நாவின் வலிமை மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
நேற்றைய தொடர்ச்சி....6
நாவின் வலிமை :
=================
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லி வந்தார்கள். அவர்கள் பேசத் தொடங்கி விட்டால் பல்லாயிரக்கணக்கானோரும் மௌனித்து விடுவார்கள்.
"அவர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு பயானிலும் நூற்றுக்கணக்கானோர் உணர்விலந்து விழுந்து விடுவார்கள்; பல்லாயிரக்கணக்கானோர் அழுது துடிதுடிப்பார்கள்; பல நூற்றுக்கணக்கானோர் அழுவதோடு மட்டுமின்றி தம் ஆடைகளை கிழித்துக்கொள்வார்கள்.
அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் நான்கைந்து பேர் உயிர் இழந்து விடுவார்கள்" என அவர்களின் மூத்த மகனார் ஸைய்யதுனா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இருண்டு போயிருந்த இதயங்களுக்கு ஒளி ஏற்றியதால் அவை புத்துயிர் பெற்றது. பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழ வழி வகுத்தது.
பல்லாயிரக்கணக்கான மாற்று மதத்தினர் இஸ்லாத்தில் இணைந்தனர். அதனால் முஹ்யிதீன் - மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் என்று பொதுமக்கள் பட்டப்பெயர் சூட்டி அழைத்தனர்.
முவஃபக்குதீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அநேக அற்புதங்கள் நிகழ்த்தி இருந்தாலும், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களில் முதன்மையானது இறந்து போயிருந்த இதயங்களை உயிர்ப்பித்து, அவற்றில் இறையச்சம், இறையன்பு, இறை நம்பிக்கை ஆகியவற்றை விதைத்தது தான்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் உரை நிகழ்த்தி முடித்த பிறகு யூதர்களும், கிறிஸ்தவர்களும், நெருப்பு வணங்கிகளும் வரிசையாக வந்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவார்கள்; அந்த வரிசை ஒவ்வொரு முறை பயான் நிகழ்த்தும் போதும் நீண்டு கொண்டே இருக்கும்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒரு புது மத்ஹபையே தோற்றுவிக்கும் அளவிற்கு அறிவும், ஞானமும் இருந்தாலும் கொள்கைகள் மற்றும் மஸாயில்கள் ஆகியவற்றில் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களையே பின்பற்றினார்கள்.
அதேநேரம் இவர்கள் வழங்கும் ஃபத்வா - மார்க்க தீர்ப்புகளில் இமாம் ஷாஃபியீ (ரஹ்) இமாம் ஹம்பலீ (ரஹ்) ஆகியோரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே தீர்ப்புகள் அமைந்திருக்கும்.
முதல் நிலைக்குத்
திரும்பிய சூபித்துவம் :
========================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தொடர்ந்து அல்லாஹுவையும் ரசூலையும் குறித்து பேசி வந்ததால், அவர்களின் உள்ளத்தில் 'நான்' என்ற எண்ணம் முற்றிலும் அழிந்திருந்தது. அதனால் அவர்களின் அறிவுரை அனைவரையும் சென்றடைந்தது.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஷரிஅத்தை விட்டும் பிரிந்து போய்விடும் அளவிற்கு தஸவ்வுஃப் எனும் சூஃபித்துவம் தனக்கென தனி ஒரு வழிமுறையை அதாவது தவறான வழிமுறையை உருவாக்கி சென்று கொண்டிருந்தது.
ஒருவர் மெய்நிலையை அடைந்த பிறகு அவர் ஷரீஅத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், ஃபர்லுகள், சுன்னத்துகள் போன்றவற்றை பின்பற்ற தேவையில்லை எனும் கருத்து பரவி இருந்தது. இந்தக் கருத்தில் உடன்பாடு உடைய பலர் இருந்தனர்.
இந்தியர்களின் அத்வைத கொள்கை சூஃபித்துவத்தில் கலந்து விடப்பட்டிருந்தது; இந்த போக்கை அறிந்த இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஷரீஅத்திற்கு கட்டுப்பட்டே தரீகத் இருக்க வேண்டும் என சொன்னது மட்டும் இன்றி அதை ஆலிம்களிடமும், தமது சீடர்களிடமும், ஆன்மிகப் பாதையில் பயணிப்போரிடமும் தெளிவாகச் சொன்னார்கள்.
இதன் காரணமாக சூஃபித்துவம் மீண்டும் ஆரம்பகால பழைய நிலைக்கே திரும்பியது.
"உனது செயல்களில் ஏதேனும் ஒன்று தண்டணைக்குறியதாக இருப்பது போல் நீ உணர்ந்தால், நீ குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறாய்! ஷைத்தான் உன்னில் கலந்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு ஷரீஅத் - இஸ்லாம் மார்க்கத்தின் பக்கம் உன்னை நீ முழுமையாக திருப்பிக் கொள்!
ஷரீஅத் - இஸ்லாம் மார்க்கம் சொல்லாத ஹகீகத் - மெய்நிலை அனைத்தும் தவறானது தான்" என இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
குர்ஆன், ஹதீஸ் எனும் இரு இறக்கைகள் துணைக் கொண்டு இறைவன் பக்கம் பறந்து செல்! உன் கரத்தை நபிகளாரின் கைகளோடு பிணைத்துக் கொள்! அவர்களையே உன் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் ஆக்கிக் கொள்! ஷரீஅத்தை வெட்டும் விலகி விடாதே எனவும் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு, 'அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை' என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எவரேனும் மாற்ற வேண்டும் என்று சொன்னாலோ, மாற்றிக் கொண்டு வாழ்கிறோம் எம்மை போல் வாழுங்கள் என்று அழைப்பு விடுத்தாலோ அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் இறை மறுப்பாளராகவும், ஷைத்தானின் சேவகராகவும் மாறிவிட்டார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் யாரென்று தெரிகிறதா?
=============================
ஒருமுறை இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் ஷைத்தான் வானத்தில் மேக புகை மூட்டத்தில் பெருங்கொண்ட உருவத்தை வடிவமைத்துக்கொண்டு, "அப்துல் காதிரே! நானே உம் இறைவன்; இப்பொழுது முதல் நான் ஹராம் ஆக்கிய அனைத்தும் உமக்கு மட்டும் ஹலால் ஆக்கப்பட்டு விட்டது" என்று கூறினான்.
உடனே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "அவூது பில்லாஹி மினஷ் ஷைதினிர் ரஜீம் - சாபத்திற்குரியவனே! இழிவானவனே! என்னை விட்டு விலகிப் போ" என கூறினார்கள். உடனே மேகப் புகை மூட்டமாக இருந்த உருவம் களைந்துச் சென்றது.
மீண்டும் வானத்திலிருந்து ஓர் அசரீரி குரல் " அப்துல் காதிரே! இஸ்லாம் மார்க்க சட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருப்பதால் என்னை விட்டும் நீங்கள் பாதுகாப்பு பெற்று விட்டீர்கள்; ஆனால் இதே வார்த்தைகளை சொல்லி நான் பலரை ஏமாற்றி இருக்கிறேன்; என் வலையில் விழ வைத்திருக்கிறேன்" என்று கூறினான்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "ஷைத்தானே! எனது மார்க்க ஞானத்தால் உன்னை நான் அறியவில்லை; எனது இறைவனே என்னை காப்பாற்றினான்" என்று கூறினார்கள்.
அதற்கு ஷைத்தான், "இப்பொழுதும் நீங்கள் என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டீர்கள்" என்று கூறினான்.
அதாவது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு தாம் ஒரு அறிவுலக மேதை எனும் மமதையை உருவாக்க நினைத்தான்; அதிலும் அவன் தோல்வியுற்றான்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மேற்கண்ட நிகழ்வை ஒரு நண்பரிடம் கூறிய போது அவர், "அவன் ஷைத்தான் தான் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்?" என கேட்டார்.
அதற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "இன்று முதல் ஹராம்கள் அனைத்தும் உமக்கு மட்டும் ஹலால் ஆக்கிவிட்டேன்" என்று அவன் சொன்ன போதே அவன் ஷைத்தான் தான் என நான் அறிந்து கொண்டேன்" எனக் கூறினார்கள்.
எனவே குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு மாற்றமான கருத்தை எவரேனும் முன் மொழிந்தால் அந்தக் கருத்தையும், அவரையும் புறக்கணித்து விடுங்கள்! அவர்கள் ஆபத்தானவர்கள்.
Comments
Post a Comment