1500 ஆவது மீலாது விழாவா? ஹிஜ்ரி 1447 தானே ஆகிறது?
1500 ஆவது மீலாது விழாவா?
ஹிஜ்ரி 1447 தானே ஆகிறது?
============================
நேற்று பெரிய வடகரை கிராமத்தில் 1500 ஆவது மீலாது சமய நல்லிணக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அப்பொழுது சமூக நீதிப் படைப்பாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் , அரும்பாவூர் இ. தாஹிர் பாட்ஷா அவர்கள் பேசும்போது,
"நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது; அவர்களுடைய வாழ்வியல் முறை அறிஞர்கள் இடையே ஆச்சரிய கண்ணோட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், "1500 ஆவது மீலாது விழா" எனும் சொல்லே தஃவா - இஸ்லாத்தின்பால் அழைக்கும் ஒரு சொல்லாக மாறி இருக்கிறது" என்று சொல்லிவிட்டு தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
எனக்கு அறிமுகமான சகோதர சமயத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, "ஹிஜ்ரி 1447 தானே ஆகிறது; நீங்கள் எப்படி 1500 ஆவது மீலாது விழா" என்று எழுதலாம்? அல்லது தவறாக எழுதி விட்டார்களா?" என்று கேட்டார்.
அதாவது "நபிகள் நாயகம் அவர்கள் பிறந்து 1447 வருடங்கள் தானே ஆகிறது" என்று கேட்டார்.
அதற்கு நான் சொன்னேன், "நபிகள் நாயகம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்து வந்த நாளை தான் இஸ்லாம் "ஹிஜ்ரி வருடம்" என்று கணிக்கிறது.
நபிகள் நாயகம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புலம்பெயர்ந்து வருவதற்கு 53 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து விட்டார்கள்;
எனவே புலம் பெயர்வதற்கு முன்பு வாழ்ந்த 53 வருடங்களையும், ஹிஜ்ரி வருடப்பிறப்பான 1447 வருடத்தையும் சேர்த்துக் கூட்டினால் 1500 வருடங்கள் என வரும்" என்று சொன்னேன்; அவர் அதைப் புரிந்து கொண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தார்" என்று கூறினார்.
மவ்லானா, F. முஹம்மது முனீர் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் உரையாற்றும்போது, "ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும், இமாமும்
மக்தப் மதரஸா - இஸ்லாமிய ஆரம்பப் பாடசாலையை மிக கவனமாகவும், அக்கறையோடும் நடத்தி வர வேண்டும்.
அதன் காரணமாக மட்டுமே எதிர்காலத்தில் இஸ்லாமியர்களை முஸ்லிம்களாகவே தக்க வைத்துக் கொள்ள இயலும்.
இல்லையென்றால் இன்றைய நவீன ஊடகங்களில் சிக்கி, சிதைந்து, சின்னாபின்னமாக ஆகிவிடுவார்கள்.
அதனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொதுவாக ஒரு கிராமத்திற்கும் மிகப்பெரிய சீரழிவு ஏற்படும்" என்று கூறினார்கள்.
வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் இரத்தினம் அவர்கள் உரையாற்றும் பொழுது,
"இந்தியாவில் வாழுகின்ற அனைத்து சமயத்தினரும் சமய நல்லிணக்கத்தோடு தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அப்படி என்றால் முற்கால இந்தியாவில் ஏன் பல்வேறு யுத்தங்கள் நடந்தது?
சேரர்கள், சோழர்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலேயர்கள் ஏன் சண்டை போட்டுக் கொண்டார்கள்" என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம்; அதன் உண்மை தன்மை இதுதான்!
இந்த யுத்தங்கள் சாதிகளை மையமாக வைத்தோ, மதங்களை மையமாக வைத்தோ, கடவுளை முன்னிறுத்தியோ நடைபெறவில்லை" அவரவருடைய நாடு பிடிக்கும் ஆசைகள், மிகப்பெரும் நிலப்பரப்பின் மன்னனாக ஆக வேண்டும் என்ற ஆசை, மிகப்பெரும் செல்வத்துக்கு தான் சொந்தக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசை போன்ற சுயலாபத்திற்காக நடந்த யுத்தங்கள் தானே தவிர மதத்தின் பெயரால் நடந்த யுத்தங்கள் அல்ல!
மன்னர்களுக்கு இடையே நடந்த யுத்தங்களால் தானே தவிர மக்களுக்கு இடையே நடந்த யுத்தங்கள் அல்ல!
இயற்கையாகவே இந்தியர்கள் அனைவரும் ஒரு சமூகமாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள் எனும் கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
மவ்லவீ முஜீபுர் ரஹ்மான் ரப்பானி ஹள்ரத் அவர்கள் உரையாற்றும்போது, "1500 ஆண்டுகளையும் கடந்து நபிகள் நாயகம் அவர்களின் கருத்தை பின்பற்றி வாழும் மக்கள் உலகத்தில் நானூறு கோடிக்கும் அதிகமானவர்கள் வாழ்கிறார்கள் என்றால் அவர்களின் கருத்தின் ஆழத்தையும், அதில் உள்ள உண்மை தன்மைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று மீலாது சிறப்புரை ஆற்றினார்கள்.
ஓய்வு பெற்ற நல்லாசிரியர் அக்பர் கான் அவர்கள் "முஸ்லிம்கள் வாழக்கூடிய ஒவ்வொரு கிராமத்திலும் மிலாது நபி விழா நடத்தப்பட வேண்டும்; அதன் மூலமாக முஸ்லிம்களிடையே மேலும் இஸ்லாத்தை கொண்டு சேர்க்க இது வழி வகுக்கும்.
இஸ்லாத்தின் மீது முஸ்லிம்களுக்கு தீவிர நல்லெண்ணத்தையும், நன்னம்பிக்கையையும் உண்டாக்க முடியும்" என்று கூறினார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு பேச்சாளரும் வைரத்தை விடவும் விலை உயர்ந்த கருத்துகளை வாரி இரைத்தார்கள்.
உரைகளைக் கேட்க பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் விருந்து உபச்சாரத்தில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைத்து பேச்சாளர்களுக்கும், சமூக பிரமுகர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும் பிரார்த்தனையையும் எங்கள் ஊர் ஜமாஅத்தினர் மற்றும் நாஸிருல் மில்லத் நற்பணி மன்ற இளைஞர்கள் அனைவர் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
BMK
Comments
Post a Comment