தொ - 12. இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் உள்ளத்தை விழிப்பூட்டும் உரை

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
====================================

நேற்றைய தொடர்ச்சி.....12

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் 
உள்ளத்தை விழிப்பூட்டும் உரை :
================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் ஞானச் சுரங்கங்கள் ஆகும். 

அந்தச் சுரங்கத்தை சரியாக அறிய முற்பட்டால் அறிவு கொடிகள் படர்வதைப் பார்க்கலாம். மறை நூல் போல் அவர்களின் வார்த்தைகள் ஒலித்திருப்பதாக அறியலாம். அவர்களின் உரையிலிருந்து சில வார்த்தைகளை வழங்குகிறேன்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனக்காக வகுத்துக் கொண்ட  தரீகத் - பாதை  - மார்க்க நிலைப்பாட்டில் உள்ளமும், ஆன்மாவும் ஒன்றுபட்டு, இறைவன் வகுத்த விதியை அப்படியே உள்வாங்கிக் கொண்டு யதார்த்தமாக வாழ்ந்தார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் மனதோடு கடுமையாக போராடி இருக்கிறார்கள்; அவர்கள் தமது உரையில் கூறியதாவது;

என் விருப்பத்தையும் இறைவனுடைய நாட்டத்தையும் செயல்படுத்துவதில் நான் எனது மனதோடு கடுமையாக போராடி இருக்கின்றேன்; 

இறைவனின் நாட்டம் என்னை அதன் வழியில் இழுத்துச் சென்றது; 

இறைவனின் உதவி எனக்கு அதிகமாக கிடைத்து வந்தது; 

இறைவனின் நாட்டமே என்னில் தானாக இயங்கத் தொடங்கியது; 

இதற்குப் பிறகுதான் எனது விருப்பங்கள் இறைவனுடைய விருப்பம் போன்று ஆனது; 

அல்லாஹ்வின் பெரும் கருணையின் பொருட்டாலே நான் நேர்வழி பெற்று வாழ்கிறேன்; எனது உயர்வுக்குக் காரணம் அல்லாஹ் தான். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறைவனுக்கு கட்டுப்பட்ட முழுமையான அடியாராக ஆகி இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவன் துன்பங்களின் மூலம் சோதிக்கப்பட்டால் அவன் முதன் முதலில் தன்னால் ஏதேனும் செய்து அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முடியுமா என சிந்திக்கின்றான்; 

அவனால் இயலாது என அவன் முடிவு செய்தால் பிறரிடம் உதவியை தேடுகிறான்.

தன்னாலோ, பிறராலோ தனக்கான தீர்வு கிடைக்கவில்லை என்று அவன் அறியும்போது தான் இறைவன் பக்கம் திரும்புகிறான்; அவனைப் புகழ்ந்து, பணிந்து இறைஞ்சுகிறான். 

இந்த நேரத்தில்தான் அந்த அடியான் அல்லாஹ்வை முழுமையாக உணர்ந்து அவனைச் சார்ந்து வாழ முற்படுகிறான். 

வறுமை, செல்வ நிலை, இழிவு, கண்ணியம், உயிர் வாழ்வது, மரணம், தீமை, நன்மை, அடைப்பது, திறப்பது, லாபம், நஷ்டம், தடுப்பது, வழங்குவது ஆகிய அனைத்தும் இறைவனின் நாட்டத்தினால் மட்டுமே நடக்கிறது என உறுதி கொள்கிறான்.

அந்த நேரத்தில் அந்த அடியான் ஒரு தாயின் கரத்தில் இருக்கும் குழந்தையைப் போன்றும், குளிப்பாட்டுபவனின் கரத்தில் இருக்கும் பிரேதத்தை போன்றும், ஃபுட்பால் விளையாடுபவனின் கால்களில் இருக்கும் பந்தைப் போன்றும் அவன் ஆகி விடுகிறான். அதாவது புரட்டப்படுகிறான், மாற்றப்படுகிறான், திருப்பப்படுகிறான்; ஆனால் அவனிடம் எந்த அசைவும் இல்லை. 

மௌனத்தில் ஒலித்த ஞானம்: 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

மேலும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; மரத்திலிருந்து காய்ந்த இலைகள் உதிர்வது போல ஓர் அடியான் அல்லாஹ்வை அறிந்து கொண்டால் படைப்புகளின் நினைவு அவன் உள்ளத்தில் இருந்து அகன்று விடும் . 

பின்னர் அவன் படைப்பினங்கள் இல்லாமல் அவன் மட்டுமே தனித்து, அதே நேரம் இறைவனோடு ஒன்றி இருப்பான்; படைப்புகளைப் பார்ப்பதை விட்டும் குருடாகி விடுவான் ; அவர்களுடன் பேசுவதை விட்டும் ஊமையாகி விடுவான்.

அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் நல்லவர்களாகவும், உங்களுக்கும் பிறருக்கும் பயன் உடையவர்களாகவும் ஆக வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றேன்.

நரகத்தின் வாசல்கள் மூடப்பட வேண்டும்; நரகம் இருக்கவே கூடாது; அல்லாஹ்வின் அடியார்கள் யாரும் அதில் நுழையவே கூடாது. 

அவ்வாறே சொர்க்க வாசல்கள் திறக்கப்பட வேண்டும்; அல்லாஹ்வின் அடியார்கள் அனைவரும் அதில் நுழைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன். 

நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால் அல்லாஹ்வின் அன்பையும் அவன் தன் படைப்புகள் மீது வைத்திருக்கும்  பாசத்தையும் நான் அறிந்திருப்பதால் இவ்வாறு கூறுகிறேன். 

இந்த இரவு நேரத்தில் உங்களை அமர வைத்து நான் பேசுவதற்கு காரணம், உங்களை தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துவதற்கு தான்! 

என் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும், நான் பெரிய மனிதனாக உங்களால் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல!

மக்களே! உங்களை நான் தொடர்ந்து இறைவன் பக்கம் அழைத்துக் கொண்டே இருக்கின்றேன்; அல்லாஹுவை பற்றி அறிந்த ஒருவரின் குணம் அல்லாஹ்வின் குணங்களில் ஒன்றாகவே இருக்கும். 

எனவே நானும் தஃவா - இறை அழைப்புப் பணியை மேற்கொள்வோரும் பாவம் செய்கிறவர்களை ஷைத்தான் மற்றும் மன இச்சையின் பிடிகளில் இருந்து விடுவிக்கவே முயற்சி செய்கிறவர்கள் ஆவோம்.

ஒரு பைத்தியக்காரன் உங்களது குழந்தையை தூக்கி வைத்திருப்பதை நீங்கள் கண்டால், அவனிடமிருந்து உங்கள் குழந்தையை விடுவிப்பதற்கு பெரும் முயற்சி செய்வீர்கள் அல்லவா? அவ்வாறு தான் நானும் என்னை போல் தஃவா - இறை பணி செய்வோரும் உங்களை ஷைத்தானிடம் இருந்து பாதுகாக்க முயற்சிக்கின்றோம். 

உன்னை கவனித்துக் கொண்டிருக்கும் இறைவனை நீ கவனி! 

அவன் பக்கம் நீ முன்னோக்கி செல்! 

உன்னை நேசிப்பவர்களை நீ நேசி! 

யார் உன்னை தன் பக்கம் அழைக்கின்றானோ அந்த இறைவனுக்கு நீ பதில் கொடு!

நீ வழி தவறாமல் வாழு! 

அறியாமை இருளில் இருந்து உன்னை வெளியேற்றி அழிவில் இருந்து உன்னை காப்பாற்றுகின்ற இறைவனிடத்தில் உன்னை ஒப்படைத்து விடு!

உன் பாவங்களை உன்னிலிருந்து அகற்றி, அவனே உன்னை தூய்மையாக்குகிறான். 

உன் தவறான சிந்தனைகள், எண்ணங்கள், தீமைகளை ஏவும் எண்ணங்கள், தீய நண்பர்கள் ஆகிய அனைவரையும் விட்டும் உன்னை காப்பாற்றி கண்ணியமாகவும், மதிப்பாகவும் வாழச் செய்கிறவன் அவனே!  

படைப்புகள் அனைத்தும் இயலாதவை; 

உனக்கு நன்மையோ, தீமையோ செய்ய மக்களால் முடியாது. 

தீமையை அல்லது நன்மையை மக்களின் கரங்களால் இறைவன் தான் செய்ய வைக்கின்றான். 

இறைவனின் செயலே உன்னிடமும் மக்களிடமும் ஆதிக்கம் செலுத்துகின்றது. 

உனக்கு சாதகமானவைகளும் , எதிரானவைகளும் இறைவன் ஏற்கனவே எழுதி வைத்த விதியில் இருப்பதுதான்! 

ஓரிறைக் கோட்பாட்டை சொல்லிக் கொண்டிருக்கும் சிலர் உங்களுக்கு இறைவனின் ஆதாரமாக இருக்கிறார்கள். 

அப்படிப்பட்டவர்களில் சிலர் வெளிப்படையாகவும் உள்ளத்தாலும் உலகை விட்டு விலகி வாழ்கிறார்கள். 

ஒரு சிலர் வெளிப் பார்வைக்கு உலகை விட்டு விலகி வாழுகிறார்கள். 

இத்தகையவர்களை அறிந்தவர்கள் மிகப்பெரும் பாக்கியவான்கள் தாம். அவர்களை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். 

அறிவின் ஆழ் மொழிகள் 
=========================

ஆட்சி, அதிகாரம், செல்வம், திறமை, அறிவு, தந்திர மந்திரம் மற்றும் வாழ்க்கைச் சாதனங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு முன் அற்பமானவைகள். 

அவை நம்மை பாதுகாக்கும் என்று எண்ணி இருந்து இறந்துவிடாதீர்.

நீங்கள் யாரையெல்லாம் நம்பி வாழ்கிறீர்களோ அவர்கள் அனைவரும் உங்களுக்கு கடவுளாக ஆகி விடுகின்றனர்.

நீ யாருக்கு அஞ்சுகிறாயோ யாரிடத்தில் ஏதையேனும் எதிர்பார்த்து இருக்கின்றாயோ அவர்களும் கூட உனக்கு கடவுளாக ஆகிவிடுகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் அல்லாஹ்தான் அவர்கள் மூலம் உனக்கானதை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நீ அறிவதில்லை.

நாட்டை ஆளும் அரசர்களையும், தான் சார்ந்து இருக்கும் கொள்கைகளையும், கட்சிகளையும் வணங்குகிறவர்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அன்பையும் நெருக்கத்தையும் விட்டு தடுக்கப்பட்டு தூரமாக்கப்பட்டு விட்டீர். 

அல்லாஹ் அல்லாதவர்களால் நன்மையும், தீமையும் நடப்பதாக யார் எண்ணுகிறாரோ அவர் அல்லாஹ்வின் அடியார் அல்ல! 

யாருக்கு அந்த வல்லமை இருப்பதாக அவர் நம்புகிறாரோ அவருக்கே தன்னை அடிமையாக ஆக்கிக் கொள்கிறார். 

உண்மையான அரசன் அல்லாஹ்வே! அவனே அமைதியையும், அசைவையும் ஏற்படுத்துகிறான். 

ஒரு பொருளை உருவாக்குபவனும், கட்டுப்படுத்துபவனும் அவனே! 

கொடுப்பவனும் தடுப்பவனும், படைப்பவனும், உங்களுக்கு உணவளிப்பவனும் அவனே! 

அடியார்கள் அனைவரும் தனக்கு மட்டுமே அடிமைப்பட்டு இருக்க வேண்டும் எனவும், 

வேறு யார் மீதும் எதன் மீதும் அன்பு செலுத்தாமல் தன் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டும் எனவும், 

வேறு எந்த ஒன்றையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாமல் தன்னை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அல்லாஹ் விரும்புகிறான்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்