பஞ்சத்தில் மலர்ந்த பரிவு
பஞ்சத்தில் மலர்ந்த பரிவு
நேற்றைய தொடர்ச்சி....25
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
====================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பஞ்சகாலத்தில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த பஞ்சகாலத்தில் தொடர்ந்து இருபது நாட்களாக நான் பட்டினியாகக் கிடந்தேன்; தங்கியிருக்கும் இடத்தில் உண்ண எதுவும் கிடைக்காது என உறுதியாக அறிந்து கொண்ட பிறகு காடுகளுக்குச் சென்று கீரைகள் பழங்கள் ஏதேனும் புசிக்கலாம் என ஆசைப்பட்டு பக்தாது அருகே இருந்த காடுகளுக்குள் நுழைந்தேன்.
அங்கே எழுபதுக்கும் மேற்பட்ட ஆலிம்கள் 'சாப்பிட ஏதாகிலும் கிடைக்குமா?' என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் காட்சியை கண்டதும் அவர்களுக்கு போட்டியாக நாம் இங்கு இருக்க வேண்டாம் என எண்ணி திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
அப்பொழுது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன்; அவர், "உனது தாயார் இந்தத் தங்கக் கட்டியை உன்னிடம் கொடுக்கச் சொன்னார்கள்" என சொல்லி ஒரு தங்கக் கட்டியை கொடுத்தார்.
நான் அந்த தங்கக் கட்டியை உடைத்து அதிலிருந்து சிரிதளவை நான் எடுத்துக் கொண்டு பெரும்பகுதியை எடுத்துக்கொண்டு மீண்டும் காடுகளுக்குச் சென்றேன்.
அங்கிருந்த எழுபதுக்கும் மேற்பட்ட ஆலிம்களில் ஒருவரிடம் ஒரு துண்டு தங்கக் கட்டியை கொடுத்து, "நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினேன்.
அந்த ஆலிம், "இது ஏது? எங்கிருந்து வந்தது? ஹலாலானதா?" என விசாரித்தார்.
"என் செலவுகளுக்காக என் தாய் எனக்கு கொடுத்து அனுப்பினார்; நீங்கள் பட்டினியால் வாடும் போது நான் மட்டும் எப்படி சுகம் அனுபவிப்பேன்? இவற்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்" என்று கூறினார்கள். அவர்கள் மனமார ஏற்றுக் கொண்டார்கள்.
பின்னர் நான் வைத்திருந்த தங்கக் கட்டியை எடுத்துச் சென்று அதற்கு எவ்வளவு ஆகாரம் கிடைக்குமோ அவ்வளவையும் வாங்கி நானும் சாப்பிட்டேன்; அந்தப் பகுதியில் இருந்த ஏழை எளியவர்களுக்கும் வழங்கினேன்.
எனது தாயார் எனக்கு வழங்கிய தங்கத்தை நான் பெற்ற நாளிலேயே செலவழித்து முடித்தேன். ∆
நபி {ஸல்} அவர்கள் நாளைய தினத்திற்காக இன்று எதையும் சேமித்து வைக்க மாட்டார்கள்; அதுபோலவே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை காணும் போது நபியின் சுன்னத்தை அங்குலம் அங்குலமாக பின்பற்றி இருக்கிறார்கள் என தெரிய வருகிறது.
உண்மையான செல்வம் நம் கைகளில் இருப்பதல்ல! நம் இதயத்தில் உள்ள தாராள மனப்பான்மை தான்
(Generosity) உண்மையான செல்வம்!
நாம் பசித்திருக்க பிறர் உண்ண உணவளிப்பதே உண்மையான இறைபக்தி.
பஞ்சம் என்பது உணவின் பற்றாக்குறை அல்ல! நம் இதயங்களில் கருணை குறைந்ததாலே உண்மையான பஞ்சம் தொடங்குகிறது.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்வை போல் நாமும் நம்மிடம் உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையுடன் வாழ வேண்டும்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்; நபியின் வழியில் நடந்து பிறருக்காக வாழுங்கள்; அதுவே உண்மையான இஸ்லாமிய வாழ்க்கை.
Comments
Post a Comment