துறவறத்தின் தெய்வீக ஒளி – இமாம் ஜீலானியின் வாழ்க்கை வழி :
துறவறத்தின் தெய்வீக ஒளி –
====================================
நேற்றைய தொடர்ச்சி.......13
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
=====================================
உலகை வென்ற ஆன்மாவான இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒருபோதும் துறவரத்தை தூக்கிப் பிடித்துப் பேசவே இல்லை; உலக வாழ்வையும் உலகச் செல்வங்களையும் தேவையான அளவிற்கு முறையாக பயன்படுத்தலாம்; வாசனை திரவியங்களை பயன்படுத்துவதில் குற்றமில்லை; உலக இன்பங்களே கதி என இருந்துவிடக் கூடாது.
உலக இன்பங்கள், செல்வங்கள் அனைத்தும் மனிதனுக்கு ஊழியம் செய்யும் அடிமை. மனிதன் அதன் ஊழியத்தைப் பெற்றுக் கொண்டு எஜமானனைப் போல் வாழ வேண்டும்; மாறாக உலக இன்பங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது.
அல்லாஹ்வின் வாசலில் நின்றிருப்பவனுக்கு உலகம் அடிமைப்பட்டு சேவகம் செய்யும்.
உலகத்திடம் தேவையாகி நிற்பவனுக்கு உலகம் இழிவையே வழங்கும்.
ஒருவன் உலகில் அதிகமதிகமாக சம்பாதிப்பதை இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எதிர்க்கவில்லை; ஆனால் அந்த செல்வம் இவனையே சம்பாதித்து விடுவதை (செல்வங்களுக்கு அடிமையாகி விடுதை) எதிர்த்தார்கள்.
ஒரு சில மனிதர்களிடம் உலகமே இருக்கின்றன! ஆனால் அவர்கள் அதை நேசிப்பதில்லை. உலக ஆசைகளை அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் உலகின் வலையில் வீழ்ந்து விடுவதில்லை; உலகம் அவர்களுக்கு பின்னால் ஓடி வருகிறதே தவிர உலகுக்கு பின்னால் அவர்கள் ஓடுவதில்லை.
உலகை இவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர உலகம் இவர்களை பயன்படுத்திக் கொள்ள விடுவதில்லை. இப்படிப்பட்டவர்களின் இதயங்களை இறைவன் செவ்வையாக்கிவிட்டான்.
ஒவ்வொரு மனிதனும் உலக செல்வங்களை சம்பாதித்து எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதயத்தில் மட்டும் வைக்கக்கூடாது.
செல்வம் உனது கையிலோ பையிலோ இருக்கட்டும்!
உன் தேவைக்காக சேமித்து வைப்பது கூட ஆகுமானது!
ஆனால் அதை இதயத்தில் வைத்து விடாதே! அது உன் வாசலைத் தாண்டி வரவிடாதே! வந்தால் உனக்கு மதிப்பில்லை!
ஹலாலான வழிகளில் சம்பாதிப்பதும் அதையே உண்பதும் ஆகச்சிறந்தது. இப்படிப்பட்டவர்களை இறைவன் நேசிக்கிறான். பிறரை நம்பி வாழ்வோர்மீது இறைவன் கோபம் கொள்கிறான்.
தொடரும்........
Comments
Post a Comment