தொடர் 24. பிறர் பசியை தன் பசியால் தனித்தவர்

பிறர் பசியை 
தன் பசியால் தனித்தவர் :
=========================

நேற்றைய தொடர்ச்சி....24

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
=====================================

•°•°•°•°•°

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பக்தாத் நகரத்தில் கல்வி கற்று வந்தபோது அந்த நகரமும், நாடும் கடும் பஞ்சத்தில் மூழ்கி இருந்தது. அப்போது அவர்களுக்கு வயது இருபது.

அச்சமயத்தில் மக்கள் பசி பட்டினியால் வாடினார்கள்; ஏழைகள் பரிதவித்தார்கள்;  தண்ணீர் இல்லாத திஜ்லா நதிக்கரையில் இலை தழைகள் ஏதேனும் கிடந்தால் பறித்து உண்ணலாம் என எண்ணி பலர் சுற்றினார்கள். 

கடைத் தெருக்களிலும் காய்கறி மார்க்கெட்களிலும் அழுகிப்போனவற்றை சாப்பிடுவதற்கு ஒரு கூட்டம் அலைமோதியது.

அந்நேரத்தில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வசம் ஏதேனும் பணம் இருந்தால் அதை ஏழை எளியோருக்கு வழங்கி மகிழ்வார்கள். 

அவர்களின் தாயார் அவ்வப்பொழுது அனுப்பி வைக்கும் பணத்தில் சிறிதளவை தமக்காக வைத்துக் கொண்டு பெரும்பாலானவற்றை ஏழைகளுக்கு வழங்கி விடுவார்கள். 

இந்தப் பஞ்சத்தின் போது பல நாட்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் சாப்பிடவில்லை; கடும் பட்டினியில் கிடந்தார்கள். 

ஏதேனும் சாப்பிடக் கிடைக்குமா? என தெருத்தெருவாக சுற்றி  அலைந்தார்கள்; எதுவும் கிடைக்கவில்லை.

பசி மிகுதியால் கால்கள் தடுமாறின; தலை சுற்றியது; வெயிலின் தாக்கத்தினால் கண்கள் இருண்டது; என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது அருகில் இருந்த பள்ளிவாசலுக்குள் சென்று சாய்ந்து அமர்ந்தார்கள்.

அப்பொழுது வெளியூரைச் சேர்ந்த ஒருவர் பள்ளிவாசலின் ஓர் ஒதுக்குப் புறத்தில் அமர்ந்து தாம் வாங்கி வந்திருந்த உணவைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினார்; அதன் வாசனை இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை ஈர்த்தது.

அந்த நபர் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை சாப்பிட அழைத்தார்; ஆனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் போகவில்லை; அவர் மீண்டும் மீண்டும் அழைத்துப் போகாததால் அவர் எழுந்து வந்து கைகளைப் பிடித்து இழுத்துச் சென்று தன்னோடு அமர வைத்து சாப்பிட வைத்தார்; இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள்  சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர், "தாங்கள் யார்? இங்கு என்ன செய்கிறீர்கள்?" என விசாரித்தார். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், தாம் மதரஸாவில் படிப்பதாகவும், பசியால் சுற்றி வந்ததாகவும் கூறினார். 

உடனே அவர், "உங்களுக்கு அப்துல் காதிரை தெரியுமா?" என்று கேட்டார். 

அதற்கு இமாம் அவர்கள், "நான் தான் அப்துல் காதிர்" என்று சொன்னார்கள். 

உடனே அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது; அழுகையின் இடையே உங்களைத்தான் நான் மூன்று நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்; 

உங்கள் ஊருக்கு நான் சென்றிருந்த போது உங்களுடைய தாயார் உங்களிடம் எட்டு தீனார்களை கொடுக்கும்படி என்னிடம் கொடுத்து அனுப்பினார்; உங்களை நான் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை; இந்நிலையில் என் செலவிற்காக இருந்த பணமும் தீர்ந்துவிட்டது; கடந்த மூன்று தினங்களாக நானும் பட்டினியாக தான் இருந்தேன்; 

இன்று பசி, உச்சத்தை அடைந்ததால் வேறு வழியே இல்லாமல் உங்கள் பணத்திலிருந்து உணவு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்;

ஆரம்பத்தில் எனது விருந்தாளியாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றே எண்ணினேன்; இல்லை, உங்களின் விருந்தாளியாகவே நான் வந்திருக்கிறேன் என்பதே உண்மை! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி மீதத் தொகையை வழங்கினார். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மிகவும் சந்தோசம் அடைந்து, "எனக்கு சொந்தமான பணத்தில் நீங்கள் செலவளித்தது உங்களுக்கு ஹலால்தான்" என்று ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார். 

அவர் வழங்கிய மீதத் தொகையைப் பெற்ற இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அவருக்கு சில தீனார்களை கொடுத்து "வழி செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார்கள்.

மீத தீனார்களில் சில தீனார்களை தமக்காக வைத்துக் கொண்டு மற்ற தீனார்களை ஏழைகளுக்கும், உணவின்றி சிரமப்படும் சக மாணவர்களுக்கும் வழங்கினார்கள். தாம் வைத்திருந்த தீனார்களை கூட மூன்று நாட்களில் எல்லோருக்கும் உணவு வாங்கி கொடுத்து காலி செய்தார்கள்.

பிறர் அனுபவிக்கும் கஷ்டங்களும் சிரமங்களும் இவர்கள் முன் காட்சி அளித்ததால் அனைத்து தீனார்களையும் மக்களுக்காக அள்ளி  கொடுத்து விட்டார்கள். 

தம்மிடம் ஒன்று இருக்க, மற்றவரிடம் அது இல்லாமல் சிரமப்படுவாரானால் அதைப் பார்த்து நாம் எப்படி பொறுத்து கொண்டிருக்க முடியும்?

பக்தாத் நகரம் கடும் பஞ்சத்தில் தத்தளித்தபோது, அனைவரும் தம் பசியை மட்டுமே நினைத்த நேரத்தில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் பசியையும் மறந்து, பிறரின் பசியை போக்கும் தியாகத்தின் வடிவமாக மாரினார்கள். பிறருக்கு வழங்குவதில்  மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அடைந்தார்கள்.

அவர்களிடம் தோன்றிய தாராள மனப்பான்மை பஞ்சகாலத்தில் பிறந்த பரிவல்ல; அது அல்லாஹ்வின் அருளால் நிரம்பிய இதயத்திலிருந்து வெளிவந்த கருணை;  மனிதநேயங்களால்  ஊறிய இதயத்தின் வெளிப்பாடு.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எட்டு தீனாரையும் தூக்கிக் கொடுத்த போது அவர் பணக்காரர் அல்ல!  ஆனால் கொடுத்தார்; அந்த மனம் யாருக்கு வரும்? 

இஸ்லாம் என்பது தொழுவது, நோன்பு, நோற்பது ஹஜ் செய்வது என இறைவனோடு மட்டுமே சம்பந்தப்பட்ட மார்க்கம் மட்டுமல்ல! மனித உணர்வுகளோடு கலந்த மார்க்கம். 

"உன்னிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொடுத்து வாழ்" என வாழ்க்கை முறையை போதிக்கும் மார்க்கம்.

தொடரும்....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்