தொடர் 23. தானத்தின் தெய்வீக முகம்

தானத்தின் தெய்வீக முகம்
============================

நேற்றைய தொடர்ச்சி.....23

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக தமது வாகனத்தில் தமது பணியாளருடன் சென்று கொண்டிருந்தார்கள் .

வழியில் இரவு வந்ததும் 'அஜீலா' எனும் கிராமத்தில் தங்குவது என முடிவு  செய்தார்கள்; பின்னர் தமது பணியாளரிடம் "இந்த கிராமத்தில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் ஒருவருடைய வீட்டை தேர்ந்தெடுத்து வந்து சொல்லுங்கள் அங்கே நாம் இரவை கழிப்போம்" என்று சொல்லி அனுப்பினார்கள்.

அவர் கிராமம் முழுவதும் சுற்றி பார்த்தார்; சிலரிடம் விசாரித்த வகையில் ஒரு வீட்டை காட்டினார்கள்;  அந்த வீட்டை அடையாளம் வைத்துக்கொண்டு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் சென்று விபரத்தைச் சொன்னார்கள். 

இருவரும் அந்த வீட்டிற்கு வந்ததும் இரவு தங்குவதற்கு அனுமதி கேட்டார்கள்; அவர்கள் அனுமதித்து உள்ளே அழைத்தார்கள். 

அந்த வீட்டில் வயதான தம்பதியரும் இளம் பெண்ணும் இருந்தனர்; வீட்டின் கூரைகள் இற்று விழும் நிலையில் இருந்தது.

அவர்கள் இருவரும் படுப்பதற்கு கிழிந்துப் போன ஒரு பாயை கொடுத்து இருவரையும் படுக்கச் சொன்னார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வந்திருப்பதாகவும் இன்னாருடைய வீட்டில் தங்கியிருப்பதாகவும் அறிந்த ஊர் மக்கள், செல்வந்தர்கள், அரசு பதவிகளில் இருப்பவர்கள், அறிஞர்கள், ஆலிம்கள் என பலரும் அந்த வீட்டின் எதிரில் கூடிவிட்டார்கள் 

அங்கே வருகை தந்திருந்த ஒவ்வொருவரும், "தமது வீட்டில் வந்து தங்குங்கள் இந்த வீட்டில் கூரைகள் கூட சரியாக இல்லை" என ஒவ்வொருவரும் தமது வீட்டிற்கு அழைத்தார்கள்; ஆனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இங்கேயே தங்குவதாக உறுதி அளித்தார்கள். 

பின்னர் அங்கு கூடி இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்று இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்காக பாய், தலையணை, பெட்ஷீட் , போர்வை, உண்ண உணவு, ஹஜ்ஜுடைய பயணத்திற்குத் தேவையான சாமான்கள், பண முடிப்புகள் என ஒவ்வொருவரும் ஒரு வகையான பொருட்களைக் கொண்டு வந்து அன்பளித்தார்கள். 

சிலர் அன்பளிப்பு செய்ய வேண்டுமே என்பதற்காக தன்னிடம் இருந்த ஆக உயர்ந்த அன்பளிப்பான ஆடுகள், ஒட்டகங்கள் போன்றவற்றையும் கொடுத்தார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எதையும் மறுக்காமல் அனைத்தையும் பெற்றுக் கொண்டு  அவர்களுக்காக துஆ செய்து வழி அனுப்பி வைத்தார்கள். 

அந்த இரவை அங்கேயே தங்கியிருந்து உறங்கி எழுந்தார்கள்; காலையில் அந்த வீட்டார் சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டு தமக்கு வழங்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் அந்த வீட்டார் வசம் வழங்கினார்கள். 

அந்த வீட்டினர் எவ்வளவோ மறுத்தும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வலுக்கட்டாயமாக வழங்கினார்கள்.

அந்த ஊரிலேயே ஆக ஏழையாக இருந்தவர்கள் ஒரே இரவில் ஓரளவு செல்வந்தராக ஆனார்கள். 

செல்வந்தர்களை அனைவரும் நேசிக்கின்றனர்; ஏழைகளை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; அவர்களை நான் நேசிக்க வேண்டாமா? என அடிக்கடி இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். 

அந்த வார்த்தையை உண்மைப்படுத்தும் விதமாக ஏழைகள் மீதான தன் அன்பை ஒருநாள் இரவு இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை அறியும்போது அவர்களின் வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என அறிய முடிகிறது.

மேலும் நமது செயல்களால் தான் நமது போதனைகள், அறிவுரைகள் மதிக்கப்படும் என்பதை நீங்கள் உணர வேண்டும். நாம் அணிந்திருக்கும் ஆடைகளாலோ, நாம் அடைந்திருக்கும் பதவிகளாலோ நமது சொல் வலிமையானதாக மாறாது.

மொழி தெரியாதவர்களால் கூட நாம் செய்யும் நற்செயல்களால் நாம் மதிக்கப்படுவோம்.

பதவிகளாலோ பொருளாதாரத்தாலோ நாம் எவ்வளவு உயர்ந்தாலும் நமது பணிவை இழந்து விடக்கூடாது. அன்பும் கருணையும் தான் அல்லாஹ்வின் அன்பை பெற்றுத் தரும்.

இந்த நிகழ்வு, இறையடியார்களை சமமாக பார்க்கத் தூண்டும் வலிமையான போதனை. 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை நெறி நமக்கெல்லாம் ஒரு சிந்தனைக் கண்ணாடி.....

தொடரும்.......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்