தொ : 15 . ஈமானை புதுப்பிக்கும் ஆன்மீக மரபு - பைஅத்
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
=====================================
நேற்றைய தொடர்ச்சி...15
ஈமானை புதுப்பிக்கும்
ஆன்மீக மரபு - பைஅத்
==========================
பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்; பேசியே புரட்சியை உண்டாக்கியவர்கள் இருக்கிறார்கள்.
பேசியே மனித மனங்களை வென்று, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரே நபர் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மட்டும்தான்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் அவையில் இருப்போர் இமாம் அவர்கள் சொன்னது போலவே வாழ வேண்டும் என தீர்க்கமாக முடிவு செய்தாலும் சபையை விட்டு கலைந்ததும் மனதில் ஊசலாட்டங்கள், ஆசைகள் ஆகியன தோன்றி, செவியேற்ற கருத்துக்களை செயல்படுத்த முடியாமல் பலர் தவித்தனர்.
அன்று இருந்த ஆலிம்கள் மதரஸாக்களை நடத்துவது, நூல்கள் எழுதுவது, இமாமத் செய்வது, ஃபத்வா - மார்க்க தீர்ப்பு வழங்குவது போன்ற இறைப்பணியோடு தமது சேவையை நிறுத்திக் கொண்டார்கள்.
மக்களின் உள்ளங்களை தொடும் விதமான உறையோ, செயலோ ஆலிம்களிடத்தில் இல்லாமல் போனது.
ஆலிம்கள் எல்லோரைப் போலவும் வாழ ஆசைப்பட்டு வாழ்ந்தார்கள்; அதனால் அவர்களின் எந்த நடவடிக்கைகளும் முறையாக மக்களிடம் சென்று சேரவில்லை.
மக்களும் ஆலிம்களை தம் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் இதயங்கள் பல வகைகளில் சிதறிப் போய் கிடந்தன; இந்த நேரத்தில் தான் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஆறாம் நூற்றாண்டில் தோன்றி தொய்வில்லாமல் இறை பணியாற்றினார்கள்.
மக்களை அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தினார்கள்; மேலும் தன்னிடம் பைஅத் - சத்தியபிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறும், ஈமானை புதுப்பித்துக் கொள்ளுமாறும், ஆன்மீகத்தில் உயிர்ப்போடு இருக்கு மாறும் கூறினார்கள்.
அதனால் முஸ்லிம்கள் தினம் தினம் தம் தவறுகளை நினைத்துப் பார்க்கவும், அதை அல்லாஹ்விடத்தில் சொல்லிக் காட்டி பாவமீட்சி பெறவும் வழிவகை செய்யும்.
பாவங்களை நினைத்து, வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பதின் மூலம் அல்லாஹ்வின் நினைவில் தொடர்ந்து இருப்பார்கள்.
மேலும் காலப்போக்கில் அவர்கள் தொடர்ந்து பாவம் செய்வது குறையும் என்கிற அடிப்படையில் இதயங்களை இணைக்கும் பைஅத்தின் பக்கம் மக்களை ஈர்த்தார்கள்.
மேலும் இறைவனுக்கு இணை வைக்கமாட்டோம்; பாவங்களை செய்ய மாட்டோம்; பிறருக்கு அநீதி இழைக்க மாட்டோம்; ஹராம் ஹலால்களில் பேணுதலாக இருப்போம்; மறுமையை மறந்து உலக இன்பங்களில் மூழ்க மாட்டோம் என்றெல்லாம் பைஅத்- உறுதி பிரமாணம் வாங்கிக் கொண்டார்கள்.
பைஅத் பெற்ற மக்கள் சொன்னது போலவே சீராக நடந்து கொண்டதால், இஸ்லாம் பக்தாத் நகரத்தில் ஒளிர தொடங்கியது.
பைஅத் வாங்கிய மக்களுக்கும் வழங்கிய இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் இடையே புதியதொரு பிணைப்பு ஏற்பட்டது; அந்த பிணைப்பு தளபதியும் சிப்பாயும் போல, அரசனும் குடிமக்களும் போல இல்லாமல் அதையும் தாண்டி உறுதியான பிணைப்பாக அது இருந்தது.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் பைஅத் பெற்ற சீடர்கள் உலகின் பல பாகங்களுக்கும் சென்று மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அதனால் நாட்டில் நற்குணமிக்கவர்கள் பெருகினார்கள். நாடும் நலம் பெற தொடங்கியது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் களப்பணியாற்றினார்கள்; அரசர்கள் அதிகாரிகள் ஆகியோரின் குறைகளை பகிரங்கமாக சொன்னாலும் அதைக்கேட்டு அடிபணிந்துதான் செல்ல வேண்டுமே தவிர அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை.
ஏனென்றால் அவர்களிடம் வாய்மையும், தூய்மையும் நிறைந்திருந்தது தான் காரணம்; இவர்கள் மீது யாரும் குறை கண்டதில்லை; ஆனால் அனைத்து கண்களும் குறைகளை தேடிக் கொண்டுதான் இருந்தது.
Comments
Post a Comment