பைஅத்
பைஅத்
நேற்றைய தொடர்ச்சி......16
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
=====================================
பைஅத் எனும் சொல்லுக்கு ஒப்பந்தம் செய்தல், உறுதி அளித்தல் எனப் பொருள்.
பைஅத் எனும் சொல்லை இஸ்லாமிய மரபில் ஆன்மீகத்திலும் அரசியலிலும் பயன்படுத்துவர்; ஒவ்வொரு இடத்திலும் இதன் பொருள் சிறிதளவு வேறுபடும்.
ஆன்மீக சூஃபி மரபில், ஒரு சிஷியர் தனது ஷைகுவிடம் " என் ஷைகு காட்டும் வழியின் கீழ், குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் என் வாழ்வை அமைத்துக் கொள்வேன்" என்பது பொருள்.
அரசியல் தளத்தில் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், கலீஃபாக்கள் காலத்திலும் அவர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் போது, "நாங்கள் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்; கண்டிப்பாக உங்களுக்குக் கீழ்ப்படிந்து உண்மையாக நடந்து கொள்வோம்" என உறுதிமொழி கூறுவது.
நிகழ்காலத்தில் பைஅத் செய்வது என்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை உயிர்ப்பிப்பதற்காக செய்யும் ஒப்பந்தமாகும்.
இந்த பைஅத் எனும் ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு முரீது தனது கையை ஷைகுவின் கையின் மீது வைக்கும் போது அவன், "தன் உயிரையும், ஆசைகளையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கிறேன்" என்று உறுதி ஏற்கிறான் என்று பொருள்.
பொதுவாகவே தரீக்கா எனும் பாதையில் செல்ல விரும்புவோர் முதலில் பைஅத் செய்ய வேண்டும்.
°•°•°•°•
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எப்பொழுதும் வெள்ளை நிற ஆடைகளையே அணிவார்கள்; தினமும் குளித்துவிட்டு உடை மாற்றுவார்கள்; உடலிலோ உடையிலோ வாடைகள் உண்டாவதை விரும்ப மாட்டார்கள்; வாசனை திரவியங்களை அதிகமாக பூசிக் கொள்வார்கள்.
குறிப்பாக இறைவழிபாடுகளில் ஈடுபடும் போது எப்பொழுதையும் விட அதிகமாகவே வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள்.
அவ்வாறே அன்றாட உணவுகளில் பெரும்பாலும் மாமிசங்களை தவிர்த்தே சாப்பிடுவார்கள். எவருக்காகவும் வளைந்து நெளிந்து போகாமல் நியாயத்தை மட்டுமே பேசுவார்கள்.
ஏழை எளியவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்வார்கள்.
நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்வார்கள்; பயணங்களின் போது தாமே சமைத்து உண்பார்கள்.
இறைவனை அடைய வேண்டும் என விரும்பும் அடியார்கள், இறை கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இறை வணக்கங்களை குறைவின்றி நிறைவாக செய்து வர வேண்டும்; நம்முடைய ஒவ்வொரு அசைவும் அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும்; பெருமைக்காக, பகட்டுக்காக, புகழுக்காக எந்த வழிபாடுகளையும் நாம் செய்யக்கூடாது.
மேலும் இறைவனுக்காக நாம் செய்யத் தொடங்கி விட்டால் இறைவன் தமக்கு எல்லா வகைகளிலும்யும் உதவிகள் செய்வான் எனக் கூறுகிறார்கள்.
Comments
Post a Comment