தொடர் 22. உதவிதான் உண்மையான வழிபாடு
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
நேற்றைய தொடர்ச்சி.....22
உதவிதான் உண்மையான வழிபாடு
==================================
•°•°•°•°•°
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒரு நதியை கடந்து வந்து தமது ஊருக்கு செல்ல முயற்சித்த போது அங்கே ஆடைகள் கிழிந்த நிலையில் ஒருவர் நின்றிருந்ததை கவனித்தார்கள்; அவர் முகம் வாடி இருந்தது.
அவர் அருகே சென்று "உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் இந்த நிலையில் இருக்கிறீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், எனது ஊர் ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருக்கிறது; நான் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்; படகோட்டிக்கு கொடுப்பதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை; அதனால் நான் இங்கேயே இருக்கின்றேன்;
அந்தப் படகோட்டியிடம் எவ்வளவோ கெஞ்சி கேட்டுப் பார்த்தும் என் மீது அவர் இரக்கம் காட்ட வில்லை; அதனால் பல நாட்களாக உணவின்றி இதே பகுதியில் இருக்கின்றேன்" என்று கூறினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடமும் அந்த நேரம் பணம் இல்லை; என்ன செய்வது என்று யோசித்து விட்டு இறைவனிடம் இரு கரம் ஏந்தி துஆ செய்தார்கள்.
சிறிது நேரத்தில் ஒருவர் அங்கே வந்தார்; பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை கொடுத்து, "உங்களின் செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள்;" என்று கூறிச் சென்றார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அதைப் பிரித்துப் பார்த்தார்கள்; தங்க நாணயங்கள் இருப்பதை அறிந்ததும் ஆடைகள் கிழிந்த நபரிடம் அந்தப் பையை கொடுத்து, "இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்; படகோட்டி இடம் உங்களுக்கான பணத்தை கொடுத்து விடுங்கள்;
உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்; மீதப் பணத்தை படகோட்டி இடம் வழங்கி "இரு கரைகளில் உள்ள யாரும் பணம் இல்லாமல் நிற்கக்கூடாது; அதற்காக இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்' என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்லுங்கள்" என்று சொல்லி பணத்தை கொடுத்து விட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
தெரிந்தவர்களுக்கு உதவுவதும் தெரியாதவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுச் செல்வதும் மனிதனின் எதார்த்தமான செயல்!
தெரிந்தவர்களாக இருந்தாலும், தெரியாதவர்களாக இருந்தாலும் தேவை உடையவர்கள் என்று வரும்போது எல்லோரும் சமமானவர்கள் தான் என்பதை புரிந்து கொண்ட இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம்மால் இயன்ற உதவியை செய்துவிட்டு சென்றிருப்பது போல் நாமும் செய்ய முன்வர வேண்டும்.
தொடரும்......
Comments
Post a Comment