தொ :17 .காதரிய்யா தரீக்கா Qadiryya Tariqa :

தரிக்கா எத்தனை வகை?
காதரிய்யா தரீக்கா 
Qadiryya Tariqa : 
====================

நேற்றைய தொடர்ச்சி....17

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
====================================

இஸ்லாமிய ஆன்மீக மரபில், அல்லாஹ்வை அடையும் நோக்கில் ஒரே குழுவினராக செயல்படக்கூடியவர்கள் நிறைந்துள்ள சபை தான் தரீக்கா. 

இவர்களை சூஃபிகள் என்றும் தஸவ்வுஃப்வாதிகள் என்றும் சொல்லுவார்கள்.

இஸ்லாமிய ஷரீஅத் என்பது, தொழுகை நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை வலியுறுத்துகிறது. 

தரீக்கா என்பது இதயத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வை நெருங்க வழி வகுக்க வழிகாட்டுகிறது.

அல்லாஹ்வை நெருங்க அநேக வழிகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருந்தாலும், இறைநேசர்கள் இறைவனை நெருங்க ஒரு வழியை கண்டுபிடித்து, அதில் பயணித்து அல்லாஹ்வையும் அடைந்து வெற்றி கண்டார்கள்; அந்த வழிகளை காட்டும் ஆன்மீக மரபுகள் நிறைந்தவைதாம் தரிக்கா.

மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் பல தரீக்கா - ஆன்மீக மரபுகள் தோன்றியிருந்தாலும் ஐந்தாம் நூற்றாண்டில் தான் தரீகாக்கள் செல்வாக்கு பெற தொடங்கியது.

1.  அந்த வகையில் மாபெரும் மரபுகளை கொண்டு உருவான முதல் தரீக்கா இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தோற்றுவித்த القادرية -  காதரிய்யா தரீக்கா ஆகும். இது ஹிஜ்ரி 550 கல்லுக்குப் பிறகு (கி.பி. 1155 ) உருவானது. 

2.   அர் ரிஃபாயிய்யா الرفاعية / அஹமது அல் ரிஃபாயி (ரஹ்) அவர்கள் ஈராக்கில் ஹிஜ்ரி 555 களுக்கு பிறகு (கி.பி. 1160) தோற்றுவித்தார்கள். 

3.  சுஹ்ரவர்திய்யா - السهرورتية  / அபூ ஹபீப் அல் சுஹ்ரவர்தீ (ரஹ்)  பக்தாத் நகரில் ஹிஜ்ரி 600 ( கி.பி. 1203)  காலகட்டத்தில் தோற்றுவித்தார்கள்.

4.  ஷிஷ்திய்யா الششتية /  காஜா அபு இஸ்ஹாக் ஷிஷ்தீ ( ரஹ்) அவர்கள் ஆப்கானிஸ்தானில் சுமார் ஹிஜ்ரி 530 ( கி.பி. 1135) இல் உருவானது.

5.  நக்ஷ்பந்திய்யா -  النقشبندية / Naqshbandiyya / பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் மத்திய ஆசியாவின்  புகாரா நகரில் ஹிஜ்ரி 750  (கி. பி. 1349) களில் உருவானது. 

6.  ஷாதிலிய்யா الشاذلية / Shādhiliyya /  அபுல் ஹஸன் அஷ் ஷாதிலி (ரஹ்) அவர்கள் எகிப்து மொராக்கோ நகரில் ஹிஜ்ரி 650  (கி.பி. 1250 ) களில் உருவானது.

7.  மவ்லவிய்யா المولوية / Mawlawiyya / மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) துருக்கி கொன்யா நகரில் ஹிஜ்ரி 670 ( கி.பி. 1270)   களில் உருவானது.

8.  பதவிய்யா / البَدَويّة / Badawiyya  அஹ்மத் அல் பதவி (ரஹ்) அவர்கள் எகிப்து  டன்டா பகுதியில் ஹிஜ்ரி  630 (கி.பி.  1230 ) களில் தோன்றியது.

9.  ஹல்வதிய்யா الخلوَتية / Khalwatiyya  உமர் அல் கலூதீ (ரஹ்) அவர்கள் துருக்கி அனடோலியா நகரில் ஹிஜ்ரி  800 (கி.பி. 1400 ) களில்  உருவானது. 

10.  தீஜானிய்யா / التيجانية / Tijaniyya அஹ்மத் அல் தீஜானி (ரஹ்) அவர்கள் அல்ஜீரியா மொராக்கோ  நகரில் ஹிஜ்ரி 1200 கி.பி . 1785 ) களில் உருவாகி மேற்கு ஆப்பிரிக்காவில் பரவியது.

பத்து தரீக்காக்களின் பெயர்களை நாம் கண்டோம்; இவைகளில் முதன்மையானது காதரிய்யயா தரிக்கா ஆகும்; இந்த தரீக்காவின் வழிமுறைகளில் சில வேறுபாடுகளோடு உருவானது தான் மற்ற தரீக்காகள்.

ஒவ்வொரு தரீக்காவிற்கும் ஆன்மீக வம்சாவளி தொடர் (ஸில்ஸிலா) வெவ்வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களை சென்றடைகிறது.

தரீக்காவில் ஷைகு /  ஆன்மீக வழிகாட்டி என்று ஒருவர் இருப்பார். அவருடைய சொற்களையும் செயல்களையும் பின்பற்றி வாழ்வோர் முரீத் என்றும் பீர் என்றும் சீடர் என்றும் அழைக்கப்படுவார்கள்.

இந்த ஷைகுமார்கள் அல்லாஹ்வை திக்ரு செய்யும் வழிமுறையையும் திக்ரில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளையும் கற்றுத் தருவார். 

அதைக் கொண்டு அவர்கள் முராக்கபா எனும் ஆழ் தியானத்தில் திளைத்து மனதை ஓர் நிலைப்படுத்தி அல்லாஹுவை காணும் பாக்கியத்தை உலகத்திலேயே பெறுவார்கள். 

மேலும் அன்பு, கருணை , ஒற்றுமை ஆகியவற்றையே முதன்மையான செயல்பாடாகக் கொண்டு மக்களிடம் நடந்து கொள்வார்கள். 

அதனால் மதவெறி, சாதிய ஏற்றத்தாழ்வு,  மொழி அடிப்படையிலான பிரிவுகள் இல்லாமல் ஒன்றுபட்டு வாழும் வழியை வடிவமைத்தார்கள். இதன் காரணமாக இஸ்லாம் மிகப்பெரிய அளவில் உலகெங்கிலும் பரவியது.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் சொல்லி வந்த சட்டங்களை பின்பற்றுவோரை 'ஹனஃபி' என்றும், இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் சொல்லி வந்த சட்டங்களை பின்பற்றுவோரை 'ஷாஃபி' என்றும் சொல்லப்படுவது போலவே,

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டும்? எவ்வாறு திக்ருகள் செய்ய வேண்டும்? எந்தெந்த நேரங்களில் என்னென்ன மாதிரியான அமல்களை செய்ய வேண்டும்? என ஞான விஷயங்களை சொல்லி இருக்கிறார்களோ அவற்றை பின்பற்றி வருவோர் 'காதிரி' என்று சமூகத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். 

காதிரியா தரீகாவைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இருந்தாலும் இந்தியாவிலும்  குறிப்பாக தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறார்கள். 

ஒவ்வொரு இறைநேசரும் இறைவனை நெருங்குவதற்கு சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வரும் ஒவ்வொருவரும் நக்சபந்தி, சுஹ்ரவர்தீ,என அந்தந்த ஷைகுமார்களின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்