தொடர் 10. இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் பைத்துல் முகந்தஸிற்கும் இடையிலான ஆன்மிக உறவு :

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
=====================================

நேற்றைய தொடர்ச்சி.....11

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் பைத்துல் முகந்தஸிற்கும் இடையிலான ஆன்மிக உறவு :
=================================

ஹிஜ்ரி 490 கி.பி. 1097 களுக்கு பிறகு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கல்வியைத் தேடி மக்கா மதீனா உட்பட பல நகரங்களுக்கு சென்றது போலவே பாலஸ்தீன் பைத்துல் முகத்தஸ் நகரத்திற்கும் சென்று இருக்கிறார்கள்; 

அப்பொழுது அங்கு வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களையும் சூஃபி ஞானிகளையும் சந்தித்து மார்க்க விஷயங்களை கற்றார்கள். 

பைத்துல் முகத்தஸ் நகரமும் ஜிப்ரானும் இறைநேசர்கள் சங்கமிக்கும் இடமாக இருந்தது.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு பைத்துல் முகத்தஸ் பகுதியில் நிரந்தர தங்குமிடம் எதுவும் இல்லை என்றாலும் அவ்வப்பொழுது வந்து சென்று இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அங்கு வரும் பொழுதும் மாத கணக்கில் தங்கியிருந்து தவம் செய்திருக்கிறார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸில் தங்கி இருக்கும் பகல் நேரங்களில் நோன்பு நோற்று, இரவு நேரங்களில் நின்று வணங்குவார்கள்.

ரமலான் காலங்களில் அமல் செய்வதற்காக வேண்டியே பைத்துல் முகத்தஸ் வந்திருக்கிறார்கள். அப்பொழுது நோன்பு நோற்று, இரவு நேரத்தில் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுது ஆன்மீகத்தின் அடுத்த படி நிலைக்கு சென்று இருக்கிறார்கள். இவ்வாறு சில ரமலான் மாதத்தை இங்கே கழித்திருக்கிறார்கள். 

பைத்துல் முகத்தஸ்ஸில் தங்கி இருக்கின்ற காலத்தில் முராகபா எனும் நீண்ட நெடிய தியானத்தில் இருப்பார்கள்; அதை பார்ப்பவர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறந்து விட்டார்களோ என்று கூட சிலர் எண்ணுவார்கள்; அந்த அளவிற்கு ஆடாமல் அசையாமல் அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருப்பார்கள். 

மேலும் இங்கு தங்கி இருக்கின்ற பகல் பொழுதில் அங்கே அடக்கமாகி இருக்கும் இறைநேசர்களையும், நபித்தோழர்களையும், நபிமார்களையும் சென்று ஸியாரத் செய்து அவர்களின் நெருக்கத்தை அல்லாஹ்விடம் வேண்டுவார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் வாழ்நாளில் 25க்கும் மேற்பட்ட ஹஜ்ஜுகளை செய்திருக்கிறார்கள்; அவற்றில் இரண்டு ஹஜ்ஜை பைத்துல் முகத்தஸ்ஸில் இருந்து செய்து இருக்கிறார்கள். இவர்கள் செய்த பெரும்பாலான ஹஜ் நடந்து செய்யப்பட்டவைகள் ஆகும்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் சீடர்களால் பைத்துல் முகத்தஸ்ஸிலும் ஜிப்ரானிலும் ஜாவியா காதிரியா - zawiya qadiryya  சபையைத் தொடங்கி திக்ரு மஜ்லிஸ் நடத்தி வந்தனர்; அந்த சபைகள் இன்றும் இருந்து வருகின்றது. 

இன்றும் காதரிய்யா தரீகாவை பின்பற்றக்கூடிய இலச்சோப லட்ச முரீதீன்கள் பாலஸ்தீனில் இருக்கிறார்கள். 

ஃபாத்திமிய்ய வம்சத்தினர் பாலஸ்தீன் உட்பட சில நிலப்பரப்பை கி.பி.  1073 முதல் 1099 வரை ஆட்சி செய்து வந்தார்கள். 

இவர்கள் ஆட்சி செய்யும் காலத்தில் தான் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு சென்று தங்கி அமல் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

1099 களுக்கு பிறகு ஐரோப்பிய சிலுவைப் போராளிகள் -  curusaders பாலஸ்தினை ஆக்கிரமித்தார்கள். 

ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் சிலுவை போரின் மூலம் பைத்துல் முகத்தஸ்ஸை கைப்பற்றி கிறிஸ்துவ நினைவுச் சின்னமாக மாற்ற முனைந்தார்கள். 

சிலுவை போராளிகளை எதிர்த்து 200 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் யுத்தம் செய்தார்கள் என்பது வரலாறு.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஞானம் பெற்று வந்த பிறகு மதரஸாவை தொடங்கி நல்ல மாணவர்களையும், நல்ல சீடர்களையும் உருவாக்கி வந்த வேளையில் பைத்துல் முகத்தஸை மீட்க நடந்த  யுத்தங்களுக்கு தம் மாணவர்களையும் சீடர்களையும் கூட தயார் செய்து அனுப்பி, அந்தந்த கால அரசர்களை வலுப்படுத்தினார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய 22 ஆவது வயதில் பைத்துல் முகத்தஸ் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் வசம் சென்றடைந்தது.

மாமன்னர், அல்லாஹ்வின் இறைநேசர்களில் ஒருவரான ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் கி. பி. 1187 ஆம் ஆண்டு பலஸ்தீனை மீட்டார்கள். 

அதற்குப் பிறகும் கூட சிலுவைப் போராளிகள் பைத்துல் முகத்தஸை மீட்க யுத்தங்களை மேற்கொண்டார்கள்; ஆனால் அவர்கள் முஸ்லிம்களால் விரட்டி அடிக்கப் பட்டார்கள்.  

88 வருடங்கள் பைத்துல் முகத்தஸ் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் வசம் இருந்திருந்தாலும் அதற்குப் பிறகும் 112 வருடங்கள் தொடர்ந்து யுத்தம் செய்து வந்தார்கள்; அதாவது மொத்தத்தில் 200 வருடங்களாக யுத்தம் செய்தார்கள். அவர்களால் எதையும் சாதிக்க இயலவில்லை இன்று வரை.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்