தொடர் 18. பட்டுப்போன மரம் பழம் கொடுத்தது

பட்டுப்போன மரம் 
பழம் கொடுத்தது 
===================

நேற்றைய தொடர்ச்சி.....18

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
====================================

ஷைகு அலீ பின் ஹுத்தீ (ரஹ்) அவர்கள் தமக்கு நோய் ஏற்பட்டால் தமது மாணவரான ஷைகு அபுல் முழஃப்பர் இஸ்மாயில் பின் அலீ (ரஹ்) அவர்கள் இல்லம் சென்று தங்குவது வழக்கம்; அவ்வாறு ஒரு முறை நோய் ஏற்பட்ட போது அங்கு சென்று தங்கி இருந்தார்கள். 

ஷைகு அலீ பின் ஹுத்தீ (ரஹ்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்த இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் நலம் விசாரிப்பதற்காக அபுல் முழஃப்பர் (ரஹ்) அவர்கள் இல்லம் சென்றார்கள். 

அவர்களுடைய வீட்டில் இரண்டு பேரீத்த மரங்கள் பட்டுப்போய்  இருந்தது; அதை வெட்டி போட்டு விட வேண்டும் என அபுல் முழஃப்பர் (ரஹ்) அவர்கள் நினைத்திருந்தார்கள். 

இந்த நிலையில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அந்த இல்லத்திற்கு வந்து ஷைகு அலீ பின் ஹுத்தீ (ரஹ்) அவர்களை நலம் விசாரித்து விட்டு பட்டுப் போயிருந்த ஒரு மரத்திற்கு அருகில் எதார்த்தமாக உலூ செய்து கொண்டு மற்றொரு மரத்திற்கு அருகில் நின்று லுஹா தொழுதார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் சென்றிருந்த நேரம் பேரீத்தம் மரங்கள் பழம் பழுக்கும் காலமாக இருந்ததால் செங்காய்களாகவும் பழமாகவும் பழுத்து தொங்கிக் கொண்டிருந்த சில குலைகளை  வெட்டி வந்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் புசிக்க கொடுத்தார்கள். 

அவற்றை சாப்பிட்டு விட்டு, "அல்லாஹ் உமது நிலத்திலும், பணத்திலும், அளவையிலும், மரங்களிலும் அருள் செய்வானாக!" என்று துஆ செய்துவிட்டு தமது இல்லம் திரும்பினார்கள். 

ஒரு வாரத்திற்கு பிறகு பட்டுப் போயிருந்த மரங்கள் துளிர் விட்டன; சில மாதங்களில் மற்ற மரங்களைப் போலவே இந்த இரண்டு மரங்களும் கூட காய்க்கத் தொடங்கியது. 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வந்து சென்ற பின்னர் அந்த நிலத்தில் அதிகமான விளைச்சல்களும், கால்நடைகளில் அபிவிருத்தியும் ஏற்பட்டதை அபுல் முழஃப்பர் (ரஹ்) அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களே இந்த செய்தியை நமக்கு சொல்லித் தருகிறார்கள்.

நூல் : நூருல் அப்ஸார்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்