தொடர் 8 ஷைகு ஜீலானி (ரஹ்) அவர்களின் கராமத்துகள்
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
நேற்றைய தொடர்ச்சி.....8
ஷைகு ஜீலானி (ரஹ்)
அவர்களின் கராமத்துகள்
-------------------------------------------------
பக்தாதில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது அபுல் அப்பாஸ் என்ற ஒருவர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் வந்து பசி பட்டினியிலிருந்து எனக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தாங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் எனக் கேட்டார்.
அவ்வாறே ஜீலானி (ரஹ்) அவர்கள் துஆ செய்து சிறிது கோதுமையை தம் பொற்கரத்தால் அள்ளி அவரிடம் கொடுத்து "இதனை ஒரு டப்பாவிற்குள் போட்டு அதன் வாய் பகுதியை துணியால் கட்டிவிடுங்கள்; அதன் நடுவே ஒரு ஓட்டை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு உணவு தேவைப்படும் போது அந்த ஓட்டை வழியாக எடுத்துக் கொள்ளுங்கள்; துணியை கழற்றி விடாதீர்கள்" எனக் கூறினார்கள்.
அவரும் குடும்பத்தினரும் ஐந்து வருடங்கள் அந்த பைமூலம் சாப்பிட்டனர்; ஒருமுறை அவரது மனைவி அந்த துணியை அவிழ்த்து விட்டார்; அன்றிலிருந்து ஏழாம் நாள் தானியம் காலியாகி விட்டது பிறகு தானியம் வரவே இல்லை.
நூல் : தாரிக் பக்தாத், நூருல் அப்ஸார்
இதேப் போன்று நபி தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொருமையும் ஏழ்மை நிலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு பையை கொடுத்து, "இதில் உணவு உள்ளது; உமக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் எடுத்து சாப்பிடுங்கள்; பசித்தவர்களுக்கு கொடுங்கள்; ஆனால் பையை தலைகீழாக கவிழ்க்காதீர்" என்று கூறினார்கள்;
அதை வைத்துக்கொண்டு 30 ஆண்டுகள் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சாப்பிட்டு வந்தார்கள்; உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட அன்று ஏற்பட்ட அமளியில் அபூஹுரைரா ரலி அவர்களின் இடுப்பிலிருந்த பை கீழே விழுந்து காணாமல் போய்விட்டது.
ஹதீஸ் சுருக்கம் : நூல் : ஹயாத்துஸ் ஸஹாபா
அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி என்பவர் ஜிலானீ (ரஹ்) அவர்களிடம் சென்று "நான் ஹஜ் செல்கிறேன்; காலம் குறைவாக உள்ளது என்னிடம் ஒரு ஒட்டகம் உள்ளது; அது மெலிந்து கிழடாக இருக்கின்றது; வேகமாக செல்வதில்லை; ஆதலால் தாங்கள் துஆ செய்துத் தரும்படி வேண்டுகிறேன்” என தனது ஒட்டகையை ஜிலானி (ரஹ்) அவர்கள் அருகே நிறுத்தினார்கள்.
ஷைகு அவர்கள் துஆ செய்த பிறகு அந்த ஒட்டகத்தை தம் பொற்கரத்தால் தடவினார்கள். நான் ஹஜ்ஜுக்கு செல்லும்போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட மிக வேகமாகவும் வலிமைமிக்கதாகவும் ஆகிவிட்டதை அறிந்தேன்.
நூல்: கலாயிதுல் ஜவாஹிர்,
தாரிக் பக்தாத்
மெலிந்த கிழடான ஒட்டகையில் தாமதமாக மதீனாவிற்கு வந்த ஹலிமா (ரலி) அவர்கள் நபிகளாரை பால் குடிப்பாட்ட பெற்றுக் கொண்டு மீண்டும் தமதூருக்கு திரும்புகையில் குழந்தை நபிகளாரும் செவிளித் தாயும் அமர்ந்திருந்த கிழட்டு ஒட்டகம் இப்பொழுது மற்றவர்களின் ஒட்டகத்தைவிட மிக விரைவாக சென்றது.
நூல் : இப்னு ஹிஷாம்,
ரஹீக்குல் மக்தூம்.
இவ்வாறு அனேக கராமத்துகளை அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செய்துள்ளார்கள்; கராமத்துகளை நம்புவது சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையாகும் மறுக்கக் கூடாது.
நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த முஸைலமா என்பவன் தம்மை நபியென கூறி கிராமப்புர மக்களை நம்ப வைத்து தன்னை புகழ்பாட பெரும் கூட்டம் ஒன்றை சேர்த்துக் கொண்டான்.
மேலும் இவன், "இனியாரும் பஜ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை தொழ வேண்டாம்; அது உங்கள் மீது கடமையில்லை" எனவும், "விபச்சாரம், மது, குறி பார்க்குதல் போன்றவை இனி உங்களுக்கு ஹலால்" என்றும் கூறி மக்களை திசைத்திருப்பினான்.
நூல் : தாரிஹுல் ஹுலபா
இந்த மனித ஷைத்தானைப் போன்றே உண்மையான ஷைத்தான் ஒரு நாள் ஷைகு ஜீலானி (ரஹ்) அவர்களிடம் மேகத்தைப் போல் காட்சியளித்து "அப்துல் காதிரே! இனி உமக்கு ஹராம்கள் அனைத்தும் ஹலால் ஆக்கப்பட்டுவிட்டது; இனி நீர் தொழ வேண்டியதில்லை; நான் தான் உன் இறைவன் கூறுகிறேன்" என அசரீரியாக கூறினான்.
இவன் ஷைத்தான் என ஜீலானி (ரஹ்) அவர்கள் விளங்கிக் கொண்டு "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என கூறினார்கள்.
அவன் எதிரே வந்து, "அப்துல் காதிரே! உம் இறைவனின் சட்டங்களை - வரைமுறைகளை நீர் அறிந்து வைத்துள்ள காரணத்தால் என்னிடமிருந்து தப்பித்து கொண்டீர்; ஆனால் தரீக்காவைப் பின்பற்றிய எழுபது நபரை இது போன்று சொன்னதின் மூலம் நான் வழிக் கெடுத்திருக்கிறேன்" என்று கூறினான்.
நம் எதிரே உள்ள கெட்ட மனிதர்களையும் மனித ஷைத்தான்களையும் நம்மால் அறிய முடியவில்லை; ஆனால் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உண்மையான ஷைத்தானை ஒதுக்கி விட்டார்கள். நாமும் கெட்ட மனிதர்களின் தொடர்பை துண்டித்து வாழ வேண்டும்.
Comments
Post a Comment