள், நபி நேசர்கள்  விரும்புவதை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்