தொ :14 ஆலிம்கள், ஒளி தரும் தீபமா? எரியும் நெருப்பா?
ஆலிம்கள்,
ஒளி தரும் தீபமா? எரியும் நெருப்பா?
நேற்றைய தொடர்ச்சி....14
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
======================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் சாமானிய மக்களுக்கு மட்டும் இஸ்லாத்தை போதிக்கவில்லை; அரசர்கள், அமைச்சர்கள், ஆலிம்கள், அரசியல்வாதிகள், அநீதி இளைப்பவர்கள் என பலருக்கும் தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.
அநீதி இழைப்பவர்களை பதவியில் அமர்த்துவதை வன்மையாக கண்டித்து இருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் அரவணைப்பில் இருக்கும் ஆலிம்களை இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். அரசர்களுக்கும், அமைச்சர்களுக்கும் நெருக்கமாக இருப்பதை ஆலிம்களில் சிலர் விரும்பினார்கள் அப்படிப்பட்ட ஆலிம்களை பார்த்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
"மன்னர்கள் எடுக்கின்ற தவறான முடிவுகளுக்கு ஆலிம்கள் துணையாக நிற்கிறார்கள்; ஷரீஅத்தின் அடிப்படையான சட்டங்களுக்கு எதிராக அரசர்களுக்கு ஏற்றபடி மாற்றம் செய்கிறார்கள்.
கற்றக் கல்விக்கும் இஸ்லாமிய பண்பாட்டுக்கும் துரோகம் இழைப்பவர்களே! நீங்கள் நயவஞ்சகத்தில் இருக்கிறீர்கள்; அரசர்கள் வழங்கும் அற்ப சுகத்திற்காக எவ்வளவு காலம் நயவஞ்சகமாக நடந்து கொள்வீர்கள்? அல்லாஹ்வின் சொத்தில் அடியார்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
ஆலிம்களே! உங்களுக்கு வெட்கம் இல்லையா? ஹராமானதை அனுபவிக்கும் அளவிற்கு பேராசை உங்களை ஆட்கொண்டு விட்டதா? எதுவரை மன்னர்களுக்கு எடுபிடியாக இருப்பீர்கள்?
இந்த அரசர்களின் அதிகாரம் சில காலத்தில் அழிந்து விடும்; என்றும் அழியாத நித்திய ஜீவனாகிய அல்லாஹ்வின் அரசாங்கமே எஞ்சி நிற்கும்! அன்று நீங்கள் என்ன செய்வீர்கள் ?
ஆலிம்களே! நான் உண்மையை உரைக்கின்றேன்; உங்களுக்கும் மற்ற எவருக்கும் நான் அஞ்சப் போவதில்லை; உங்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை; நீங்களும் இந்த உலகமும் எனக்கு கொசுவின் இறக்கை போலத்தான்!
ஏனென்றால் அல்லாஹ் ஒருவன் மட்டுமே எனக்கு இழப்பை ஏற்படுத்த முடியும்; உங்களால் எனக்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்திட முடியாது.
இஸ்லாம் வழங்குகிற உரிமைகளை அனுபவிப்பதற்காகவே இஸ்லாத்தோடு தம்மை தொடர்புபடுத்தி கொண்டு அதன் வழியாக கிடைக்கும் காஜி போன்ற பதவிகளை அனுபவிக்கிறீர்கள். இப்படிப்பட்டவர்கள் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியராக இருக்கவில்லை. பதவிக்காக வேண்டிதான் இஸ்லாத்திலேயே இருக்கிறீர்கள்"
ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த பக்தாத் நகரம் ஒழுக்க அடிப்படையில் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருந்தது. இதைக் கண்டும் காணாதவர்களைப் போல் ஆலிம்கள் இருந்தார்கள்.
ஆனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அவ்வாறு இல்லாமல் உண்மையாக இறைவனுக்கு சேவகம் செய்ய முன்வந்தார்கள்; மக்களுக்கு நல்லுபதேசங்கள் செய்தார்கள்; அதனால் அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்தினான்.
"நபிகள் நாயகம் அவர்கள் கட்டிய ஷரீஅத்தின் கோட்டை வீழ்ந்து கொண்டிருக்கிறது; அதன் அஸ்திவாரம் தகர்ந்து வருகிறது; மக்களே! இடிந்து போன பகுதியை கட்டுவோம்; இது ஒரு மனிதனின் தனி முயற்சியால் நடக்காது; வாருங்கள் அனைவரும் ஒன்றிணைவோம்" என அறைகூவல் விடுத்தார்கள்.
"பிதுஅத்வாதிகள், வழிக்கேடர்கள், பொய்யர்கள், பல வகையான ஆடைகளை அணிந்து வேடமிட்டு தம்மிடம் ஆற்றல் இருப்பதாக சொல்லும் போலிகளால் இஸ்லாம் மார்க்கம் சீர்குலைந்து வருகிறது; அதை சீராக்க வாருங்கள்.
ஒரு நாய் தன் எஜமானனுக்கு நன்றியாக நடந்து கொள்கிறது; அவனுக்காக வீட்டை காவல் காக்கின்றது; வேளாண்மையை பாதுகாக்கின்றது; கால்நடைகளை மேய்க்கின்றது; வேட்டையாடி தருகின்றது; அவனை காணும் போது நன்றியோடு வாலாட்டுகிறது.
மனிதா! உனக்கு அல்லாஹ் உண்ண உணவளித்தான்; உடுத்த உடை வழங்கினான்; உறங்க வீடு வாசல்களை வழங்கினான்; நீ அனுபவிக்க தேவையான அனைத்தையும் வழங்கினான்; ஆனால் அவனுடைய உத்தரவுகளை உதாசீனப்படுத்தி விட்டு வாழுகிறாயே நியாயமா?" என தன்னைப் போன்ற சக ஆலிம் களைப் பார்த்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கேள்வி கேட்டார்கள்.
அபுல் ஃபிதா என்பவர் தன் வரலாற்று நூலில் கூறுகிறார். ஒரு சமயம் பக்தாத் கலீஃபா அல் முழஃப்பர் அவர்கள் பக்தாதுடைய அனைத்து உலமாக்களையும் அரசவைக்கு வரும்படி அழைப்புத்திருந்தார். எல்லோரும் வந்திருந்தார்கள்.
அரசர் சபைக்கு வந்ததும் தம் மந்திரியிடம் "அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்டார். அவர் "இமாம் ஜீலானி (ரஹ்) மற்றும் இப்னு முஸாஃபிர் ஆகிய இருவரைத் தவிர அனைவரும் வந்திருக்கிறார்கள்" என்றார்.
இமாம் ஜீலானி (ரஹ் ) அவர்கள் ஏன் வரவில்லை என அரசர் மீண்டும் வினவியதற்கு பக்தாத் முஃப்தியான முஹ்யித்தீன் அபூ அப்துல்லாஹ் பின் ஹாமித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
"எவரிடம் தமக்கு பிடிக்காத செயல் உள்ளதோ அவரிடம் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் நெருங்க மாட்டார்கள், உண்மைக்காக வாழ்பவர்களிடம் நெருக்கமாக இருப்பார், அல்லாஹ்விற்கு விரோதமாக செயல்படுபவரை எதற்கும் அனுகுவதில்லை; தனக்கு எவரேனும் தீங்கு செய்து விட்டால் அவர் மீது கோபம் கொள்ள மாட்டார். அல்லாஹ்விற்காக மட்டும் அஞ்சுவார்கள்".
நூல் : கலாயிதுல் ஜவாஹிர்
Comments
Post a Comment