பணிவு தரும் உயர்வு

பணிவு தரும் உயர்வு
======================நேற்றைய தொடர்ச்சி......31

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
==============================

அபூ ஸய்யித் அப்துல்லாஹ் பின் அபீ இஸ்ரூன் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; 

கல்வி கற்பதற்காக நான் பக்தாத் நகரம் சென்று இருந்தேன்; அங்குள்ள நிஜாமியா பல்கலைக்கழகத்தில் இப்னு ஸக்கா என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பக்தாத் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இறைநேசர்களையும் பெரும் ஆலிம்களையும் சந்திப்பது வழக்கம். 

அந்த வகையில் பக்தாதில் ஒரு இறை நேசர் இருந்தார் அவரை மக்கள்  'கௌஸ்' என அழைத்தனர். 

அதாவது கௌஸ் -  விரும்பினால் மக்கள் முன் தோன்றி மக்களோடு பேசுவார்; இல்லையென்றால் அவர் வெளியில் வரவே மாட்டார்.

இந்நிலையில் நானும் இப்னு ஸக்காவும் இளைஞரான அப்துல் காதிர் ஜீலானி ஆகிய மூவரும் சென்றோம்.

கௌஸ் அவர்கள் நாம் மனதில் நினைப்பதையும் சொல்லும் ஆற்றல் பெற்றவராக இருக்கிறார் என்றும், நாம் துஆ செய்ய சொல்லி அவர் துஆ செய்தால் நமது தேவைகள் நிறைவேறும் என்றும் நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம்.

அவர்களை சந்திப்பதற்காக நாங்கள் சென்று கொண்டிருந்த போது இப்னு ஸக்கா " கௌஸ் அவர்களால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை நான் கேட்பேன்" என்று கூறினார். 

"எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை குறித்து நான் அவர்களிடம் கேட்பேன்; அவர் சொல்லுகிற பதில் எனக்கு போதுமானது" என்று நான் கூறினேன்.

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள், "கௌஸ் அவர்களிடம் கேள்வி கேட்பதை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்; நான் அவர் முன்பு அமர்ந்து அவருடைய அருளை எதிர்பார்த்தவனாக இருப்பேன்" என்று கூறினார்.

இவ்வாறு பேசிக்கொண்டு அவர்கள் வசித்த வீட்டருகே சென்றோம் ; அங்கு மக்கள் பெரும் திரளாக இருந்தார்கள்; அவர்களை உடனே எங்களால் பார்க்க இயலவில்லை. 

சிறிது நேரத்திற்கு பிறகு தமது வீட்டை விட்டு வெளியே வந்து இப்னு ஸக்காவை கோபத்துடன் பார்த்தார்கள்.

"என்ன இப்னு ஸக்கா!
நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் நான் தடுமாறுவேன் என நினைத்தீர்களா? நீங்கள் கேட்க நினைத்த கேள்வி இதுதான்; அதற்கான பதிலை கேட்டுக்கொள்" என அதற்கான பதிலை சொல்லி முடித்தார்கள். 

பின்னர், "உனக்குள் இறைமறுப்பின் நெருப்பு கொழுந்து விட்டு எரிவதை காண்கிறேன்" என்றும் கூறினார்கள். 

பின்னர் கௌஸ் அவர்கள் என்னை நோக்கி, "அப்துல்லாஹ்! என்னிடம் நீங்கள் கேட்க நினைத்த கேள்வி இது; அதற்கான பதில் இதுதான்" என சொல்லி முடித்தார்கள். 

"பெரியவர்களிடம்  கேள்வி கேட்கக்கூடாது என்கிற நடைமுறை கூட தெரியாத உமக்கு அல்லாஹ் இவ்வுலகத்தில் அதிகமான செல்வத்தை  கொடுப்பான்; அது உனது காது சோனைகள் வரை பொங்கி வழிவதை காண்கிறேன்" என்று கூறினார்கள்.

பின்னர் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை தன் அருகில் அழைத்து, "அப்துல் காதிரே! உமது  கனிவான நடைமுறையினால் அல்லாஹ்வையும் ரசூலையும் சந்தோசத்தில் ஆழ்த்தி விட்டீர்; 

பக்தாதில் உமது ஆசனம் (மரியாதை) வானளவு உயர்ந்திருப்பதை நான் பார்க்கிறேன்; உமது காலத்தில் உம்மை கண்ணியப்படுத்தும் இறைநேசர்கள் உமக்கு முன்னால் தலையை சாய்ப்பதை நான் காண்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

மூன்று நபர்களுக்கும் மூன்று முன்னறிவிப்புகளை சொல்லி சென்றார்கள்; அது நடந்ததா? நாளை காண்போம்.....

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்