தொடர் 28. பணிவும் பாசமும் மலரும் போது...
பணிவும் பாசமும் மலரும் போது...
عند ما تزهر التواضع والمحبة
நேற்றைய தொடர்ச்சி....28.
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
====================================
•°•°•°•°•°•°
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒரு தெருவின் வழியாக நடந்து செல்லும் போது அங்கு சிலர் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தார்கள். சிறுவர்கள் அருகே சென்று அவர்களை அழைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள்; அந்த சிறுவர் சிறுமியரின் தலைகளில் கைகளை வைத்து பாசமாக தடவிக் கொண்டிருந்தார்கள்
அப்பொழுது சிறுவர்களில் ஒருவர் "எங்களுக்குக் கடையில் தின்பண்டங்களை வாங்கி கொடுங்கள்" எனக் கேட்டனர்.
இமாம் ஜீலானி (ரஹ் ) அவர்கள் அருகில் இருந்த கடைக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று அவர்கள் கேட்ட அனைத்து வகையான தின்பண்டங்களையும் வாங்கி வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்தினார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பொதுவாகவே குழந்தைகள் மீது பேரன்பு கொண்டு இருந்தார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் மனைவியரில் எவருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வார்கள்.
சில சமயங்களில் சமையல் வேலைகளையும் செய்து கொடுப்பார்கள்; குழந்தைகளுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார்கள்.
வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டு வந்து வீட்டில் வைப்பார்கள்; வீடுகளைக் கூட்டுவது, பால்தரும் மாடுகளையும், ஆடுகளையும் பராமரிப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்வார்கள்.
மிகப்பெரும் இறைநேசராக, உலகம் போற்றும் மாமனிதராக இருந்தாலும் வீட்டுக்குள் ஒரு கணவனாக தந்தையாக நடந்து கொண்டார்கள். இவ்வாறு தான் நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். ∆
புகழ், பதவி, பெருமை ஆகியன நம்மை எப்பொழுதும் உயரத்தில் வைத்திருக்காது; பணிவு தான் மனிதனை உண்மையாகவே உயரத்தில் வைத்திருக்கும்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் இருந்த பணிவை குறித்துதான் இப்பொழுது நாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்; அதுதான் அவர்களின் பெருமை.
குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும் அன்பே நாளைய நல்ல சமுதாயத்தின் விதை! எனவே குழந்தைகளிடமும் குறிப்பாக நமது பிள்ளைகளிடமும் எப்பொழுதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
"ஆண்மை என்பது ஆட்சி செய்வதற்கில்லை! நம் மீது காட்டப்படும் அன்பையும், நம் மீது உள்ள பொறுப்பையும் சரியாக வெளிப்படுத்தும் மனநிலையில் தான் இருக்கின்றது" என்று இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்; அவர்கள் சொன்னது போலவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
தொடரும்......
Comments
Post a Comment