இளமையும், கல்வியும்...
நேற்றைய தொடர்ச்சி-------->
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)
இளமையும், கல்வியும்...
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இவ்வளவு சிறப்பு தன்மைகளைப் பெற்ற கௌசூல் அஃலம் அவர்கள் இறை நெறி தவறாத தாத்தா, தந்தை, அன்னை போன்றவர்களால் வளர்க்கப்பட்ட ஜீலானி (ரஹ்) அவர்கள் எவ்வளவு பேணுதலாக வளர்க்கப்பட்டு இருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு விவரம் தெரிவதற்கு முன்பே தந்தையை இழந்து அனாதையானார்கள். அதனால் தாய் வழி தந்தையான தாத்தா அப்துல்லாஹ் ஸவ்மயீ அவர்களே சிறப்பாக வளர்த்து வந்தார்கள்.
தமது சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வியை முறையாகக் கற்றார்கள். பின்னர் 18 வயதை அடைந்த பிறகு மேலும் விசாலமான கல்வியை கற்க பிற நகரங்களுக்குச் செல்ல விரும்பினார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் துறை சார்ந்த அனைத்து கல்விகளையும் முழுமையாக, முறையாக படிக்க வேண்டுமானால் பக்தாது செல்ல வேண்டும் என்பதை அறிந்தார்கள்.
ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது ஆசையை அன்னையிடம் தெரிவித்த போது மிகவும் மகிழ்வுற்றார்கள். இஸ்லாமிய கல்வியையும், ஞானப்பாட்டையையும் அற ஒழுக்கங்களையும் கற்றுக் கொள்ள விரும்பும் தன் மகனை வெளியூர்களுக்கு அனுப்பி வைத்து படிக்க வைக்க மாட்டாரா என்ன?
உண்மை உயிரினும் மேலானது
==============================
ஜீலான் நகரத்திலிருந்து பக்தாத் நாநூறு மைல்களுக்கு தொலைவில் இருந்தது. பக்தாத் நகர வியாபாரிகள் அவ்வப்பொழுது சாமான்களை எடுத்து வந்து கிராமங்களில் விற்பது வழக்கம். அவர்கள் விற்பனையை முடித்துக் கொண்ட பிறகு தமது நகரங்களுக்குச் செல்வார்கள்.
அப்படி எவரேனும் செல்கிறார்களா என்று தேடிப் பார்த்த போது ஒரு வியாபார குழுவினர் இருந்ததை தாயாரும் உறவினர்களும் அறிந்தார்கள்.
அன்னை பாத்திமா (ரஹ்) அவர்கள் தம் மகனாரை அழைத்து "மகனே! உமது தந்தை 80 பொற்காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்; அதில் உமது சகோதரர் தம்பி அப்துல்லாஹ் அவர்களுக்கு 40 தங்க காசுகளை எடுத்து வைத்துக் கொண்டேன்.
உமக்கு சேர வேண்டிய 40 தங்க காசுகளை உமது ஜுப்பாவின் அல்லை பகுதியின் உள்புறத்தில் தைத்து வைத்திருக்கிறேன்; கவனமாக வைத்துக் கொண்டு சிறப்பாக படித்து முடித்துவிட்டு வருக" என வாழ்த்தினார்கள்.
மேலும் இரண்டு உபதேசங்களை வழங்கினார்கள். 1. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்; உமது தந்தையைப் போல் ஹலாலான உணவைத் தவிர வேறு எதையும் சாப்பிடக்கூடாது; சந்தேகத்திற்கு இடமான உணவு வகைகளையும் கூட ஒதுக்கி விட வேண்டும்.
( ஹலாலான உணவை சாப்பிட்டாலும் ஹராமான உணவை சாப்பிட்டாலும் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையும். ஹராமான உணவை சாப்பிட்டு வளரும் உறுப்புகள் எப்படி நல்லவற்றைச் செய்ய தானாக முன் வரும்?
இப்படி உருவான உறுப்புகளில் இருந்து வெளியாகும் செயல்களும், எண்ணங்களும் எப்படி தூய்மையானதாக இருக்கும்?
எனவேதான் ஞானத்தைத் தேடிச் செல்லும் மகனுக்கு தாயே ஒரு ஞானியாக இருந்து உபதேசித்து இருக்கிறார்.)
2. எந்த சூழ்நிலையிலும் உண்மையை மட்டும் பேச வேண்டும்; "உண்மை மனிதனை காக்கும்! பொய் மனிதனை அழிக்கும்!" என நமது பாட்டனார் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்.
(பொய் சொன்னால் நல்லது நடக்கும்; அது அதிக லாபத்தை பெற்று தரும் என்று எண்ணியே பொய் சொல்லுவோர் பொய் பேசுகின்றனர்; ஆனால் உண்மையை சொல்லிப் பாருங்கள்; பொய் சொன்னால் கிடைக்கும் பயனை விட உண்மை பேசியதால் கிடைக்கும் பயன் மிக அதிகமாகவே இருக்கும்.)
பின்னர் அன்னை பாத்திமா அவர்கள், தம் இறைவனிடம் தம் மகனுக்காக நீண்ட நேரம் பிரார்த்தனை செய்து விட்டு, "மகனே! உன்னை நான் அல்லாஹ்வின்பால் ஒப்படைத்து விட்டேன்; அவனே உனது பாதுகாவலன்; நம்பிக்கையோடு சென்று வா!
அதே நேரம் எனக்கு 78 வயது ஆகின்றது; நீர் கல்வி கற்று திரும்பி வரும் பொழுது நான் உயிருடன் இருப்பேனோ மாட்டேனோ எனத் தெரியாது; அனேகமாக நான் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இருக்காது; இனி நாம் மறுமை நாளில் தான் சந்திக்கும் சூழல் ஏற்படும்" என கூறினார்கள்.
ஜீலானி (ரஹ்) அவர்கள் பிறவியிலேயே வலி - இறைநேசராக இருந்தும் முறைப்படி மார்க்கக் கல்வியை கற்று, தேர்ச்சி பெற்ற பின்னரே ஆன்மிக கல்வியின் பக்கம் கவனத்தை திருப்பினார்கள் என்பதுதான் வரலாறு.
முற்கால இறைநேசர்களும் தற்கால இறைநேசர்களும் இந்த வழிமுறையை பின்பற்றி தான் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான கல்வி முறைதான் சைத்தானிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள உதவும்.
ஷரீஅத் - மார்க்க கல்வியை முறையாக பயிலாத எவரும் ஷைத்தானுக்கு அடிபணியாமல் இருக்க இயலாது. எனவே ஷரீஅத் கல்வியை விட ஆன்மீக கல்விதான் ஆகச் சிறந்தது என்று சொல்வோர் மேற்கண்ட கருத்தை கவனிக்க வேண்டும்.
பக்தாத் பயணம் :
===================
அன்னை பாத்திமா (ரஹ்) அவர்கள் தமது மகனை அழைத்துச் சென்று வியாபார கூட்டத்தின் தலைவரிடம் ஒப்படைத்தார்கள். வியாபார குழுவினர் தம் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.
ஜீலான் நகரத்திலிருந்து புறப்பட்டு 'ஹமதான்' எனும் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அறுபது பேர் கொண்ட ஒரு கொள்ளைக் கூட்டம் இந்த வியாபாரிகளை வழிமறித்து அவர்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் பிடுங்கிக் கொண்டார்கள்.
பின்னர் வியாபாரக் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து சோதனை செய்தார்கள். வியாபாரிகள் தம் தலைப்பாகையிலும், இடுப்பிலும் கட்டி வைத்திருந்த நாணயங்களை பறித்துக் கொண்டார்கள்.
வியாபாரிகள் ஒவ்வொருவரும் பீதி வயப்பட்டு அச்சத்தால் உறைந்து போனார்கள்; அசலும் லாபமும் சூறையாடப்பட்டு விட்டதே! இனி எப்படி பிழைப்பது? என ஒவ்வொருவரும் சிந்தனை வயப்பட்டு புத்தி பேதலித்தவர்கள் போல் காணப்பட்டார்கள்.
இவற்றில் எந்த சலனத்திற்கும் ஆளாகாமல் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஓரிடத்தில் தனியே நின்றிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு திருடன் ஒவ்வொருவரிடமும் என்ன இருக்கிறது? எனக் கேட்டுக் கொண்டும், அவர்களை தொட்டுத் தடவிப் பார்த்து சோதனை செய்து கொண்டும் வந்தான்.
ஜீலானி (ரஹ்) அவர்களை நெருங்கியதும் அவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல், தொட்டுத் தடவியும் பார்க்காமல் சென்று விட்டான்.
சிறிது நேரம் கழித்து ஒரு திருடன் ஆயுதங்களோடு வந்து, "உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?" எனக் கேட்டான் அதற்கு ஜீலானி (ரஹ்) அவர்கள், "என்னிடம் நாற்பது தங்க காசுகள் இருக்கின்றன" என கூறினார். அந்தத் திருடன் அவர் சொல்வது பொய்யென நினைத்து சிரித்துக்கொண்டே சென்று விட்டான்.
சிறிது நேரம் கழித்து மற்றொரு திருடன் வந்து, "உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?" எனக் கேட்டான்; அப்பொழுதும் அவர்கள், "என்னிடம் நாற்பது தங்க நாணயங்கள் இருக்கின்றன" என்று கூறினார்கள்; அவனும் ஏளனமாக சிரித்துக்கொண்டே சென்று விட்டான்.
மீண்டும் சிறிது நேரத்திற்கு பிறகு கொள்ளைக் கூட்டத் தலைவன் ஜீலானி (ரஹ்) அவர்களை அனுகி , "உம்னிடம் ஏதேனும் பணம் இருக்கின்றதா?" என்று கேட்டான். அவர், "என்னிடம் நாற்பது தங்க நாணயங்கள் இருக்கிறது" என்று கூறினார்.
அவன் சிறிது நேரம் ஏற இறங்க பார்த்துவிட்டு, "அதை எங்கே வைத்திருக்கிறாய்?
ஜீலானி ரஹ்: என் சட்டையின் உள்புறத்தில் இடதுபுற அல்லையில் தைத்து வைத்திருக்கிறேன்.
தலைவன் : எங்கே அதைக் காட்டு!
ஜீலானி ரஹ்: தமது அல்லையிலிருந்து பணத்தை பிரித்து எடுத்து இதோ எனக் கூறினார்.
தலைவன்: இந்த பயங்கரமான சூழ்நிலையிலும் உம்மை உண்மையை சொல்ல வைத்தது எது?
ஜீலானி ரஹ்: எந்த சந்தர்ப்பத்திலும் பொய் பேசக்கூடாது என என் அன்னை என்னிடம் வாக்குறுதி பெற்றுள்ளார்.
தலைவன் : ஒரு வில்ய இதயத்தில் பாய்ந்தது போல் அவரின் சொல் மூளையில் பதிந்தது. அவரின் அறிவுக்கண் திறந்தது.
உடனே அவன் " இளைஞரே! உமது அன்னைக்கு நீர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறீர்; ஆனால் நான் இறைவனுக்கு அளித்த வாக்குறுதியை இத்தனை வருடங்களாக மாறு செய்து வந்திருக்கிறேன்;
இறைவா! என்னை மன்னித்துவிடு! எனக்கு நீ அருள் செய்! மறுமை நாளில் என்னை கேவலப்படுத்தி விடாதே!
தோழர்களே! நான் நீண்ட காலமாக இறைவனுக்கு துரோகம் இளைத்து விட்டேன்; இனி நான் கடந்த காலத்தில் வாழ்ந்தது போன்று வாழ விரும்பவில்லை; இதுவரை நான் செய்த அனைத்து வகையான பாவச் செயல்களில் இருந்தும் விலகி விட்டேன்;
எனவே, இப்பொழுது முதல் உங்களுக்கு நான் தலைவன் இல்லை; என்னை நம்பி எனக்கு பின்னால் நீங்கள் வர வேண்டாம்; நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள்" என்று கூறினார்.
இவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு திருடன், " தலைவரே! கொலை செய்யும் போதும், கொள்ளையடிக்கும் போதும் நீங்கள் தான் எங்களுக்கு தலைவராக இருந்தீர்; இன்று நீங்கள் மனம் மாறி நல் வழிக்கு செல்கிறீர்; எங்களையும் அந்த நல்வழியில் சேர்த்துக் கொள்வீராக! 'உங்கள் வழி எவ்வழியோ அவ்வழியே எங்கள் வழி' என்று சொன்னதும் திருடர்கள் அனைவரும் ஆமாம் ஆமாம் என குரல் எழுப்பினர்.
தாம் கொள்ளை அடித்த பொருள்கள் அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மக்கள் போற்றும் நல்ல வாழ்க்கையை வாழ்வது என்ற உறுதியோடு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
ஜீலானி (ரஹ்) அவர்கள் உண்மையை மறைத்திருந்தால் அவரிடம் இருந்த நாற்பது காசுகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டு இருக்கும். உண்மையை உரக்கச் சொன்னதால் அனைவருடைய பணமும் பொருளும் பாதுகாக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அறுபது பேர் கொண்ட கொள்ளை கூட்டத்தினர் தம் மனங்களை மாற்றிக்கொண்டு, "இனி திருடுவதில்லை" என்ற முடிவுக்கு வந்ததின் மூலம் எதிர்காலத்தில் திருடப்பட இருந்த பல்லாயிரக்கணக்கான தீனார்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே உண்மை பேசுவதின் நன்மை இவ்வளவுதான் என வரையறுத்திட இயலாது.
பணம் இருக்கட்டும்! அறுபது மனங்கள் திருந்தியதற்கு ஈடு இணை உள்ளதா?
மீண்டும் வியாபார குழுவினருடன் சேர்ந்து பயணத்தை தொடர்ந்தார்கள் ; ஒரு நாள் இரவில் பக்தாதை அடைந்தார்கள்; அந்த நேரம் மழை தூரிக் கொண்டிருந்தது; பக்தாத் நகரம் ஜீலானி (ரஹ்) அவர்களை மலர்களைப் போல் மழையை தூவி வரவேற்றது.
பக்தாதில் உயர்க் கல்வி
========================
ஜீலானி (ரஹ்) அவர்கள் பக்தாத் நகரத்திற்குள் நுழையும் பொழுது அங்குள்ள அறிஞர்களையும், ஞானிகளையும், சந்தித்து கல்வி பயில வேண்டும்; புறக் கல்விகளில் பலவற்றையும் முறையுடன் படித்துப் பாண்டித்தியம் பெற வேண்டும் என உறுதி கொண்டார்கள்.
இந்நிலையில் நள்ளிரவில் பக்தாத் நகரத்திற்குள் நுழைந்ததும் மாபெரும் ஞானியான இமாம் ஹம்மாது பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் பாடச் சாலையை விசாரித்துக் கொண்டு அதனை நோக்கி நடந்தார்கள்.
மழைத் தூவும் கும்மிரிட்டில் பாடச் சாலையை கண்டறிந்து சென்றார்கள்; மதரஸா பூட்டப்பட்டிருந்தது; அதன் வாசலிலேயே அமர்ந்திருந்தார்கள்.
மதரஸா திறக்கப்பட்டதும் இமாம் ஹம்மாது (ரஹ்) அவர்களை சந்தித்தார்கள்.
ஞானதிருஷ்டி மூலம் வந்திருக்கும் ஜீலானி (ரஹ்) அவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு, "அப்துல் காதிரே! வருக!! உமக்கு ஷரீஅத் கல்வியும், ஆன்ம ஞான போதனைகளும் என்னிடமிருந்து முழுமையாக உமக்கு வழங்கப்படும்; அவை உம்மிடம் முழுமையாக வந்து சேரும்; அவற்றை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
ஹலாலான உணவைத் தேடி ......
===========================
இமாம் ஹம்மாது (ரஹ்) அவர்களின் பாடச் சாலையில் தங்கிக் கொண்டு கல்வி கற்று வந்தார்கள். மற்ற நேரங்களில் கடைகள், வீடுகள், தொழிற்கூடங்கள் போன்றவற்றிற்குச் சென்று ஏதேனும் வேலைகள் கிடைத்தால் வேலை செய்வார்கள்; அதற்குப் பகரமாக கிடைக்கும் கூலியை பெற்று சாப்பிடுவார்கள்.
வேலைகள் இல்லாத போதும் பணம் இல்லாத போதும் தண்ணீரைக் குடித்துக் கொண்டு வாழ்வார்கள்.
ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
நான் பக்தாதை அடைந்த முதல் இருபது நாட்கள்
வரை எனக்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. ஹலாலான உணவு கிடைப்பது அரிதாக இருந்தது.
ஹலாலான முறையில் சம்பாதிக்கப்பட்ட பொருளினால் தயார் செய்யப்பட்ட உணவைத் தேடி என்னைப் போலவே இன்னும் எழுபதுக்கும் மேற்பட்ட இறைநேசர்கள் அங்கு அலைவதைக் கண்டேன்.
சில சமயங்களில் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு ஹலாலான உணவு கிடைத்தால் சாப்பிடுவார்கள்; அதில் ஏதேனும் மிச்சமானால் அதை அடுத்த நேரத்திற்கு உதவுமென வைத்துக் கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் தம்மைப் போல் ஹலாலான உணவைத் தேடித் திரியும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள்.
ஹலாலான முறையில் சம்பாதிக்கப்பட்ட உணவன்றி வேறெதையும் சாப்பிடக் கூடாது என தாயின் மூலம் எச்சரிக்கப்பட்டு இருந்ததால் சாதாரணமாக எதையும் சாப்பிடுவதில்லை.
அதனால் ஒவ்வொரு உணவைப் பற்றியும் சிந்திக்கவும் விசாரிக்கவும் வேண்டிய சூழல் உருவானதால் அந்த உணவு ஹலாலானதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியாமல் சந்தேகமான உணவையும் கூட உட்கொள்ளாமல் ஒதுக்கி வைத்து வாழ்ந்தார்கள்.
இதனால் அவர்கள் அடிக்கடி பசித்திருக்க வேண்யிருந்தது. சில சமயங்களில் பசியின் மிகுதியால் தலைச்சுற்றும் உண்டாகி விடும், கண்கள் இருண்டு விடும்; அவ்வாறிருந்தும் அக்கஷ்டங்கள் அனைத்தையும் பொருத்துக் கொண்டே இருந்தார்கள்.
எவரிடத்திலும் யாசகம் கேட்டதில்லை. சில சமயங்களில் தாங்க முடியாத கஷ்டங்களும் கூட ஏற்பட்டதுண்டு; அக்கஷ்டங்கள் ஒரு கற்பாறைக்கு ஏற்பட்டிருந்தால் அவைகள் கூட வெடித்துப் போகும் என கூறியுள்ளார்கள்.
இவ்விதக் கஷ்டங்கள் ஏற்படும் போது படுத்துக் கொண்டு " கஷ்டத்திற்கு பிறகு லேசு உண்டு” என்ற திருமறை வசனங்களை ஓதி தம் மன கஷ்டத்தை ஆற்றிக் கொள்வார்கள்.
ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் மாணவனாக இருந்த போது மதரஸாவில் பாடங்களை படித்தப் பின்னர் காடுகளுக்குச் சென்று விடுவேன்; கடும் வெயிலாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் இரவை அங்கேயே கழிப்பேன்.
காடுகளில் விளையும் கீரைகள், மனிதன் சாப்பிடுவதற்கு ஏற்ற இலைகள், காய், கனிகள் போன்றவற்றை பறித்து உண்பேன். இந்தக் காடுகள் என் பசியை போக்கின.
இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில்தான் பக்தாதில் முறையான கல்வியை ஆசிரியர்களிடம் கற்றுத் தேறினார்கள். உலகம் போற்றும் மாபெரும் அறிஞராக, சிந்தனையாளராக, ஆன்மீகவாதியாக உருவானார்கள்.
இன்று உணவு, உறைவிடம் போன்ற அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கியும் கூட , மார்க்கக் கல்வியை கற்க முன்வருவோர் வெகு குறைவாகவே இருக்கிறார்கள்.
ஜீலானி (ரஹ்)
அவர்களின் ஆசிரியர்கள்
============================
ஜீலானி (ரஹ்) அவர்கள் ஹம்மாது (ரஹ்) அவர்களின் மதரஸாவில் தங்கி கொண்டு ஞானப் பயிற்சி பெற்று வந்த அதே நேரத்தில் தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹு, இலக்கியம், இலக்கணம், சட்டக்கலை போன்ற மார்க்கத்தின் அனைத்து கலைகளையும் பல பேராசிரியர்களிடம் கற்றுத் தேறினார்கள்; அவர்களுடைய பேராசிரியர்களில் முக்கியமானவர்கள்
1. காஜீ அபூ ஸயீது முபாரக் அல் மக்ஸூமி (ரஹ்)
2. அபு அல் வஃபா அலி பின் உகைல் (ரஹ்)
3 . அபூ காலிப் முஹம்மத் பின் ஹஸன் பாகில்லானீ (ரஹ்)
4 . அபுல் கத்தாப் மஹ்ஃபூல் பின் அஹ்மது கலூதானி (ரஹ்)
5 . அபுல் ஹுசைன் பின் காஜீ அபூ யஃலா (ரஹ்)
6 . அபூ ஸஅது முஹம்மது பின் அப்துல் கரீம் (ரஹ்)
7 . அபுல் கனாயிம் பின் மைமூன் (ரஹ்)
8 . அபுல் காசீம் கர்க்கீ (ரஹ்)
9 . அபூ உஸ்மான் இஸ்பஹானீ (ரஹ்)
10 . அபுல் பரக்காத் ஹிபத்துல்லாஹ் (ரஹ்)
11 . அபுல் இஸ்ஸு ஹாஷிமீ (ரஹ்)
12 . அபூ மன்சூர் அபீ தாலிப் (ரஹ்)
13 . அபுல் பரக்காத் தப்ரேஸீ (ரஹ்)
14 . அபூ ஸக்கரிய்யா தப்ரேஸீ (ரஹ்)
15. அபுல் ஹஸன் அலி பின் முஹம்மது குர்ஷீ (ரஹ்)
தொடரும்.......
Comments
Post a Comment