தொடர்ச்சி 9 புதுமைகள் - கராமத் மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
====================================
நேற்றைய தொடர்ச்சி. ......9
புதுமைகள் - கராமத்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
அஜ்மீரில் அடங்கியிருக்கும் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தீ (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உத்தரவிற்கு இணங்க தஃவா / அழைப்புப் பணியை மேற்கொள்ள மதீனாவை விட்டு புறப்பட்டு பக்தாத் வந்தடைந்தார்கள்.
அங்கே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் சமூகத்தில் ஐந்து மாதங்கள் தங்கி இருந்து அவர்களின் அரிய பல உபதேசங்களைக் கேட்டு அவர்களின் ஆசியோடும் அனுமதியோடும் இந்தியா வந்து சேவையாற்றினார்கள்.
°•°•°•
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு கலீல் என்றொரு காதிம் / சேவையாளர் இருந்தார். அவர் இமாம் அவர்களிடம் போதிய கல்வி ஞானங்களை கற்றிருந்த நேரத்தில், "நீங்கள் ( ஈராக்கின் வடக்குப் பகுதியில், டைக்ரிஸ் நதிக்கரையில், பக்தாத் நகரத்திலிருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள) மோசூல் (Mosul) நகருக்குச் செல்லுங்கள்!
அங்கே உங்களுக்குத் திருமணம் ஆகும்; குழந்தைகள் பிறப்பர். அங்கு அலீ என்பவர் உங்களுக்கு அறிமுகம் ஆவார்; அவர் வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர்; அவர் கண் பார்வை இல்லாதவர்;
அவர் உமது பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதி கொடுப்பார்; உமது பிள்ளைகள் ஏழு வயதிற்குள் குர்ஆனை மனனம் செய்து விடுவர்; 94 வருடம் ஒரு மாதம் 7 நாட்கள் வரை நீங்கள் கஷ்டமின்றி சந்தோசமாக வாழ்ந்து பாபிலோன் நகரத்தில் மரணமாவீர்;
தஃவா - இறை பணியை தொடர்ந்து செய்து வாருங்கள்" என சொல்லி வழி செலவிற்கு தேவையான வாகன வசதிகளையும், தீனார்களையும் வழங்கி அனுப்பி வைத்தார்கள். எதிர்காலம் குறித்து சொன்ன அனைத்து விஷயங்களும் அவரின் வாழ்வில் நடந்தேறியது.
°•°•°•
ஒரு பெண் தனது மகனை அழைத்து வந்து, "ஷைகு அவர்களே! எனது மகன் உங்கள் மீது மிகவும் பாசம் வைத்திருக்கிறான்; எனவே எனது மகனை உங்களது பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள்; இறைவழிபாட்டை பழகிக் கொடுங்கள்" என சொன்ன பிறகு தன் மகனை விட்டு சென்றாள்.
சில வருடங்களுக்குப் பிறகு மகனைப் பார்க்க வந்திருந்தத் தாய் தனது மகனைப் பார்த்தாள்; அவர் உப்புத் தண்ணீரில் காய்ந்த ரொட்டிகளை தொட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார்; மஞ்சளாக, மெலிந்த உடலோடு அவர் காணப்பட்டார்.
அப்பொழுது அத்தாய் தன் மகன் நோயுற்று இருப்பது போன்று தெரிகிறதே என எண்ணி அது குறித்து விசாரிக்க இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் வந்தார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பொரித்த கோழி இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தத் தாய், "ஷைகு அவர்களே! எனது மகன் காய்ந்த ரொட்டியை உப்பில் தொட்டு சாப்பிடுகிறார்; தாங்களோ பொறித்த இறைச்சியை சாப்பிடுகிறீர்களே" என கேட்டார் .
அதற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அங்கே இருந்த எலும்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அவற்றின் மீது தன் கையை வைத்து, 'மக்கிப்போன எலும்புகளை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வே! உன் ஆணைப்படி இந்த ஜீவனுக்கு உயிர் அளிப்பாயாக!" என்று சொன்னதும் அந்த கோழி உயிர்பெற்று நின்றது.
அப்பொழுது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "தாயே! உங்களது மகன் (என்னைப்போல்) இந்த நிலைக்கு வந்த பின் தனக்கு விருப்பமானதை சாப்பிடட்டும்" எனக் கூறி அனுப்பி வைத்தார்கள்.
°•°•°•
பொதுவாகவே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பொதுமக்கள் எதை தம்மிடம் கேட்க வந்திருக்கிறார்கள் என்பதை முன்னரே யூகித்து அதற்கான பதிலை சொல்லுவார்கள். அதை கொண்டு அவர்கள் திருப்தியோடு திரும்பிச் செல்வார்கள்.
இந்நிலையில் ஒரு முறை இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வியாதியினால் படுக்கையில் இருந்தார்கள்.
அந்த நோயிலிருந்து அவர்கள் எழ மாட்டார்கள் அந்த நோயிலேயே அவர்கள் மரணித்து விடுவார்கள் என்று அவர்களுடைய மகன்களில் ஒருவரான அப்துல் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் எண்ணினார்கள்.
இதனை புரிந்து கொண்ட இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "மகனே! நீ வருத்தப்படாதே! நான் யஹ்யா என்றொரு மகனை பெற்ற பிறகு தான் இவ்வுலகைப் பிரிவேன்" என ஆறுதல் கூறினார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் சொன்னது போலவே அந்த நோயிலிருந்து குணமடைந்த பிறகு அபிசீனியப் பெண் ஒருவரை திருமணம் செய்து அவர் மூலமாக யஹ்யா என்றொரு பெற்றெடுத் தார்கள். அவரே இமாம் அவர்களுக்கு கடைசி மகன் ஆவார்.
தொடரும்........
Comments
Post a Comment